தமிழ் மொழி செய்த பாவம்தான் என்ன? – இராகவன் கருப்பையா

எனக்கு ஆங்கிலம் பேச வராது என எந்த அமெரிக்கரோ பிரிட்டன்வாசியோ சொல்லியிருக்க மாட்டார்.

எனக்குச் சீன மொழியில் பேசத் தெரியாது என எந்தச் சீனரும் சொல்லியதாகத் தெரியாது.

எனக்குக் கொஞ்சம் கொஞ்சம்தான் மலாய் தெரியும் என எந்த ஒரு மலாய்க்காரரும் சொல்லியதாக நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் நம் இனத்தவர் மட்டும் ஏன் இப்படி ஒரு மாய வலையில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்?

இயல்பாகவே பேசத் தெரியாதவர்கள் ஒரு புறமிருக்க, நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தும் பொது இடங்களில் தமிழில் பேச வெட்கப்படுவோர் நம்மில் நிறையப் பேர் உள்ளனர் என்பது மிகவும் வருத்தமான விசயம்.

குறைந்தது 4,500 ஆண்டுகாலம் பழமையான, தொன்மை மிக்க நம் இனிய தமிழ் மொழி அப்படி என்னதான் பாவம் செய்தது என்று தெரியவில்லை.

நம் நாட்டில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகள் மொழி வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் ஆற்றும் சேவை அளப்பரியது என்ற போதிலும் ஒரு வானொலி நிலையமும் சில அரசியல்வாதிகளும் அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. ‘தமிழை வளர்ப்பது எங்கள் வேலையில்லை’ என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

அரசாங்க வானொலியான மின்னல் எஃப். எம்.மின் அறிவிப்பாளர்கள் சுவை குன்றாமல் பிழையின்றித் தமிழை உச்சரிக்கும் அதே வேளை தனியார் வானொலியான டி.எச்.ஆர். ராகாவாவில் தமிழ் படும்பாடு என்னவென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

அதே போல நமது முன்னணி அரசியல்வாதிகளின் போக்கும் தமிழைப் பொருத்த வரையில் ஏனோதானோயென்றே உள்ளது.

சிறப்பாகத் தமிழ் பேசக் கூடிய ஒரு அரசியல்வாதி நாட்டின் தமிழ் தினசரியொன்றைக்  குறிப்பிட்டு, ‘இந்தப் பத்திரிகையைப் படிப்பவர்கள் முட்டாள்கள்’ என்று அண்மையில் சாடியது விமர்சனத்திற்குரியது. இருப்பினும், வரம்பை மீறும் பத்திரிக்கைகள் விதைப்பதைத்தான் அறுவடை செய்ய நேரிடும்.

தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கும் மொழிப் பற்றாளர்களைப் பாராட்ட வேண்டும். அதே வேளையில், பத்திரிக்கை தர்மத்திற்கு அப்பாற்பட்ட பத்திரிக்கைகள் மக்களைத் திசை திருப்பக் கட்சி அரசியல் நாடகங்களையும், அதற்கேற்ற அவதூறு செய்திகளையும் அரங்கேற்றம் செய்யும் போது அவை நல்ல வாசகர்களை இழந்து விடுகிறது.

நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடவேண்டும் எனச் சில இனவெறி ஜந்துகள் அவ்வப்போது குரைத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்குள்ளேயே இது போன்ற வீண் விதண்டாவாதம் தேவையற்ற ஒன்று.

தமிழ் மொழியை வளர்க்க உதவாவிட்டாலும் பரவாயில்லை, அதனை அழிக்க வகை செய்யும் எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.

தமிழ் நாட்டிற்கு வெளியே மலேசியாவில்தான் தமிழ் மொழியின் வளர்ச்சியும் அதன் பயன்பாடும் பெருமையாகவும் பாராட்டத்தக்க வகையிலும் உள்ளது எனக் கடந்த காலங்களில் இங்கு வருகை மேற்கொண்ட தமிழக அறிஞர்கள் பல வேளைகளில் புகழ் மாலை சூட்டியுள்ளார்கள்.

அக்கருத்துக்குச் சான்றாக நாட்டிலுள்ள 523 தமிழ்ப் பள்ளிகள்தான் தமிழ் மொழிக்கு உரமூட்டி அதன் வளர்ச்சிக்கு அடித்தளமிடுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் அந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களில் பலருடைய பிள்ளைகள் தேசிய மொழிப் பள்ளிகளில் பயில்வதுதான் விந்தையாக உள்ளது. இந்நிலைமை கண்டிப்பாக மாறவேண்டும்.

ஆங்கிலமும் மலாய் மொழியும் தொடர்புக்கும் தொழிலுக்கும் மட்டுமே தவிர அவை நமது தாய் மொழியல்ல என்பதை எல்லாக் காலங்களிலும் அனைவரும் உணரவேண்டும்.

‘தமிழ் பேசா நா எதற்கு, அதனை அறுத்து எறி’ எனக் கவிஞர் ஒருவர் பாடியுள்ளார். அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் தாய் மொழியைப் பயில்வதற்கும் பேசுவதற்கும் ஒருபோதும் அச்சப்படவோ அசிங்கப்படவோ அவமானப்படவோ கூடாது.

நாமே நமது மொழியைப் பேசவில்லையென்றால் வேற்றினத்தவர்களா பேசப்போகிறார்கள்?