ம.நவீன் – மாஆளுமைகள் எவ்வாறு உருபெற்று வருகிறார்கள், இயற்கை எவ்வாறு அவர்களை வடிவமைக்கிறது, காலம் உருவாக்கும் தடைகளும் சவால்களும் நேர்மறையான குணம் கொண்ட ஒருவருக்கு எப்படி வரமாக மாறுகின்றன, ஒருவர் தன் எண்ணத்தில் கொண்டுள்ள தீவிரம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையும் எவ்வகையில் மாற்றி அமைக்கிறது, குடும்பம் ஒருவரின் மன வளர்ச்சிக்கும் அறிவு முதிர்ச்சிக்கு எவ்வாறு பங்காற்றுகின்றன என்பன போன்ற பலவித புரிதல்கள், மீட்டெடுக்கப்படும் அவரது சிறுவயது அனுபவங்கள் மூலம் நுட்பமாக அறிமுகமாகின்றன.
நான் தொலைவில் நின்றபடி பார்த்து வியந்த பசுபதி அவர்களை இன்னும் அணுக்கமாக அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் அமைகிறது. ஒருவகையில் இந்தத் தொடரைத் தொடங்கியதுகூட அவரை நெருக்கமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற என் பேராசைதான் காரணம்.
பசுபதி அவர்களை நான் முதன்முறையாக அறிந்துகொண்டது செம்பருத்தி இதழ் வழியாகத்தான். மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்ற நோக்கில் அது மாத இதழாக வெளிவந்தது. அப்பாவுக்கு அனைத்து மாத வார இதழ்களையும் வாங்கும் பழக்கம் இருந்ததால் இடைநிலைப்பள்ளி படிக்கும்போதே எனக்கு செம்பருத்தி அறிமுகம்.
அதில் எழுதப்படும் கட்டுரைகளும் ஆய்வுகளும் அதன் வழி முன்வைக்கப்படும் மாற்றுபார்வைகளும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மலேசியாவில் இவ்வளவு துணிச்சலாக எழுத முடியுமா? மொத்த அதிகார மையங்களையும் கேள்வி எழுப்ப முடியுமா? எந்தச் சார்பும் எடுக்காமல் யாரின் தயவுக்கும் ஏங்காமல் உண்மையை உரக்கச் சொல்ல முடியுமா? நான் தொலைவில் நின்றபடியே பசுபதி மற்றும் அவர் குழுவினரைப் பார்த்து வியந்தேன்.
எஸ்.பி.எம் முடிந்து கோலாலம்பூர் சுற்றுலா வந்தபோது செம்பருத்தி அலுவலகம் சென்று அவ்விதழின் பொறுப்பாசிரியராக இருந்த கணபதி கணேசன் மற்றும் ஓவியர் ரஜினியை அறிமுகம் செய்துக்கொண்டேன்.
நான் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணைந்தபோது அங்கும் செம்பருத்தி, உங்கள் குரல் போன்ற இதழ்கள் பயிற்சி ஆசிரியர்களிடம் விற்பனைக்கு வந்தன. முதல் ஆளாக அவற்றை வாங்கி வாசித்துவிடுவேன். அப்படி ஒருமுறை செம்பருத்தி இதழ் கிடைக்கவில்லை என்றபோது கல்லூரி விரிவுரையாளர் திரு.சிவனேசனிடம் விசாரித்தேன். அவர் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினார்.
அதன்வழி செம்பருத்தி இதழ் அரசு கல்வி கூடங்கள் எதிலும் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. விரிவுரையாளர் சிவனேசனுக்கு செம்பருத்தி இதழின்மேல் பெரும் மதிப்பு இருந்தது. தனிப்பட்ட முறையில் என்னிடம் நெருக்கமான விரிவுரையாளர்களில் ஒருவர் அவர். சூழலைச் சொல்லி வருந்தினார்.
என் கல்லூரி ஈப்போவில் இருந்தது. அந்த வாரமே நான் கோலாலம்பூர் புறப்பட்டேன். செம்பருத்தி அலுவலகம் கோலாலம்பூர் மையத்தில் இருந்தது. அப்பாவின் உதவியுடன் அந்த இடத்தைத் தேடி கண்டுப்பிடித்துச் செல்லவே பெரும்பாடானது. கீழ்த்தளத்தில் பசுபதி அவர்களின் வழக்கறிஞர் அலுவலகம் இயங்கியது.
செம்பருத்தி இதழ் 20 வேண்டும் என்றதும் உள்ளே இருந்து ஒருவர் வந்தார். அவர் பசுபதி அவர்களின் தங்கை என அப்போது எனக்குத் தெரியாது. இதழ்களைப் பாதி விலைக்கு கொடுப்பதாகக் கூறினார். இருபது ரிங்கிட்டைக் கொடுத்து பெற்றுக்கொண்டேன். இப்படியே சிலமாதங்கள் கடந்தபோது ஒருமுறை அவர் என்னைப் பற்றி விசாரித்தார்.
