இராகவன் கருப்பையா – நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமை இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப்பிற்குதான் கிடைக்கும் போல் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் அமர்ந்த அவர் மிகவும் லாவகமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு தனது பதவிக்கு அரண் அமைத்துக் கொண்டார்.
அந்த ஒப்பந்தம் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வராத வகையில் பாதுகாப்பு வழங்கும் என்று எண்ணியிருந்த சப்ரிக்கு நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் ஒரு திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்காத்தானை அரவணைத்ததன் வழி தனது பதவிக்கு ஆபத்தில்லை என்ற எண்ணத்தில் உல்லாசமாகக் காலத்தைக் கழித்து வந்த அவருக்குத் தான் சார்ந்திருக்கும் அம்னோவே பாதகத்தை ஏற்படுத்தும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நிறைய விசயங்கள் தாங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை எனும் குற்றச்சாட்டின் பேரில் அரசாங்கத்துடனான தங்களுடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டும் எனப் பல பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்தி வருகிற போதிலும் தற்போதைக்கு அதற்கான சாத்தியம் இல்லையென்ற துணிச்சல் சப்ரிக்கு இருக்கும்.
ஆனால் அவருடைய பதவி காலத்தை அம்னோவே சுருக்கி விரைவில் ஒரு நிறைவுக்குக் கொண்டு வந்து அவருடைய தலையெழுத்தை மாற்றி எழுதும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மலாக்காவில் அடைந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து 15ஆவது பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என அம்னோ தலைமைத்துவம் சப்ரிக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறது.
நாட்டுக்கு என்னவோ அவர்தான் பிரதமர். இருந்த போதிலும் கட்சியைப் பொறுத்த வரையில் சப்ரி ஒரு வலுவில்லாத தலைவராகவே கருதப்படுகிறார். கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்ற வகையில் அஹ்மட் ஸாஹிட் மற்றும் முஹமட் ஹசான் ஆகியோரின் கைகளில்தான் அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் சப்ரியின் சிண்டு அவ்விருவரிடம்தான் உள்ளது என்றாலும் அது மிகையில்லை.
இந்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடைய பேச்சைச் சப்ரி கேட்டுத்தான் ஆகவேணடும். மாராக அவர்களுக்கு எதிராகச் சப்ரி பிகு பண்ணுவாரேயானால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்குத் தொகுதி கிடைக்காமல் கூடப் போகலாம்.
தற்போது அவர் பஹாங் மாநிலத்தின் பெரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார்.
ஆஹ்மட் ஸாஹிட் எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கி நீதிமன்ற வாசல்களை ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், முஹமட் ஹசான் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ரந்தாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே உள்ளார். இதனால்தான் பிரதமராவதற்கான அதிர்ஷ்டம் சப்ரிக்குக் கிட்டியது.
இத்தகைய சூழலில் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் பிரதமராகக் கூடிய வாய்ப்பு சப்ரிக்கு அறவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். எனவே இவ்வாறான நிலைமையில் இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு இப்பதவியை அலங்கரித்து அதன் அனுகூலங்களை அனுபவிக்க அவர் எண்ணுவாரா அல்லது கட்சித் தலைமைத்துவத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து நாடாளுமன்றத்தைக் கலைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவாரா என்பதே தற்போது மக்கள் மனங்களை வருடும் ஒரு பெரிய கேள்வி.
இப்படிப்பட்ட இரண்டும் கெட்டான் நிலையில் பரிதாபகரமாக அவர் சிக்கித் திண்டாடுவது இது முதல் முறையல்ல. மலாக்கா தேர்தலின் போது தனது கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதா ‘பிரதமர்’ எனும் சிம்மாசனத்தில் அமர்வதற்கு வழிவகுத்த, தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியினருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதா எனும் இக்கட்டான சூழலில் அவர் மாட்டித் தவித்ததை மக்கள் உணராமல் இல்லை.
அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய 3 கட்சிகளும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் கூட்டாக அங்கம் வகிக்கும் போதிலும் தேர்தலில் அம்னோ ஒரு புறமும் பெர்சத்துவும் பாஸ் கட்சியும் மற்றொரு பக்கமும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டது நாட்டின் அரசியல் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்றுதான்.
ஆகக் கட்சி தலைமைத்துவத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நாடாளுமன்றத்தைக் கூடிய விரைவில் சப்ரி கலைப்பாரேயானால் மலேசிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்த பெருமைக்கு அவர் ஆளாவார்.
சப்ரிக்கு முன் வெறும் 17 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த மஹியாடின் இதுவரையில் நாட்டின் குறுகிய காலப் பிரதமராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பொதுத் தேர்தல் ஏறத்தாழ இன்னும் 17 மாதங்களில் நடைபெற வேண்டும். அதுவரையில் சப்ரி தாக்கு பிடித்தால் அவருடைய பதவி காலம் மஹியாடினை மிஞ்சி மொத்தம் 21 மாதங்களாக இருக்கும்.
ஆனால் அம்னோவின் அவசரத்தை வைத்துப் பார்த்தால் அதற்கான சாத்தியமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் சப்ரிதான் நாட்டின் மிகக் குறுகிய காலப் பிரதமராக இருப்பார் என்பது திண்ணம்.
மிகச் சரியான நாட்டின் இன்றைய அரசியல் சூழலை பிரதிபலிக்கும் ஒரு அருமையான கட்டுரை. சபாஷ்! கட்டுரையாளருக்கு வாழ்த்துகளும், பாராட.டுக்களும்