பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் – அம்பலப்படுத்தும் புலனாய்வு

பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.

300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனப்படும் மிகப்பெரிய ஆவணக் கசிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.

பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஜோர்டான் மன்னர் அப்துல்லா குவித்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 வயதுச் சிறுவன் பெயரில் சுமார் 330 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியிருப்பதும் ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் அவரது மனைவியும் லண்டனில் அலுவலம் வாங்கும்போது முத்திரைத் தீர்வையை தவிர்ப்பதற்கு குறுக்கு வழியைத் தேர்வு செய்திருப்பதும் பண்டோரா ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

லண்டனில் அலுவலகத்தை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை அவர்கள் வாங்கியிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. இதன் மூலம் சுமார் 3.1 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மொனாக்கோ நாட்டில் ரகசியமாகச் சொத்துக் குவித்திருப்பதும் ஆவணங்களில் அம்பலமாகி இருக்கிறது.

இந்த வாரத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் செக் நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், பிரான்ஸ் நாட்டில் இரு ஆடம்பர மாளிகைகளை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த விவரங்கள் அவரை தனது பிரமாணப் பத்திரங்களில் அவர் அறிவிக்கவில்லை.

பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், லக்ஸ்லீக்ஸ், ஃபின்சென் ஃபைல்ஸ் போன்ற பெரும் ஆவணக் கசிவுகளின் வரிசையில் பேண்டோரா பேப்பர்ஸும் இணைந்திருக்கிறது.

பாண்டோரா

650 செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) இந்த ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

பிபிசி பனோரமா, கார்டியன் ஆகியவையும் இதில் பங்கெடுத்திருக்கின்றன. பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பனாமா, பெலிஸ், சைப்ரஸ், யு.ஏ.இ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் மொத்தம் 14 நிதி கையாளும் நிறுவனங்களைச் சேர்ந்த 1.2 கோடி ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன.

தற்போது அம்பலமாகி இருக்கும் சிலர் ஏற்கெனவே ஊழல், பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள்.

பிரிட்டனில் ரகசியமாகச் சொத்துகளை வாங்குவதற்கு பிரபலங்களும், பணக்காரர்களும் எப்படி சட்டப்பூர்வமாகவே நிறுவனங்களை உருவாக்கி வருகிறார்கள் என்பது இந்த ஆவணக் கசிவில் அம்பலமாகி இருக்கும் முக்கியமான ஒன்று.

சுமார் 95 ஆயிரம் வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள் இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கின்றன.

சொத்து வாங்குவோர் பண மோசடி செயல்களை மறைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற கவலை தெரிவிக்கப்பட்டாலும், நிறுவன உரிமையாளர்களைப் பற்றிய பதிவை உருவாக்குவதற்கு பிரிட்டன் அரசு தவறியது, இந்த ஆவணக் கசிவு மூலம் தெரிய வருகிறது.

சொந்த நாட்டை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு ஓர் உதாரணம்.

இவர்கள் பிரிட்டனில் ரகசியமாக சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வாங்குவதற்கு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

தற்போது பேண்டோரா பேப்பர்ஸ் மூலம் அம்பலமாகியிருக்கும் தகவல்கள் பிரிட்டன் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், அஜர்பைஜான் அதிபர் அலியேவும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களது லண்டன் சொத்து ஒன்றை கிரவுன் எஸ்டேட் எனப்படும் ராணியின் சொத்துக் குழுமத்துக்கு விற்று சுமார் 310 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளனர். இந்தச் சொத்துகள் பிரிட்டனின் கருவூலத்தால் நிர்வகிக்கப்பட்டு நாட்டுக்கு நிதி திரட்டப்படுகிறது.

ஆவணங்களில் உள்ள பல பரிவர்த்தனைகளில் சட்டரீதியான தவறு எதுவும் இல்லை.

எனினும் “இந்த அளவுக்கு பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் இதற்கு முன் கண்டுபிடிக்கப்படவில்லை. மோசடி செய்த பணத்தை மறைக்க அல்லது வரி ஏய்ப்புக்கு இதுபோன்ற நிறுவனங்கள் என்னென்ன செய்ய முடியும் என்ற

உண்மையை இது அம்பலப்படுத்துகிறது.” என்கிறார் ஐசிஐஜே அமைப்பில் பங்கேற்றிருக்கும் ஃபெர்கஸ் ஷீல்.

“பிற நாடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் சொத்துக்களை வாங்கவும், தங்கள் குடிமக்களின் பணத்தில் தங்கள் சொந்த குடும்பங்களை வளப்படுத்தவும் அவர்கள் வெளிநாட்டு கணக்குகளையும், அறக்கட்டளைகளையும் பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் அவர்

இந்தப் புலனாய்வு “நிறைய ரகசியங்களைக் கொண்ட ஒரு பெட்டியைத் திறக்கிறது” என்று ஐசிஐஜே நம்புகிறது. எனவே இதற்கு பாண்டோரா பேப்பர்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஜோர்டான் மன்னரின் மாலிபு மாளிகை

ஜோர்டான் மன்னர் ரகசியமாக அமெரிக்காவின் மாலிபு மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் ஆடம்பர வீடுகளையும், லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் எட்டு சொத்துக்களையும் வாங்கியுள்ளார். பிரிட்டனினும் அமெரிக்காவிலும் அவர் சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு எப்படி சொத்துகளை வாங்கினார் என்பது தற்போது கசிந்திருக்கும் ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.

1999-ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் அதிகாரத்துக்கு வந்த பிறகு பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வரியைத் தவிர்ப்பதற்கு உகந்த பிராந்தியங்களில் 15 வீடுகளை வாங்கியிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

கலிபோர்னியாவின் மலிபு மற்றும், லண்டன், அஸ்காட் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடலோர மாளிகைகளும் இவற்றில் அடங்கும்.

