சூரியனின் நிறம் உண்மையில் மஞ்சளா?

நம் குழந்தை பருவத்திலிருந்தே, சூரியனை வரைய மஞ்சள் நிறத்தை எடுக்க கற்றுக்கொண்டோம். அதே போல நாம் ஒரு சூரிய உதயம் அல்லது சூரியன் மறையும் தருணத்தை விளக்குகிறோம் என்றால் கொஞ்சம் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தை சேர்க்கிறோம்.

ஆனால் நமது சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள நட்சத்திரம் உண்மையில் மஞ்சள் நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ இல்லை. இந்த நிறங்களோடு இன்னும் பல வண்ணங்களும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது,

சூரியன் பல்வேறு நிறங்களோடு தன் ஒளிக்கற்றை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் ஒரு ப்ரிஸம் கண்ணாடி மூலம் சூரிய ஒளியைப் பார்த்தால், அது சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என பல வண்ணங்களாக பிரிவதை கவனிக்கலாம்.

இவை அனைத்தும் நம் கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கற்றையில் இருக்கும் நிறங்கள். வானவில்லிலும் இதே நிறங்கள் தான் இருக்கின்றன.

வளிமண்டலத்தில் உள்ள நீர்த்துளிகள் வழியாக சூரியனின் ஒளிக்கற்றை கடந்து செல்லும் போது, நமது கண்களுக்கு தெரியும் ஒளியே வானவில் ஆகும். வளிமண்டல நீர்த்துளிகள் ப்ரிஸமைப் போல செயல்படுகின்றன.

பல வண்ண சூரியன் பார்க்க நன்றாக இருந்தாலும், அது முற்றிலும் சரியானதல்ல. காரணம், சூரியன் வெளியிடும் ஒளியின் அனைத்து வண்ணங்களும் கலக்கும்போது, ​​நமக்கு ஒரே ஒரு நிறம் மட்டுமே கிடைக்கிறது. அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், வானத்தில் ஒரு சிறிய குறிப்பொன்று இருக்கிறது.

சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் மேகங்கள் எந்த நிறத்திலும் இருப்பதில்லை. அவை வெண்மையாகவே இருக்கின்றன, ஏனென்றால் அது தான் சூரியன் வெளிப்படுத்தும் உண்மையான நிறம்.

நாம் ஏன் சூரியனை மஞ்சள் நிறத்தில் பார்க்கிறோம்?

சூரியனின் நிறமாலையில் உள்ள ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு அலைநீளத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியனின் சிவப்பு நிறம், நீளமான அலைநீளத்தைக் கொண்டுள்ளது.

சூரிய ஒளிக்கற்றையில் உள்ள நிறங்களின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சிவப்பிலிருந்து இளஞ்சிவப்பாகவும், பின் மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறமாகவும், இப்படியே நீலம், கருநீலம், ஊதா என குறைந்த அலைநீளத்துக்கு வருகிறது.

நீண்ட அலைநீளங்களைக் காட்டிலும் குறுகிய அலைநீளங்களில் உள்ள நிறங்களின் ஃபோட்டான்கள் வளிமண்டலத்தில் சிதறடிக்கப்பட்டு கிளர்ச்சியடைகின்றன.

விண்வெளியில் ஒளி எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நகரும் இடத்தில், ஃபோட்டான்களை சிதைக்க எதுவும் இல்லை, அங்கு சூரியன் வெள்ளை ஒளிப்பந்து போலத் தோன்றுகிறது. அது தான் சூரியனின் உண்மையான நிறம்.

சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும்போது, ​​காற்றில் உள்ள மூலக்கூறுகள் ஃபோட்டான்களை குறுகிய அலைநீளங்களுடன் சிதைக்கின்றன.

ஒளிக்கதிரில் உள்ள நீண்ட அலைநீளங்களைக் கொண்ட நிறங்கள் நம் கண்களை எளிதில் அடைகின்றன.

“வளிமண்டலம் ஒளிக்கதிரில் உள்ள வலுவான பகுதியை தடுக்கிறது, அது புற ஊதாக் கதிர் மற்றும் நீல மண்டலத்துடன் தொடர்புடையது” என ‘தி ஆஸ்ட்ரானமர் டைரி’ என்ற வலைத்தளத்தை நடத்தும் ஏஞ்சல் மோலினா விளக்குகிறார்.

