‘ஜெய்பீம்’ படம் அல்ல பாடம் ~ யோகி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சில திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களைப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாகவும் பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த உரையாடலைக் கூகை பதிப்பக நிறுவனம் மேற்கொண்டது.

ஜாதி குறித்த உரையாடலைத் தொடங்கினாலே “நமது நாட்டில் யாருங்க ஜாதி பார்க்குரா?” என்ற இந்த வார்த்தையை ஒரு முறையாவது நமது வாழ்க்கையில் சந்தித்து கடந்திருப்போம். ஆனால், ஜாதியை ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் சந்தித்துக்கொண்டே இருப்போம். சிலருக்கு அது ஜாதி பெருமையாகவும் சிலருக்கு அது சங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் ‘யாருங்க நம்ம நாட்டில் ஜாதியைப் பார்க்கிறா’ என்பவர்களுக்கான பதில் ஊமையாக இருக்கும் இம்மாதிரியான நேரடி சாட்சிகள் தான்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் நேரடியாக ஜாதி அடுக்குமுறையைப் பேசும்போது ஜெய்பீம் பூர்வக்குடிகளின் நிரந்தரமற்ற வாழ்க்கையைப் பேசுகிறது. எனக்கு இந்த இரண்டு விஷயங்களிலும் நேரடியாகவே பல அனுபவங்கள் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் நிறைய பூர்வக்குடிகளின் பிரச்னைகளை நான் நேரடியாகவும் தகவல்கள் சேகரித்தும் எழுதியிருக்கிறேன், பாதிக்கப்பட்டிருக்கும் பூர்வக்குடிகளை நேரடியாகவும் சந்தித்து பேசியிருக்கிறேன். பெருவாரியாக மலேசியப் பூர்வக்குடிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அவர்களின் வனத்தை ஆக்கிரமிப்பதுதான். போலீஸ் தடுப்புக் காவலில் பூர்வக்குடிகள் இறந்த பதிவுகள் குறித்து பெரியதாக அறிய முடியவில்லை என்றாலும் அதிகாரத் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் நடந்ததற்கான பதிவுகள் இருக்கிறது. அதுவும் தீபகற்பத்தைவிட சபா-சரவாக் மாநிலங்களில் அது மிகுதியாகவே இருக்கிறது.

பூர்வக்குடிகள் விவகாரத்தை மட்டும் தனியே எடுத்து பார்க்கும்போது மாநில அரசாங்கமோ, அல்லது மத்திய அரசாங்கமோ அவர்களை அவர்களின் சுயத்தை இழப்பதற்கான வேலையைத்தான் செய்கின்றன. அவர்களின் காடுகளைப் பிடுங்குவதிலிருந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதிலிருந்து, அவர்கள் பூர்வக்குடிகள் என்ற அடையாளத்தை மறக்கடித்து மதச்சாயத்தைப் பூசி அவர்களுக்குப் பண ஆசையை ஏற்படுத்தி அரசாங்கம் எஜமானர்களாகவும் சில சமயங்களில் கடவுகளாகவும் நடந்துக்கொள்ளும்போது ஒவ்வொரு பூர்வக்குடியின் நிலையையும் சொல்லில் விவரிக்க முடியவில்லை.

உயிரைப் பறிப்பதும், அடித்து காயத்தை ஏற்படுத்துவதும் மட்டும் குற்றச்செயல் அல்ல என்பது பலருக்குப் புரிவதும் இல்லை. காடுகளை அழிப்பது, ஓராங் அஸ்லியின் (பூர்வக்குடியின்) வாழ்வாதாரத்தைப் பறிப்பது, அவர்களின் அசல் வாழ்க்கையைப் பிடிங்குவது இதெல்லாம் குற்றச்செயல் இல்லையா?

பரியேறும் பெருமாள், அசூரன் உள்ளிட்ட திரைப்படங்களில் வைக்கப்படும் மிக வலிமையான செய்தி கல்வியாகும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான ஒரே வலுவான ஆயுதமாக இருப்பது கல்விதான். அந்தக் கல்வி பூர்வக்குடிகளுக்கும் அவசியமானது. மலேசியப் பள்ளிக்கூடங்களில் பகடிவதைக்கு ஆளாகும் பூர்வக்குடி குழந்தைகளை மலேசிய சமூகம் கண்டுக் கொள்வதே இல்லை. அதன் காரணத்தினால், கல்விக்கு முடிவு கட்டிவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏராளம் உண்டு. மூடப்படும் பூர்வக்குடி மாணவர்கள் கற்கும் பள்ளிக்கூடங்கள் அதற்கு சாட்சியாகும்.

