இராகவன் கருப்பையா – தமிழ்ப்பள்ளிகளை காப்போம், தமிழ்ப்பள்ளி நம் அனைவரின் தேர்வாகவேண்டும், தமிழ்ப்பள்ளிகளே தமிழரை அடையாளம் காட்டும், தமிழ்ப் பள்ளிகள் தமிழர்களின் தன்மான ஆலயங்கள், தமிழ்ப் பள்ளி தமிழர் பண்பாட்டின் மேன்மைமிகு பேரொளி, தமிழ்ப்பள்ளியின் மாண்பைக் காப்போம், தாய் மொழி எங்கள் மொழி – தமிழ்ப் பள்ளி எங்கள் வழி, இவ்வாறு பலதரப்பட்ட வாசகங்களைக் கொண்டு அண்மைய காலமாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விசயம்தான்.
நிறையப் பள்ளிகளில் புதிய பதிவுகள் நலிவடைந்து வருவதால் இவ்வாறானப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி வாரியத்தினர் மற்றும் அரசு சாரா அமைப்புகள் போன்ற இயக்கங்களோடு, மொழிப் பற்றுடைய தனிப்பட்டவர்களும் கூட இத்தகையப் பிரச்சாரங்களை தீவீரப்படுத்தியுள்ளனர்.
அதிகமானப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் குறைந்து வருவதால் வெகு விரைவில் அவை மூடப்படும் அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளதை நாம் மறுப்பதற்கில்லை.
எனவே நம் நாட்டில் காலப்போக்கில் தமிழ் அழிந்திடாமல் இருப்பதற்கு இவர்கள் ஆற்றும் பங்கு உண்மையிலேயே அளப்பரியது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஆங்காங்கே ஒரு சிலப் பள்ளிகளில் அவற்றின் தலைமையாசிரியர்களே இது போன்ற முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல்களும் நமது காதுகளில் விழத்தான் செய்கிறது.
குறிப்பாக பதவி ஓய்வு பெறும் தறுவாயில் இருக்கும் தலைமையாசிரியர்களும் வேரொரு பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லவிருப்பவர்களும் தங்களுடையப் பள்ளியின் வளர்ச்சியில் ஏனோதானோ எனும் போக்கைக் கொண்டு செயல்படுவதாகத் தெரிகிறது.
ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு சில தலைமையாசிரியர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி கீழறுப்பு வேலைகளை மேற்கொள்கின்றனர் என குற்றச்சாட்டுகள் கசிந்துள்ளன.
உதாரணத்திற்கு தலைநகர் அருகே கோம்பாக் மாவட்டத்தில் உள்ள 9 தமிழ்ப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் குறைந்த பட்சம் 30 விழுக்காட்டு மாணவர்களுக்கு இன்னமும் முறையாக எழுதப்படிக்கத் தெரியாது என்று நம்பப்படுகிறது.
இம்மாதிரி பின்தங்கியுள்ள மாணவர்களின் பட்டியலை அடையாளம் காட்டுமாறு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ‘அரசாங்க ரகசியம்’ என காரணம் காட்டி தலைமையாசிரியர் நிராகரித்துவிட்டார்.
அவர்களுக்கென பிரத்தியேகமாக பகுதி நேர வகுப்புகளை இலவசமாக நடத்தத் தாங்கள் தயாராய் இருப்பதாக தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் அரசதந்திரிகளையும் கூட உறுப்பினர்களாகக் கொண்ட அச்சங்கம் குறிப்பிட்டது.
ஆனால் தலைமையாசிரியரின் ஒத்துழையாமையினால் தங்களுடையக் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் இருப்பதாக சங்க உறுப்பினர்கள் வேதனையடைகின்றனர்.
தங்களுடைய சொந்த செலவில் பள்ளியை மறு சீரமைப்பு செய்து காற்றாடி இல்லாத அறைகளுக்கு ‘ஏர் கண்டிஷன்’ சாதனங்களைக் கூட பொருத்துவதற்கு தாங்கள் தயாராய் இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
இதே போல கிளேங் வட்டாரத்தில் தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளியில் அண்மையில் தலைமையாசிரியருக்கு எதிராக பெற்றோர்கள் மறியல் செய்த செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டன.
மாணவர்களின் வளர்ச்சிக்கு எதிர்மறையானக் காரியங்களை அவர் செய்வதாகக் குற்றஞ்சாட்டி அவரை வேரொருப் பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையை அந்தப் பெற்றோர்கள் முன் வைத்தனர்.
இன்னும் சில தலைமையாசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளை புறக்கணித்து தங்களுடையப் பிள்ளைகளை தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புவதும் நமக்குத் தெரியாமல் இல்லை.
நாடளாவிய நிலையில் தங்களுடையத் தார்மீகப் பொறுப்பை உதாசீனப்படுத்தும் இது போன்ற தலைமையாசிரியர்கள் சிலர் ஆங்காங்கே இருக்கிறார்கள் எனும் போதிலும் மற்ற பல தலைமையாசிரியர்கள் வைரக்கற்களாக மின்னுவதையும் நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.
உதாரணத்திற்கு குவாந்தான் நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் உதயசூரியன், அரசாங்கத்தினால் உதாசீனப்படுத்தப்பட்டு, முறையான வகுப்பறைகள் இல்லாத நிலையில் பல்லாண்டு காலமாக ‘கொண்டெய்னர்’ எனப்படும் கொள்கலன்களில் வகுப்புகளை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.
பினேங் மாநிலத்தில் பாயான் பாரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் சங்கா சின்னையா, தமது சுய முயற்சியில் பலவிதமான யுக்திகளைக் கையாண்டு மாணவர்களின் நலனைப் பேணுகிறார்.
அதே போல சிலாங்கூர் மாநிலத்தில் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் குமார், தமது பள்ளியில் குருகுலம் எனும் நல்ல திட்டமொன்றைத் தொடக்கி வசதி குறைந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்பட பல்வேறுத் திட்டங்களை அமலாக்கம் செய்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த 3 தலைமையாசிரியர்களைப் போல நாடு தழுவிய நிலையில் நிறைய பேர் உள்ளனர்.
தமிழ் மொழிக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற தலைமையாசிரியர்கள் எல்லாருமே போற்றப்பட வேண்டியவர்கள், மகுடம் சூட்டப்பட வேண்டியவர்கள்.
அதே வேளையில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் மாணவர் மேம்பாட்டுக்கும் உதவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவமாக இருக்கக் கூடாது.