பினேங் மாநில முதல்வராக இந்தியர் ஒருவர் வேண்டும்!

இராகவன் கருப்பையா– அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் இவ்வேளையில் பினேங் மாநில அரசியலில், குறிப்பாக அம்மாநில ஜ.செ.க.வில் உள்ள இந்தியர்களிடையே நிலைமை சற்றுச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பினேங்கின் துணை முதல்வராக இருந்து வரும் பேராசிரியர் இராமசாமி அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் மீண்டும் போட்டியிடுவார் என்று அரசல் புரசலாக  செய்தி வெளியாகியுள்ளது.

கஸ்தூரி ராணி பட்டுவிற்கு முன் ‘பத்துக் கவான்’ தொகுதியில் இராமசாமிதான் ஒரு தவணை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் கூட்டரசு அரசாங்கத்தில் அவர் முக்கியப் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பினேங் மாநிலத் துணை முதல்வர் பதவி காலியாகும் பட்சத்தில் அதற்கான போட்டா போட்டி தற்போது திரைமறைவில் சூடு பிடித்துள்ளதாகத் தெரிகிறது.

மலேசிய அரசியல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் துணை முதல்வர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது பினேங் மாநிலத்தில்தான். கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேல் இராமசாமி தமது பணிகளைச் செவ்வனே ஆற்றியுள்ளதால்  வேளையில் அம்மாநிலத்தின் முதல்வராக நம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்கும் காலம் கனிந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

கெராக்கான் கட்சி ஆட்சியில் இருந்த காலம் தொட்டு ஆண்டாண்டு காலமாகச் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான் அங்கு முதலமைச்சர்களாக இருந்து வருகின்றனர்.

பினேங் மாநிலம் மட்டுமின்றிப் பொதுவாக நாட்டின் அபரிமித வளர்ச்சிக்குக் கடந்த நூற்றாண்டுகள் தொடங்கி நம் இனத்தவர்கள் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது, வரலாற்று பூர்வமானது.

இதனைக் கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் சுழல் முறையில் நம் இனத்தவரும் முதலமைச்சராகும் வாய்ப்பை ஜ.செ.க. ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சுழல் முறையில் முதலமைச்சர் பதவி என்பது மலேசியாவில் புதிய விசயமொன்றும் இல்லை. கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கிக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குச் சபா மாநிலத்தில் இது வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரிசான் ஆட்சியில் இருந்த அம்மாநிலம், முஸ்லிம் இனத்தவர், முஸ்லிம் அல்லாத பூமிபுத்ரா மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் என்ற வகையில் தலா 2 ஆண்டுகளுக்குச் சுழல் முறையில் அம்மாநிலத்தில் முதலமைச்சர்களாக இருந்தனர். ஏதோ காரணத்தினால் படாவி பிரதமராக இருந்த காலத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

ஆக இத்தகைய நடைமுறை நம் நாட்டில் ஏற்கெனவே முன்னுதாரணமாக இருப்பதால் பினேங் மாநிலத்திலும் இதனை அமல்படுத்துவது குறித்து ஜ.செ.க.வின் மாநிலத் தலைமைத்துவம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை!  கெடா மாநிலம் கடாரமாக இருந்த காலத்தில் இராசேந்திரச் சோழன் ஆட்சிபுரிந்த வரலாற்றை இத்தருணத்தில் நினைவுகூருவதில் தவறில்லை.

தீபகற்ப மலேசியாவில் சுல்தான்கள் ஆட்சி புரியும் 9 மாநிலங்களில் மலாய்க்காரர்கள்தான் மந்திரி பெசார்கள் என்பது பாரம்பரியம். மலாய் ஆட்சியாளர்கள் இல்லாத பினேங்கிலும் மலாக்கா மாநிலத்திலும் மட்டும்தான் இதர இனத்தவர் முதலமைச்சர்களாக வர வாய்ப்பிருக்கிறது.

மலாக்காவில் அதற்கான சாத்தியம் இல்லாத சூழலில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு பினேங் மட்டும்தான்.

ஆக, ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப, ஜ.செ.க.வில் உள்ள நம் இனத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான குலசேகரன், இராமசாமி மற்றும் கோபிந் சிங் போன்றோர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெறுமனே மௌனமாக இருந்தால் இதுவெல்லாம் தானாகவே வந்து சேராது.

பினேங் மாநிலத்தில் ‘மதில் மேல் பூனை’யாக இருக்கும் கொஞ்ச நஞ்ச இந்திய வாக்காளர்களையும் கவர்ந்திழுப்பதற்கு இதனை ஒரு யுக்தியாகக் கூட ஜ.செ.க. கையிலெடுக்கலாம்.

ஏனெனில் பல்லாண்டுகளாகப் பாரிசான் அம்மாநிலத்தை ஆட்சி செய்த காலத்தில் கெராக்கான் கட்சியையோ ம.இ.கா.வைச் சேர்ந்த எந்த ஒரு இந்தியரும் அங்குத் துணை முதல்வராக நியமனம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.