கடந்த 2021 செப்டம்பர் 26-ம் நாள், மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில், தமிழ்ச்சமய மாநாடு முகநூல் மற்றும் வலையொளி இயங்கலை வழியாக சுமார் 2000-திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பின்தொடர மிகச் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது.
தமிழால், தமிழரால் மெய்யியல் கண்டு உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து நமது மூதாதையர்களால் பகுத்து வகுத்து உருவாக்கி வழிகாட்டிய, தமிழ்ச்சமயத்தை மீட்டேடுக்கும் வண்ணமாக உலகளாவியத் தமிழ்ச்சமயம் எனும் கருப்பொருளில் மாநாடு நகர்ந்தது.
“தமிழ்ச்சமயம் ஏற்போம்… தமிழ்ச்சமயம் காப்போம்…” என்ற முழக்கத்துடன், தமிழருக்கே உரிய அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த, நமது அருளாளர்களால் காத்தும் பற்றியும் வழி வழியே வந்த தமிழ்ச்சமயத்தை, அடுத்த இளையத் தமிழர் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்து, நமக்கே உரிய மரபு வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ, வழிகாட்ட மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை களம் கண்டு வருகிறது.
மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் முகநூல் மற்றும் வலையொளி இணைப்பில் மாநாடு பதாகை முகப்புடன் மங்கள நாதசுவர இசையில் பார்வையாளர்கள் இணைய, செல்வன் திவாகர் மற்றும் செல்வி மேகலா தேவி நெறியாளர்களாக வழிநடத்த, முறையே நாட்டுப்பண், கடவுள் வாழ்த்து, திருமதி செம்மொழி அவர்கள் ஓங்கார விளக்கேற்ற, தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழ்திரு. அ.க.முருகனின் தொடக்க பிரார்த்தனையுடன் மாநாடு தொடங்கியது.
அதன்பின் திருமுறை பாடலுக்கு, அன்பர் பரஞ்சோதி அவர்களின் ஆடற்கலை அரங்கேறியதைத் தொடர்ந்து, தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் தமிழ்திரு. கா.முருகையனார் அனைவரையும் வரவேற்று தமிழ்ச்சமயப் பேரவையின் நோக்கம், இலக்கு, ஏற்கனவே கடந்த மாநாட்டில் ஏற்கப்பட்ட 2 தீர்மானங்கள், 10 பரிந்துரைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பத்துமலை பரந்துரைகளையும் மீள் உறுதி செய்தார்.
தொடர்ந்து, தமிழ்ச்சமயப் பேரவை கடந்து வந்த வரைவு தொகுப்பு காணொளியாக திரையிடப்பட்டதும், மாநாடு முடியும் வரை இடையிடையே திருப்புகழ், விநாயகர் முருகன், திருமால் பாடல்களைத் தமிழ்திரு. இளங்குமரனார் அவர்களின் இனியக் குரலில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சமயப் பேரவை அறிஞர்களில் ஒருவரான மூலத் தமிழியல் ஆய்வறிஞர், தொல்காப்பியச் செம்மல் தமிழ்திரு இர.திருச்செல்வனார் அவர்கள் “தமிழ்ச்சமயத்தின் தொன்மை”, எனும் தலைப்பில் தமிழ்ச் சமயத் தொன்மைகளையும் தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளையும் உலகில் மூத்தச் சமயமே தமிழ்ச் சமயம்தான் என நிறுவும் வகையில் மிகுந்த ஆய்வு விளக்கத்துடன் விரிவுரையாற்றினார்.
பின்னர், நாட்டார் வழிபாட்டு நடனம் சிறீ அக்னி நடனக் குழுவினரால் காணொளி வடிவில் படைக்கப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சமயப் பேரவை அறிஞர்களில் ஒருவரான மலேசியச் சைவ நற்பணிக் கழகத் தலைவர் தமிழ்திரு. திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார் அவர்கள் “தமிழ்ச்சமயத்தின் சிறப்பு”, எனும் தலைப்பில் அடுக்கடுக்கான சிறப்புகளைத் தெளிவுபடுத்தியதுடன் எவற்றையெல்லாம் நாம் இழந்துள்ளோம் என துல்லியமாக சுட்டிக்காட்டி சிந்திக்க பேருரையாற்றினார்.