“இதனால், பூமியில், ஒரு சூடான ஒளி விளக்கைப் போல, சூரியனில் குளிர்ந்த நிறங்கள் இல்லாமல் காணப்படுகிறது. அவை வளிமண்டலத்தால் அகற்றப்படுகின்றன. எனவே அது ஒரு சூடான நிறத்தைப் பெறுகிறது, மஞ்சள் நிறச்சாயலைப் பெறுகிறது.”

சரி, ஏன் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது? ஏன் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறுவதில்லை. அவை கூட நீண்ட அலைநீளங்களைக் கொண்ட நிறங்கள் தானே?

பச்சை நிறத்தில் இருந்து வயலட் வரையிலான குறுகிய அலைநீளங்களைக் கொண்ட நிறங்கள் உறிஞ்சப்பட்ட பிறகு, நிறமாலையின் நடுவில் உள்ள மஞ்சள் நிறத்தில் சூரிய ஒளி நிலை பெறுகிறது என பிபிசியிடம் கூறினார் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழகத்தில் வானியல் கற்பிக்கும் கோன்சலோ டான்க்ரெடி.

பச்சை சூரியனா?

சூரியன்சூரியன் உண்மையில் பச்சை என்று கூறும் இணைய தளங்கள் அல்லது சமூக ஊடக பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.

சூரிய நிறமாலையின் வண்ண வரைபடத்தை நாம் உருவாக்கினால், அது பச்சை மண்டலத்தில், அதன் உச்சத்தில் ஒரு மலை போல் தோன்றும் என்கிற உண்மையிலிருந்து இப்படிப்பட்ட கருத்து உருவாகிறது என கோன்சலோ டான்க்ரெடி கூறுகிறார்.

சூரிய ஒளிக்கதிரின் நிறங்களை மனிதக் கண் வேறுபடுத்த முடியாது, ஆனால் வேறுபடுத்தக்கூடிய கருவிகள் உள்ளன, அவை பச்சை நிற வெளியீட்டை மிகத் தீவிரமாகக் கண்டறிந்துள்ளன.

“ஆனால் அந்த வரைபடத்திலிருந்து நீலம் போன்ற குறுகிய அலைநீளம் கொண்ட நிறங்களை நீக்கியவுடன், நிறச்சிகரம் மஞ்சள் நிறத்திற்கு நகரும்” என்கிறார் கோன்சலோ டான்க்ரெடி.

“பூமியில் சூரியனை ஏன் மஞ்சள் நிறத்தில் பார்க்கிறோம் என்பதை விளக்க இந்த விவரம் உதவுகிறது.” என்கிறார்.

சிவப்பு சூரிய அஸ்தமனம்?

நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி, பல்வேறு அலைவரிசையில் எடுத்த படங்களின் தொகுப்புசூரியன் உதிக்கும்போது அல்லது அஸ்தமிக்கும் போது, ​​அது பூமியின் அடிவானத்திற்கு மிக அருகில் உள்ளது, இதனால் சூரிய ஒளிக்கதிர்கள் அதிக எண்ணிக்கையிலான வளிமண்டல மூலக்கூறுகளை கடக்க வேண்டியுள்ளது.

எனவே நீல நிறத்தில் அதிக விலகளை ஏற்படுத்துகிறது, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்கள் நீண்ட அலைநீளங்களில் சூரியனின் தோற்றத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது.

சூரியன் மறையும் தருணம்உண்மையில், இந்த நிகழ்வுக்கு ஒரு பெயர் கூட உண்டு. இது ரேலெ சிதறல் (Rayleigh scattering) என்று அழைக்கப்படுகிறது, இது 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இயற்பியலாளர் லார்ட் ரேலேயின் பெயரைத் தொடர்ந்து பெயரிடப்பட்டது.

சூரியன் வானில் பயணிக்கையில், பூமிக்கு அதன் கோணம் மாறிக்கொண்டே இருப்பதால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொடுக்கும். அதில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது இருக்கும் அருமையான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களும் அடக்கம்.

சூரியனைப் பற்றிய இந்த கட்டுரை உங்களுக்கு சுவாரசியமான ஒன்றைக் கற்பித்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் தயவுசெய்து நீங்கள் சூரியனை நேரடியாகப் பார்க்கக்கூடாது, தொலைநோக்கியைப் பயன்படுத்திக் கூட பார்க்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்கள் பார்வைக்கு சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம். குருட்டுத்தன்மையை கூட ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

(நன்றி BBC TAMIL)