மாளிகைஅரசின் சிக்கன நடவடிக்கைகள், வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை வகிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் மன்னரின் சொத்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் தனது சொந்தப் பணத்தில் சொத்துகளை வாங்கியிருப்பதாக மன்னரின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். மக்களுக்கான திட்டங்களும் அதில் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சொத்துகளை வாங்குவது பொதுவாக நடைமுறையில் உள்ள முறைதான் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பேண்டோரா ஆவணங்களில் அம்பலமான முக்கியமானமற்றவை

*கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டாவும் அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களும் வரி ஏய்ப்புக்கு உகந்த வெளிநாடுகளில் 11 நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் 210 கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.

*பாகிஸ்தா் பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் உள்ள அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர் ரகசிய நிறுவனங்களையும் அறக்கட்டளைகளையும் வைத்திருப்பதுடன் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும் வைத்திருக்கின்றனர்.

*2019-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்குச் சற்று முன்னதாக உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் செலென்ஸ்கி தனது ரகசிய நிறுவனத்தின் பங்குகளை விற்றிருக்கிறார்.

*ஈகுவடாரின் அதிபர் கில்லெர்மோ லாஸ்ஸோ, தனது குடும்பத்துக்கு மாதாந்திர நிதி வழங்கிய பனாமா அறக்கட்டளையில் இருந்து அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவைச் சேர்ந்த வேறு அறக்கட்டளைக்கு முதலீட்டை மாற்றியிருக்கிறார்.

முத்திரைக் கட்டணத்தைத் தவிர்த்த டோனி பிளேர்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் அவரது மனைவி செர்ரியும் தங்களது சொத்துகளை மறைத்து வைத்திருப்பதாக எந்தத் தகவலும் பாண்டோரா ஆவணங்களில் இல்லை.

ஆனால் சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வாங்குவதற்கு அவர்கள் முத்திரைக் கட்டணம் செலுத்தவில்லை என்பதை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன.

டோனி2017 ஜீலையில் மத்திய லண்டனில் உள்ள மேரில்போனில் உள்ள கட்டடத்தை வைத்திருந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை டோனி பிளேரும் அவரது மனைவியும் வாங்கினர். இதன் மூலம் அந்தக் கட்டடம் அவர்களுக்குச் சொந்தமானது.

இந்த வழியில் பிரிட்டனில் சொத்துக்களைப் பெறுவது சட்டபூர்வமானது. அதற்கு முத்திரைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இதுபோன்ற வரித் தவிர்ப்புக்கான சட்ட ஓட்டைகளை டோனி பிளேர் விமர்சித்து வந்திருந்தார்.

மத்திய லண்டனில் உள்ள மேரில்போனில் உள்ள டவுன்ஹவுஸ் இப்போது வழக்கறிஞரான செர்ரி பிளேரின் சட்ட ஆலோசனை மையமாக உள்ளது.

கட்டடத்தை விற்பனை செய்தவர்கள், இந்த முறையில் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக செர்ரி கூறியிருக்கிறார்.

அவர்கள் சொத்தை பிரிட்டன் விதிகளின் கீழ் திரும்ப கொண்டு வந்துவிட்டதாகவும்,, எதிர்காலத்தில் அதை விற்றால் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

ரூ.330 கோடி சொத்து வைத்திருக்கும் சிறுவன்

அஜர்பைஜானின் ஆளும் அலியேவ் குடும்பம் எப்படி வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி பிரிட்டனில் ரகசியமாகச் சொத்துகளை வாங்கியது என்பதையும் ஆவணங்கள் காட்டுகின்றன.

கட்டடம்அதிபர் அலியேவின் 11 வயது மகன் ஹெய்தார் அலியேவுக்காக லண்டன் உள்பட பல்வேறு பகுதிகளில் 330 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியிருப்பதையும் இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன.

இந்தக் குடும்பத்துக்குச் ஒரு கட்டடம் 2018 ஆம் ஆண்டில் 660 கோடி ரூபாய்க்கு கிரவுன் எஸ்டேட் எனப்படும் ராணியின் சொத்துத் தொகுதிக்கு எவ்வாறு விற்கப்பட்டது என்பதும் புலனாய்வில் தெரியவந்திருக்கிறது.

ஆனால் சொத்தை வாங்கும்போது அப்போதிருந்த சட்டத்தின்படி தேவையான சரிபார்ப்புகளை மேற்கொண்டதாகவும், தற்போது புதிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் கிரவுன் எஸ்டேட் கூறியுள்ளது.

கடுமையான சட்டங்கள் மூலமாக பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுப்பதாக பிரிட்டன் அரசு கூறுகிறது. நாடாளுமன்றம் அனுமதித்தால் பிரிட்டனில் சொத்து வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவேட்டை அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறது.

பண்டோரா பேப்பர்ஸ் என்பது என்ன?

‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்பது உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் ரகசியச் சொத்துகள் மற்றும் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தும் சுமார் 1.2 கோடி ஆவணங்களின் கசிவு.

இந்த ஆவணங்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்டது. தொடர்ந்து உலகின் மிகப்பெரிய புலனாய்வு தொடங்கியது.

117 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் எப்படி ரகசியமாகச் சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

பிபிசி பனோரமா மற்றும் தி கார்டியன் ஆகியவை பிரிட்டனில் இந்தப் புலனாய்வை முன்னின்று நடத்தியிருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பிரபலங்களின் விவரங்களும் இந்த பண்டோ பேப்பர்ஸ் ஆவணத்தில் உள்ளன. இது பற்றிய விரிவான தகவலை தனியாக வெளியிடுகிறோம்.

(நன்றி BBC TAMIL)