அடுத்ததாக, தமிழ்நாடு தமிழ் தேசியப் பேரியக்கம் மற்றும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் தலைவருமான தமிழ்த் தேசியப் பேராசான், தமிழர் வழிகாட்டி தமிழ்திரு பெ.மணியரசனார் அவர்கள் தமிழ்ச்சமயத்திற்கும் தமிழர் வழிபாட்டுக்கும் எதிரான சூழ்ச்சிகளையும் அதன் தீர்வுகளையும் தமக்கே உரிய பாணியில் சிறப்புரையில் விளக்கினார் .
அதன்பிறகு, திருக்குறள் அறிஞர் தமிழ்த்திரு சி.மா. அண்ணாதுரையார் அவர்கள் “மலேசியாவில் தமிழ்ச்சமயம்”, எனும் தலைப்பில் இங்குள்ள சமய நடைமுறைப் போக்குகள் மற்றும் பேரூர் ஆதீனத்தின் கிளை மடமான, பூச்சோங் சுந்தரர் சிவயோக ஆசிரமம் முன்னெடுக்கும் பயிற்சிகள், வகுப்புகள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளை விவரித்தார்.
இறுதிப் பேச்சாளராக கோவை பேரூராதீனத்தின் திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட இருபத்தைந்தாம் குருமகாசந்திதானங்கள் கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் “தமிழே எங்கள் மொழி தமிழ்ச்சமயமே எங்கள் வழி” எனும் தலைப்பில் தமிழ்ச்சமயத்தில் தமிழும், தமிழ்ச்சமயத்தின் மூலம் தமிழுமென ஆசியுரை வழங்கினார்
அடுத்ததாக, உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளருமான திரு வீ.பாலமுருகன் தமிழ்ச்சமய அருள் முழக்கம் வாசிக்க, அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதி மொழி ஏற்றனர்.
இறுதியாக, மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவையின் செயலாளர் தமிழ்திரு துரைமுருகனார் மாநாட்டுக்கு வருகை அளித்த, எல்லா வகையிலும் துணைநின்ற அத்தனை பெருந்தகைகளுக்கும் தமது நன்றியுரையில் நன்றி தெரிவித்தார். மாநாடு முடிவு பிரார்த்தனையைச் செல்வன் கோபால் கிருட்டிணன் வாசிக்க, மாநாடு மிகச்சிறப்பாக நிறைவு கண்டது.
இம்மாநாட்டிற்குத் துணையாக உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம், ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம், தமிழ் நாடு கோவை பேரூராதீனம், தமிழ் தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை, மலேசிய சுந்தரர் சிவயோக ஆசிரமம், தமிழ் வாழ்வியல் இயக்கம், மலேசிய தமிழியல் ஆய்வுக் களம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், மலேசிய தமிழர் தேசியப் பேரவை, கோலாலம்பூர் இலக்கியக் கழகம், கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம் , மலேசிய நாம் தமிழர் இயக்கம், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கம், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கம், மலேசிய தங்கத் தமிழர், மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம், தமிழ் பண்பாட்டு இயக்கம், தமிழர் ஒற்றுமை இயக்கம், மாணவர் வசந்தம், மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம் என்று பல தமிழர் தேசிய இயக்கங்கள் சங்கங்கள் கழகங்கள் அமைப்புகள் போன்றவை பேராதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் திரு க.கலையரசு, திரு ம.தமிழ்ச்செல்வம், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு மு.ஆனந்த தமிழன் உட்பட திரு.கணேசன், திரு இராவணன், திரு தனசீலன், திரு மாவேந்தன், திரு சிவகுமார், திரு நந்தகோபன், திரு அப்பு, திரு ராகவன், திரு நம்பி, திரு தனசேகரன், திரு ராசேசுவரன், திருமதி சகுந்தலா, செல்வன் ரா.நவீன், செல்வன் யுவராசன், செல்வன் நவீன், செல்வி கலை நிலா, செல்வி கலைவேணில் , செல்வி கவிதாம்பிகா, செல்வி கெளசல்யா, செல்வி தர்சினி, செல்வி கோ.தர்சினி ஆகியோர் பணியாற்றினர்.