நாடோடிகளாக வாழவேண்டிய பூர்வக்குடி சமூகம், பின்னாளில் ஒரே இடத்தில் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களின் இனக் குழுவினரோடு பல ஆண்டுகள் வாழ்ந்த நிலப்பரப்பைப் பூர்வீக நிலமாக வரையறுக்கிறார்கள். முன்னோர்களின் ஆவி மற்றும் ஆவி வழிபாடுகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் பூர்வக்குடி மக்கள், அந்த நிலப்பரப்பைக் கைவிடுதல் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு விஷயம். ஆனால், நமது நாட்டில் அது சர்வசாதாரண ஒரு விஷயம்.

2020 முதல் மிகக் கடுமையாக இருந்த கோவிட் பெருந்தொற்று நெருக்கடியிலும், காப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தன் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்ட பூர்வக்குடிகள் கதைகள் வெறும் கதைகள் அல்ல. தன் பூர்வீக நிலத்தை விட்டுத்தர முடியாமலும், காப்ரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்கவும் முடியாமலும், போராட்டம் நடத்தி இறுதியில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்ட ஓராங் அஸ்லியின் சோகக் கதைகள் ஏராளம். மலேசிய மக்கள் ஒரு செய்தியாகக்கூட அவற்றை அறிந்திருக்கவில்லை.

ஜெய்பீம் திரைப்படத்தில் சந்துரு என்கிற ஒரு வக்கீல் சட்டரீதியாக நீதிக்காகப் போராடுவதைப் பார்த்தோம். ஆனால், சந்துரு ஒருவரால் மட்டுமே நீதிக் கிடைத்ததா என்றால் இல்லை. கம்யூனிஸ் தோழர்கள் போராட்டம், விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், பண ஆசைக்கு மயங்காத செங்கேனி, ராஜாகண்ணுவைக் கொன்று புதைத்த இடத்தில் தேனீர்கடை வைத்திருந்தவர் என சில முக்கிய சாட்சிகளால்தான் இந்த வழக்கை வெற்றிக்கொள்ள முடிந்தது. நீதி கிடைப்பதற்கும் துணையாக இருந்தது.

மலேசியச் சூழலில் இம்மாதிரியான களப்பணியைப் பி.எஸ்.எம். கட்சி மட்டுமே முன்னெடுக்கிறது. வாதியிடம் அவர்கள் பணத்தைக் கேட்பதில்லை. பரிசாக கொடுக்கிறேன் என்றாலும் அதை அவர்கள் ஏற்பதில்லை. வழக்குக்கு அல்லது அந்தக் களப்பணிக்குத் தேவையான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். வாதிக்கு வசதியில்லாத பட்சத்தில் அவர்களின் செலவையும் கட்சியே ஏற்கிறது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் வழக்குகளை முன்னெடுக்கும்போதும் இதே நிலையைத்தான் கட்சி கையாள்கிறது. வழக்குகளில் வெற்றி பெற்றால், தொழிலாளர்களே அன்பளிப்பாக ஒரு சிறுதொகையை அளிக்கிறேன் என முன்வந்தாலும் கட்சி அதை ஏற்பதில்லை, இன்னும் சொல்லப்போனால் தேனீர் செலவைக்கூட வாதியை ஏற்கவிடுவதில்லை, என்றால் இடதுச்சாரி தோழர்களின் நிலைப்பாட்டை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.

உலகம் முழுக்க செங்கொடியை ஏற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு ஒரே நேர்கோட்டில் பயணிப்பதும், அதன் தார்மீகக் கடமை மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் மீளாததும் செங்கொடியின் பலத்தை நமக்கு உணர்த்துகிறது.

எழுத்தில் ஒருசிலருக்குப் புரியவைக்க முடியாத சத்தியத்தை, அறத்தை, தத்துவத்தை, படிப்பினையை, காட்சிகளால் புரியவைக்க முடியும் என்பதற்கும் பேசு பொருளாக ஆக்க முடியும் என்பதற்கும் இம்மாதிரியான திரைப்படங்கள் உதாரணமாக இருக்கின்றன. மலேசிய மண்ணிலும் இம்மாதிரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்பது நமது ஆவலும் கூட.

கலந்துரையாடலில் அனைவரும் அவர் அவர் அனுபவத்தோடு கலந்துரையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அனைவருமே ஒத்த சிந்தனையோடு இருப்பதும் மாற்றுச் சிந்தனைக் குறித்த கருத்துப் பகிர்வுகளை வெளிப்படுத்தியதும் சிறப்பாக அமைந்ததோடு ஒடுக்குமுறையை அவரவர் எப்படி எதிர்கொள்கின்றனர் மற்றும் அதில் அவர்களின் புரிதலையும் விவாதிக்க முடிந்தது. மொத்ததில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட திரைப்படங்கள் மலேசியச் சூழலோடு எப்படி பொருந்தி போகிறது என்பதையும் அவதானிக்க முடிந்தது.