சிரமப்படுவோருக்கு உதவுவதில் இந்து ஆலயங்களின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் அன்றாடத் தொற்று நம் நாட்டில் தற்போது 10,000ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வறிய மக்களின் பரிதவிப்பு மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

‘கித்தா ஜாகா கித்தா’ (ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்) எனும் அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் பசி பட்டினியால் அவதிப்படுவோருக்கு அரசு சாரா இயக்கங்களும் வழிபாட்டுத்தலங்களும் தனிப்பட்டவர்களும் உதவி வருகின்றனர்.

உதவிப் பொருட்களின் பொட்டலங்கள் மீது தங்களுடைய முகங்களை அச்சிட்டு மலிவு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து தக்க சமயத்தில் உதவிகள் வந்து சேராத நிலையில், அவதியுறும் மக்கள் தங்களுடைய இல்லங்களுக்கு வெளியே வெள்ளைக் கொடியேற்றும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

நிறைய பேர் வேலையிழந்து, சேமிப்புகள் கரைந்து, வீட்டு வாடகைக் கட்ட முடியாமலும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவுக் கூட வழங்க இயலாத அளவுக்கும் கோறனி நச்சிலின் கோறத் தாண்டவம் இப்போது உச்சக் கட்டத்தில் உள்ளது.

ஒரு சில இடங்களில் உணவுக்காகவும் அரிசி, எண்ணை, முட்டை, போன்ற உணவுப் பொருள்களுக்காகவும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு அல்லோகலப்படுவதைப் பார்த்தால் இந்தப் பரிதாபம் நம் நாட்டில்தான் நடக்கிறதா என அதிசயவிக்க தோன்றுகிறது.

இருப்பினும் இத்தகைய சூழலிலும் கூட சுயநல அரசியலுக்கு முன்னுரிமை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை இனிமேலும் நம்பிப் பயனில்லை எனும் நிலையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் களமிறங்கி வறிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், சீக்கிய குர்டுவாராக்கள் முதலிய வழிபாட்டுத்தலங்களின் பங்கு அளப்பரியது.

இருந்த போதிலும் இந்த விசயத்தில் அதிக அளவிலான இந்துக் கோயில்களின் மெத்தனப் போக்கினால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

நகர்ப்புறங்களுக்கு வெளியே ஆங்காங்கே சில கோயில்களின் நிர்வாகஸ்தர்கள் முடிந்த அளவுக்கு தங்களால் இயன்ற உதவிகளை ஆலய வளாகத்தில் செய்து வருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மரத்தடியில் அமைந்துள்ள சிறு கோயில்கள் கூட உண்டியலில் சேர்ந்துள்ள சொற்பத் தொகையைக் கொண்டு உதவிவரும் வேளையில் நிறையப் பணத்தை பொருளகங்களில் சேர்த்து வைத்திருக்கும் பெரிய ஆலயங்களின் போக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

குறிப்பாக மில்லியன் கணக்கில் சொத்துகளைக் குவித்து வைத்திருக்கும்  தேவஸ்தானத்தின் பங்கு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இவ்விவகாரத்தில் அந்தக் கோயிலின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாகத் தெரியாத போதிலும் அதன் நிர்வாகத்தில் உள்ள பணத்தில் ஒரு சிறியத் தொகையை ஒதுக்கினாலே ஆயிரக்கணக்கானோருக்கு அன்றாடம் உணவோ உணவுப் பொட்டலங்களோ வழங்க முடியும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் மற்றும் பத்துமலை, ஆகிய 3 இடங்களிலும் எண்ணிலடங்கா பி40 தரப்பினருக்கு உதவிகளை வழங்கத்தக்க வசதிகளை தேவஸ்தானம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அளவுக்கு அதிமான செலவில் பெருத்த ஆரவாரத்துடன் ஆடம்பரமான வகையில் கும்பாபிஷேகங்களையும் திருவிழாக்களையும் செய்வதை விடுத்து பரிதவித்து நிற்கும் மக்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுப்பதே தெய்வத்திற்கு ஆற்றும் பணி என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

மிகச் சிறிய சாலை முச்சந்தி கோயிலாக இருந்தாலும் சரி பணம் படைத்த செல்வந்தர்களின் ஆடம்பர ஆலயமாக இருந்தாலும் சரி, தங்களுடைய சக்திக்கேற்ப இந்த இக்கட்டானத் தருணத்தில் குறைந்த பட்சம் 5 பேருக்கு உணவளித்தாலே அது கோடி புண்ணியம்தான்.

முடிந்தவரை எல்லாக் கோயில்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும்.

வரலாறுக் காணாத அளவுக்கு மக்கள் தற்போது அவதிப்படுபதை நம்மால் காணமுடிகிறது. எனவே ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதற்கு ஏற்ப அனைத்து ஆலயங்களும் வழிபாட்டுக்கு அப்பாற்பட்டு சமூக சேவைகள், குறிப்பாக இது போன்ற சமயங்களில் செய்வதையும் ஒரு கடப்பாடாகக் கொண்டிருக்க வேண்டும்.

இன ரீதியாகவும் மத வாரியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அசிங்கத்திற்கு மத்தியில் பல்லின வழிபாட்டுத்தலங்கள் வேறுபாடுகளைக் களைந்து மனிதாபிமானத்தை மட்டுமே முன்னிறுத்தி எல்லா இனத்தவருக்கும் சரிசமமாக உதவிக் கரம் நீட்டுவது மகிழ்ச்சியான ஒரு விசயம்.

எனவே வசதி படைத்த நமது ஆலயங்கள் இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.