கொரோனா சவாலுக்கிடையே ஜப்பானின் ஒலிம்பிக்கும் ஒரு  சாதனையாகும்

இராகவன் கருப்பையா –சுயக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கோறனி நச்சிலைக் கூடத் தூர நிறுத்தலாம் என நிரூபித்துள்ளார்கள் ஜப்பானியர்கள்.

‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதற்கு ஏற்ப ‘கோவிட்-19’ எனும் கொடிய அரக்கனை இரண்டரை வாரங்களுக்குக் காலுக்கடியில் அடக்கி 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்த அவர்களுடைய ஆற்றலை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த இப்போட்டிகள் நோய்த் தொற்றின் காரணமாகப் பாதுகாப்பு கருதி இவ்வாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது நாம் அறிந்த ஒன்றுதான்.

இருந்த போதிலும் ஒரு ஆண்டைக் கடந்தும் நோயின் தாக்கம் சற்றும் குறையாமல் பெரும் சவாலாகவே தலைதூக்கி நின்றதால் அதிக அளவிலான ஜப்பானியர்கள் தங்களுடைய நாட்டில் அப்போட்டிகள் நடத்தப்படுவதை விரும்பவில்லை.

மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லையென்றால் ஒட்டு மொத்த ஒலிம்பிக் போட்டிகளும் ரத்து செய்யப்படக் கூடும் எனப் போட்டிகள் தொடங்க 3 நாள்கள் இருந்த போது கூட அதன் ஏற்பாட்டு குழுத் தலைவர் அறிவித்தார்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தொடங்கிய அப்போட்டிகளை 17 நாள்களுக்குக் கோறனி நச்சில் தொடர்பான எவ்வித அசம்பாவிதமுமின்றி அரங்கேற்றி வெற்றிக் கொடி நாட்டிய ஜப்பானியர்களை உலக மக்கள் பாராட்டத் தவறவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாகச் சுற்றுப் பயணிகளோ பார்வையாளர் இல்லையென்ற போதிலும் தோக்கியோவில் முகாமிட்ட சுமார் 80,000 பேருக்கு முழுப் பாதுகாப்பு அளித்து உபசரணை செய்தது ஏற்பாட்டு குழு.

மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த இவர்களில் 11,000 போட்டியாளர்கள் உள்பட அனைத்துலகப் பத்திரிகையாளர்களும் உள்நாட்டு தன்னார்வலர்களும் ஏற்பாட்டு குழுவினரும் அடங்குவர்.

மாறுபட்ட கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கானவர்களை ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உள்படுத்தி நிர்வகிப்பது சாதாரணமான விசயமில்லை.

போட்டிகளில் பங்கேற்கும் போது, பயிற்சிகளின் போது, உணவு உட்கொள்ளும் போது மற்றும் உறங்கும் வேளைகளைத் தவிர்த்து மற்ற எல்லாச் சமயங்களிலும் அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.

பிரமுகர்களுக்கு ஒர் சட்டம் மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாட்டிற்கு எல்லாம் அங்கு இடமில்லை.

ஒழுக்கத்திற்கும் கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ஜப்பானியர்களுக்கு இத்தகைய விதிமுறைகளைத் துல்லியமாகக் கடைபிடிப்பது பெரிய விசயமில்லை.

அந்நாட்டில் அமைச்சராக இருந்தாலும் வேறு எந்தப் பிரமுகராக இருந்தாலும் விதிமுறைகளை மீறுபவர் அதற்கு முழுப் பொறுப்பேற்று உடனே ராஜினாமா  செய்வது வழக்கம். ஒன்றும் நடக்காததைப் போலச் சுற்றித் திரியமாட்டார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு இத்தகைய ஒழுக்க நெறிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

விருந்தினர்களாக வந்துள்ள வெளி நாட்டவர் மட்டுமின்றி ரௌள்நாட்டவர்களையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது தங்களுடைய கடப்பாடு என்பதனை ஏற்பாட்டாளர்கள் நன்கு உணர்ந்து செயல்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

விளையாட்டாளர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தங்களுடைய கிராம வளாகத்தை விட்டு வெளியேற அனுமதியில்லை.

போட்டிகள் நிறைவடைந்து 4 நாள்களுக்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

மொத்தம் 33 போட்டிகளை 43 வெவ்வேறு அரங்குகளில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகள்தான் வழி கொணர்ந்துள்ளன.

எதிர்வரும் 2032ஆம் ஆண்டில் பிரிஸ்பேன் நகரில் இப்போட்டிகளை ஏற்று நடத்தத் தயாராகிவரும் தங்களுக்கு ஜப்பானிய ஏற்பாட்டாளர்கள் நல்லதொரு வழித்தடத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் என ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் வெகுவாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டில் பாரிஸ் நகரிலும் 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸிலும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.