எதற்காக இத்தனை இதழ்களை வாங்குகிறேன் எனக் கேட்டார். நான், ‘கல்லூரி மாணவர்களுக்காக’ என்றதும் “அதுதான் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதே!” என சந்தேகமாகப் பார்த்தார்.
நான் புதிதாகக் கடைப்பிடிக்கும் திட்டத்தைக் கூறியதும் அவர் பார்வையில் ஆச்சரியம். “கொஞ்சம் இருங்கள்” என்றவர் அவசரமாக உள்ளே ஓடினார். பின்னர் “நீங்கள் பசுபதியைச் சந்திக்க வேண்டும்” என அவர் முன் சென்று நிறுத்தினார்.
நான் அவரிடம் இருந்து தப்பித்து செல்லவே முயன்றேன். பசுபதி என்பவர் கூரிய நகங்களும் கோர பற்களுமாக யார் மீதாவது பாய காத்திருக்கும் ஒரு புலி எனும் சித்திரம்தான் என் மனதில் இருந்தது. எனவே மறுக்க முடியாத சூழலில் தயங்கியபடி அவர் அறைக்குள் சென்றேன்.
சிறிய அறிமுகத்துக்குப் பின்னர், செம்பருத்தி இதழை எவ்வாறு கல்லூரியில் விற்பனை செய்கிறேன் என அவருக்கும் விளக்க வேண்டி இருந்தது. இன்று யோசித்தால் அது சுவாரசியமான கதைதான்.
இதழைக் கல்லூரிக்குக் கொண்டுச் சென்ற மறுநாளே என்மீது புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அப்படி என் மீது புகார் கடிதங்கள் எழுதுவதை சிலர் முழுநேர பணியாகச் செய்துக்கொண்டிருந்தனர். அவர்களே என் கல்லூரி வாழ்வை சுவாரசியமாக்கினர்.
எதிரிகள் சூழ்ந்திருக்கும்போது மூளை கூர்மையாக இருக்கும். எனவே நான் கவனமாகவே செயல்பட்டேன். விஷயம் கல்லூரி முதல்வருக்குப்போனது. அவர் கொஞ்சம் முற்போக்கானவர். சபைக் கூடல்களில் அவர் ஆற்றும் உரைகளை ஆர்வமாகக் கேட்பேன்.
“ஏன் தடை செய்யப்பட்ட இதழை கல்லூரியில் விற்கிறாய்?” என்றார்.
“நான் விற்கவில்லை” என்றேன்.
“விற்பதாக புகார் வந்துள்ளதே. நீ கல்லூரிக்கு செம்பருத்தி இதழ்களை கொண்டு வருகிறாய் அல்லவா?” என்றார்.
“ஆம். செம்பருத்தி இதழ்களை விற்பனை செய்யக்கூடாது என்றே தடை உள்ளது; வாசிக்கக் கூடாது என்று இல்லை. நான் இதழ்களை எடுத்து வருகிறேன். அதை வகுப்பு மேசையில் வைத்துவிடுவேன். யாரையும் வாங்கச் சொல்வதில்லை. அவர்களாக ஒரு ரிங்கிட் கொடுத்து எடுத்துக்கொள்கிறார்கள். விற்பதுதானே தவறு: வாங்குவதல்லவே” என்றேன்.
முதல்வர் சிரித்தார். “போ” என்றார். அதன்பின்னர் இதழை விற்பதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை.
பசுபதி இந்தக் கதையைக் கேட்டவுடன் சிரித்தார். அவர் சிரிப்பதை அன்றுதான் பார்த்தேன். சிரிக்கும்போது விசித்திரமான ஒலி எழுப்பினார்.
“வருங்கால தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் போறிங்க. சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியணும். நீங்க புரட்சிகரமா எழுதணுமுன்னு சொல்லமாட்டேன். ஆனால் எல்லாவற்றையும் பற்றிய விழிப்புணர்வு இருக்கணும்…” எனக்கூறி சில துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தார். அதில் உள்ள கருத்துகள் குறித்து சக நண்பர்களிடம் விவாதிக்கச் சொன்னார். என்னிடம் இலக்கியம் தவிர அப்போது அரசியல் விழிப்புணர்வு குறித்து யாரும் பேசியதில்லை. எழுத்தாளனுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும் எனக்கூட அப்போது எனக்குத் தெரியாது. நான் அந்தப் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டேன். மலேசிய இந்தியர்களின் அவலங்கள் அதில் கார்ட்டூன்களாக வரையப்பட்டிருந்தன. (தொடரும்)