இராகவன் கருப்பையா- இரண்டொரு வாரங்களுக்கு முன் முடுக்கி விடப்பட்ட வெள்ளைக்கொடி இயக்கம் தற்போது நாடு முழுமைக்கும் பரவி வறுமையில் வாடும் பி40 தரப்பினருக்கு ஒரு பயனாக அமைந்து வருகிறது.
நிக் ஃபைஸா எனும் ஒரு தொழில் முனைவர் தனது முகநூலில் முதன் முறையாக இந்த யோசனையை பதிவு செய்தார்.
அவ்வியக்கம் இப்போது பரவி துயரில் பரிதவிப்பவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அன்றாடப் பிழைப்புக்கு வேறு வழியே இல்லாத சூழலில்தான் அவதியுறும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு முன் வெள்ளைக் கொடிகளை ஏந்தி உதவி கோறுகின்றனர். யாரும் இதனை விரும்பியோ திட்டமிட்டோ செய்வதில்லை என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கோறனி நச்சிலின் தாக்கத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் மக்களுக்குத் தேவைப்படும் அவசர உதவித் திட்டங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில் இந்த வெள்ளைக் கொடி இயக்கம்தான் பாலைவனத்தில் நீரைப் போல உள்ளது பலருக்கு.
இந்நிலைமை அரசாங்கத்திற்கு ஓரளவு அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுதான் என்ற போதிலும் ‘நன்மை நடந்தால் சரி’ எனும் நிலைப்பாட்டை பெரும்பாலான அமைச்சர்கள் கொண்டுள்ளதைப் போல் தெரிகிறது.
ஆனால் பாஸ் கட்சியினர் மட்டும் இத்த இயக்கத்தை கடுமையாக சாடியதைத் தொடர்ந்து கண்டனத்திற்குள்ளானார்கள்.
வெள்ளைக் கொடியெல்லாம் வேண்டாம். அதெல்லாம் அவசியமற்ற ஒன்று என அவர்கள் கிண்டல் செய்தது அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமின்றி பல அறிஞர்களைக் கூட சினமடையச் செய்துள்ளது.
வெள்ளைக் கொடியை ஏந்துவதை விட இரு கைகளையும் கடவுளிடம் ஏந்துங்கள் என அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் அப்டு கூறியது ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பைத் துண்டிவிட்டது.
கிளந்தானின் பாச்சொக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையில் அம்மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்த, மக்களால் அதிகம் விரும்பப்பட்டத் தலைவரான நிக் அஸிஸின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலத் தொழில் அமைச்சரான பாஸ் கட்சியின் கைருடினும் கூட வெள்ளக் கொடி இயக்கத்திற்கு எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டார்.
கெடா மந்திரி பெசார் சனுசி வழக்கம் போல தனக்கே உரிய பாணியில் இந்த விசயத்தில் முரட்டுத்தனமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
வெள்ளைக் கொடி ஏந்துபவர்கள் யாருக்கும் தாங்கள் உதவப் போவதில்லை என்றும் தேவைப்படுவோர் தங்களுடைய சேவை மையங்களுக்கு வர வேண்டும் என்றும் சற்று ஆணவமாக அவர் பேசியது மக்களுக்குப் பிடிக்கவில்லை.
மக்களின் துன்பத்தை சிறுமைப்படுத்தும் இவர்கள் பொதுவான கண்ணியம் இல்லாதவர்கள் என பொது மக்கள் மட்டுமின்றி சில அரசியல் ஆய்வாளர்களும் கடிந்து கொண்டார்கள்.
ஆக 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இடம்பெற எதேச்சையாக வாய்ப்புக் கிடைத்துள்ள பாஸ் கட்சியினரின் ஆணவப் போக்கு இத்தருணத்தில் வெளிப்படும் அதே வேளை வெள்ளைக் கொடி இயக்கத்தின் வழி பயனடையும் மக்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.