இந்தியர்களின் மக்கள்தொகை 2020-இல் 6.7%க்கு குறைந்தது!

சமீபத்தில் முடிவடைந்த 2020 -க்கான  தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலேசியாவின் மக்கள்தொகையில் பூமிபுத்ராவின்  சதவீதம் 69.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனர்கள்  மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.

2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 28.3 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை  32.4 மில்லியனாக அதிகரித்துள்ளது, அதில் 67.4 சதவீதம் பூமிபுத்தராக்கள்,  கிட்டத்தட்ட 32 சதவீதம் பேர் சீன மற்றும் இந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள்.

“மலேசியாவின் மக்கள்தொகை இப்போது 32.4 மில்லியனாக உள்ளது, 10 ஆண்டுகளில் சராசரியாக 1.7 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  இன்று காலை 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீட்டு விழாவில் கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 52.3 சதவீதம் பேர் ஆண்கள், 47.4 சதவீதம் பேர் பெண்கள்.

“இனங்களின் அடிப்படையில், பூமிபுத்ரா 69.4 சதவிகிதத்துடன் மிக உயர்ந்த சதவீதத்தை உருவாக்குகிறது, அதைத் தொடர்ந்து சீனர்கள் (23.2 சதவிகிதம்), இந்தியர்கள் (6.7 சதவிகிதம்) மற்றும் மற்றவர்கள் (0.7 சதவிகிதம்)” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

உள்ளூர் நாளிதழான mStar 2011-இல், 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 28.3 மில்லியன் மக்கள்தொகையில் பூமிபுத்ரா 67.4 சதவிகிதம் இருந்தது, அதைத் தொடர்ந்து சீனர்கள் 24.6 சதவிகிதம் மற்றும்  இந்தியர்கள் 7.3 சதவிகிதம் இருந்தனர்.  அதே நேரத்தில் மற்ற குறிப்பிடப்படாத இன மக்கள் 0.7 சதவிகிதமாக இருந்தனர்.

2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.6 மில்லியன் மலேசியர்கள் அல்லாதவர்கள் (அயல்நாட்டினர்) உள்ளனர், இது மக்கள்தொகையில் 8.3 சதவீதம் ஆகும்.

2010ல் 27.6 சதவீதமாக இருந்த நாட்டின் இளம் மக்கள் தொகை 2020ல் 24 சதவீதமாகக் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

2010 இல் 8 சதவிகிதத்தில் 2.2 மில்லியனாக இருந்த 60 வயதிற்கும்  மேற்பட்ட மூத்த வயதுடையவர்கள், 2020-இல் 3.4 மில்லியனுக்கு கூடியுள்ளனர். இது மக்கள் தொகையில் 10.5 சதவிகிதமாகும்.

பெரும்பான்மையினரின் மக்கள் தொகை அரசாங்க ஊக்குவிப்பால் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறுபான்மை இனத்தவரின் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சி காணும் என்கிறார் சமூக ஆய்வாளர் கா. ஆறுமுகம். ”இந்தியர்களின் மக்கள் தொகை 2010-இல் சுமார் 20.6 லட்சமாக இருந்தது 2020-இல் 21.7 லட்சமாகக் கூடியிருந்தாலும், ஒட்டு மொத்த ஒப்பீட்டில் நாம் 0.6% குறைந்துள்ளோம், இது தொடரும்” என்கிறார்.