`தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்` – பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

எதிர்வரும் தைத் திங்கள் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2053-ஆம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை அனைத்து மலேசிய வாழ் தமிழர்களுக்கும் உவகையோடு தெரிவித்துகொள்கிறது.

தை துவக்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் புத்தாண்டாக வரவேற்பதை நமது சங்க இலக்கியங்கள் உறுதிபடுத்துகின்றன. தமிழர் தாயகத்தைத் தாண்டி தமிழர் புத்தாண்டை முன்னிட்டு பொங்கலிடும் வழக்கம் மலேசியாவில் ஏறத்தாழ அரசு விழாவுக்கு ஒப்ப வெகு விமரிசையாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறதை நாம் பார்க்கின்றோம்.

இந்தத் தமிழர் புத்தாண்டில் மனக் கசப்புகளையும், வெறுப்புகளையும் துடைத்தொழித்து குடும்பத்தாருடனும் உறவுகளுடன் நண்பர்களுடனும் பலமான உறவுப் பாலத்தை உறுதியாக்கிக்கொண்டு அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தைப் பேணுவோம். அதோடு, இந்த ஆண்டு தத்தம் பொருளாதரத்திலும் வளர்ச்சியை நோக்கி முன்னேறுகின்ற ஆண்டாக உறுதியேற்போம்.

‘தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்’ என்ற நம்பிக்கையோடு, கொறணி நச்சில் பரவலால் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள இந்தச் சூழலில் புத்துணர்ச்சியையும் புது நம்பிக்கையையும் ஏந்தி இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டு தர விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்போடு பொங்கலிட்டு, புத்தாண்டை வரவேற்கும் வழக்கத்தைத் தொடர வேண்டும்.

குடும்பத்தாருடன் இவ்வாண்டு தமிழ்ப்புத்தாண்டைப் பாதுகாப்புடன் நாம் கொண்டாடுவோம்.

பொங்கலோடு புத்தாண்டு – தமிழ்ப் புத்தாண்டு!

கொண்டாடு! கொண்டாடு!

கருணை விழா கால விழா இரண்டையும் கொண்டாடு – இரா.திருச்செல்வம் –


தமிழரண் மணியன், தேசியத் தலைவர், மலேசியத் தமிழர் தேசியப் பேரவை