மௌனராகத்திலும், களைக்கட்டிய ஒலிம்பிக் போட்டிகள்

இராகவன் கருப்பையா – 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெறும்  எனக் கடந்த 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது ஜப்பான் முழுவதும் விழாக் கோலம் பூண்டது.

ஆனால் அந்தப் போட்டிகள் அவற்றுக்கே உரியக் கோலாகலமும் ஆரவாரமும் இல்லாத ஒன்றாக நடைபெறும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த ஜப்பானியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் யாருமே அந்த சமயத்தில் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பானியத் தலைநகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அனைத்துலக ஒலிம்பிக் குழு அர்ஜெண்டினாவில் நடைபெற்ற தேர்வின் முடிவில் அறிவித்த மறுகணமே கொஞ்சம் சலசலப்பும் கூடவேத் தொடர்ந்தது.

அதாவது ஜப்பானின் ஃபூக்குஷிமா அணுமின் நிலையத்தில் கதிரியக்க நீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு டோக்கியோ பாதுகாப்பாக இருக்குமா எனப் பல நாடுகள் அச்சமயத்தில் ஐயப்பாடுகளை வெளிப்படுத்தின.

கடந்த 2011ஆம் ஆண்டில் அங்கு நிகழ்ந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகளில் அந்த அணுமின் நிலையம் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவாதமளித்ததும் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் 7 ஆண்டுகளாக மும்முரமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் நொடிப் பொழுதில் புரட்டிப் போட்டது கோவிட்-19 எனும் கோறனி நச்சில்.

கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்த அப்போட்டிகள் இவ்வாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது ஒட்டு மொத்த ஜப்பானியர்கள் மட்டுமின்றி போட்டிகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த  இதர நாட்டவருக்கும் சற்று ஏமாற்றமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே கடந்த 1964ஆம் ஆண்டில் இப்போட்டிகளை ஒரு முறை ஏற்று நடத்தியுள்ள டோக்கியோவில்  அமைந்திருக்கும் பிரதான அரங்கில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழா வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் களையிழந்தே காணப்பட்டது.

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாமல் அரங்கேறிய அந்தத் தொடக்க விழாவை ஏற்பாட்டாளர்களும் ஆரவாரமின்றியே நடத்தி முடித்தனர்.

உலகம் முழுவதிலுமிருந்து டோக்கியோ வந்தடைந்த போட்டியாளர்களில் பலருக்கு மட்டுமின்றி அந்நகரவாசிகளுக்கும் திடீரென நோய்த்தொற்று அதிகரித்ததால் 21ஆம் தேதி வரையில் கூட போட்டிகள் நடைபெறுவது உறுதியில்லாமலிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாதிப் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அரங்குகளிலுமே  கிட்டதட்ட நிசப்தமான சூழலில்தான் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

போட்டியாளர்களுக்கு கைத்தட்டி உற்சாகமூட்ட அரங்குகளில் பார்வையாளர்கள் இல்லை.  எல்லாருமே தங்களுடைய இல்லங்களில் இருந்தவாறே கைதட்டுகின்றனர்.

ஏறத்தாழ எல்லா அரங்குகளிலும் உள்ள இருக்கைகள் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பதைப் போல தோற்றமளிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து உற்சாகமூட்டும் பார்வையாளர்களைக் காணாத நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய முழுத் திறனையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்படும் போதும் அதே நிலைதான்.

தட்டுகளில் கொண்டுவரப்படும் பதக்கங்களை வெற்றியாளர்கள் தாங்களாக எடுத்து சுயமாகவே கழுத்தில் அணிவித்துக் கொள்ள வேண்டிய நிலையும் சற்று பரிதாபமாகத்தான் உள்ளது.  கைதட்டி வாழ்த்த ஆளில்லை. தொடர்ந்து கொண்டுவரப்படும் மலர்க் கொத்துகளையும் தட்டுகளிலிருந்து அவர்கள் சொந்தமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

போட்டிகளின் முடிவில் பரஸ்பரத்தை பறைசாற்றும் கைக் குலுக்கல்களுக்குக் கூட இம்முறை வழியில்லாமல் போய்விட்டது.

நேப்பால், இந்தியா, இலங்கை போன்ற கிழக்காசிய நாடுகள் மற்றும் கம்போடியா, மியன்மார், தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளின் போட்டியாளர்கள் தங்களுடைய பாரம்பரியத்தின் படி இருகரம் கூப்பி அன்பு பரிமாறிக் கொள்கின்றனர்.

டென்மார்க், கியூபா, இந்தோனேசியா மற்றும் தைவான் முதலிய நாடுகளை சேர்ந்த சில போட்டியாளர்களும் இரு கரம் கூப்பி அன்பைப் பறைசாற்றுவது சற்று வியப்பாகத்தான் உள்ளது.

இதர எல்லா போட்டியாளர்களும் தங்களுடைய கை விரல்களை மடக்கி ஒருவருக்கொருவர் லேசாக முட்டிக் கொள்வது வேடிக்கைதான்.

மனித உயிரை பறிக்கும் கோவிட்-19 அச்சுறுதலுக்கு அப்பால் ஒன்று திரண்ட பல்லின போட்டியாளர்களின் பங்கு அளப்பரியது.

ஆக எதிர்வரும் 8ஆம் தேதியன்று நிறைவுபெறும்  இந்த ஒலிம்பிக் போட்டிகள் வரலாறு காணாத மௌனத்திலும் பலத்த கரவொலியுடன் சாதனை படைத்த தொடர் எனும் குறிப்போடு மனித ஆற்றலின் ஆளுமையை சரித்திரத்தில் பதிவு செய்யும் என்பது உறுதி.