வாழ்நாள் சாதனையாளர்களை வாழும் போதே வாழ்த்தவேண்டும்

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு துறைகளிலும் நம் சமூகத்தினர் புரிந்து வரும் எண்ணற்ற சாதனைகள் உண்மையிலேயே அளப்பரியது.

விளையாட்டுத் துறை, அரசாங்கப் பதவி, எழுத்துத்துறை, அறிவியல், தொழில் துறை, மருத்துவம், சட்டத்துறை, புத்தாக்கம், கலைத்துறை போன்ற பலதரப்பட்ட துறைகளில் நம் இனத்தவர்கள் மிளிர்வது பல்வேறு காரணங்களினால் அண்மைய ஆண்டுகளாகச் சற்றுக் குறைந்துள்ளது.

அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்தை முன்னிறுத்தி வித்திட்ட இனப் பாகுபாட்டிலான பல்வேறு விதிமுறைகளினாலும் நடவடிக்கைகளினாலும் நம்மில் பலர் பல துறைகளிலும் முடக்கப்பட்டிருப்பது ஏதோ உண்மைதான்.

இருந்த போதிலும் கிட்டத்தட்டக் கடந்த அரை நூற்றாண்டுகளாக நம்மவர்கள் புரிந்துள்ள அபாரச் சாதனைகள் சன்னம் சன்னமாக மறைக்கப்பட்டும் மறக்கப்படும் நிலையிலும் உள்ளது நமக்குக் கவலையளிக்கிறது.

இவர்களுடைய கடுமையான உழைப்பையும், அர்ப்பணிப்பையும், சாதனைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர்களுடைய வாழ்நாளிலேயே பெருமளவிலான விழா எடுப்பது அவசியமாகும்.

அரசாங்கத் துறையை எடுத்துக் கொண்டால் கடந்த 1967ஆம் ஆண்டில் மலேசியக் கடற்படையின் தளபதியாக நம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது இப்போதுள்ள இளையோர் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமது 31ஆவது  வயதில் அந்த மாபெரும் பொறுப்பை ஏற்ற தனபாலசிங்கம் மிக இளமையான வயதில் அப்பதவியை அலங்கரித்த ஒரே கடற்படை வீரர் எனும் விருதுக்குச் சொந்தக்காரராவார்.

இப்படிப்பட்ட ஒரு பொன்னான காலம் இனிமேல் மலருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பக்காத்தான் ஆட்சியின் போது நிதியமைச்சராகவும் சட்டத்துறைத் தலைவராகவும் மலாய்க்காரர் அல்லாதார் நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட இனத்துவேச நெருக்குதல்கள் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.

காவல் துறையை எடுத்துக் கொண்டால் கடந்த 1977ஆம் ஆண்டில்  சிலாங்கூர் மாநிலக் காவல் படைத் தலைவராக அழகேந்திராவும் 2017ஆம் ஆண்டில் பினேங் மாநிலக் காவல் படைத் தலைவராகத் தெய்வீகனும் நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி விளையாட்டிலும் உலக அளவில் பிரசித்தி பெற்ற அழகேந்திராவின் பெயரில் சிலாங்கூர் காஜாங்ஙில் சாலையொன்றும் கூட உள்ளது.

கலைத்துறையில் எல்.கிருஷ்ணன் ஆற்றிய பங்கு நாடறியும். இன்னும் சில மாதங்களில் தமது 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் அவர் மலாய் திரைப்படத் துறையின் ஜாம்பவான் என்றால் அது மிகையில்லை.

விளையாட்டுத் துறையில் எண்ணற்ற வீரர்கள் முத்திரை பதித்துள்ளதையும் நாம் நினைவுக் கூறுவது அவசியமாகும்.

கடந்த 1960ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளின் ஓட்டப்பந்தயப் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான முதல் மலேசிய வீரரான டாக்டர் மணி ஜெகதீசனின் சாதனைகள் இன்னமும் பேசப்படுகிறது. அதே போல்தான் பெண்கள் பிரிவில் ராஜாமணி.

அதன் பிறகு 1970களில் அங்கம்மா, ஜோசஃபின் மேரி, ஜி.சாந்தி போன்றோரும் 1980களில் ராஜ்குமார், யோகேஸ்வரன், எம்.ராஜூ, சிதம்பரம், அவருடைய சகோதரி ராஜகுமாரி முதலியோரும் அனைத்துலக ரீதியில் நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.

பெருநடைப் பிரிவில் சுப்ரமணியம், திருமால் மற்றும் சரவணன் போன்றோரும் ஈடு இணையற்ற வகையில் தடம் பதித்தனர்.

டென்னிஸ் வீரர்கள் செல்வம், ராமச்சந்திரன் மற்றும் பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோரும் மறக்கப்பட்ட நிலையில்தான் உள்ளனர்.

கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர்களான எம்.சந்திரன், ஆறுமுகம் மற்றும் குப்பன், கோல்ஃப் வீரர் நெல்லன், பூப்பந்தாட்டக்காரர் குணாளன் போன்ற நிறையப் பேர் இப்போது நம்மிடையே இல்லை என்பது மிகவும் சோகமான விசயம். இவர்களுடைய வாழ்நாளில் இவர்களுக்காகப் பாராட்டு விழா நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துலக நிலையில் நாட்டைப் பிரதிநிதித்த எண்ணற்ற ஓட்டப்பந்தய வீரர்களில் நிறையப் பேர் அண்மைய ஆண்டுகளாக நம்மை விட்டுப் பிரிந்துள்ளனர். இவர்கள் எல்லாருமே கடைசி வரையிலும் இலை மறை காயாகவே இருந்தது ரொம்பப் பேருக்குத் தெரியாது.

பல வேளைகளில், குறிப்பாக இலக்கியத் துறையில் பிரசித்தி பெற்ற ஒருவர் மறைந்தால் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் இரங்கல் கூட்டம் என்பது காலங்காலமாக நம்மிடையே இருந்து வரும் ஒரு பாரம்பரியமாகும். பெரும்பாலான சமயங்களில் அது ஒரு சோகமான நிகழ்வுதான்.

ஆனால் ஒரு சாதனையாளர் இறக்கும் வரையில் காத்திராமல் அவருடைய வாழ்நாளிலேயே அவரைப் பாராட்டி மகிழ்ந்து, போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவது பற்றி நாம் எல்லாருமே சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர் சந்தோசக் கடலில் மூழ்குவார், குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள், நண்பர்களும் உறவினர்களும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மாணவர்களுக்குக் கூட அது உந்துதலாக அமையும்.

இது போன்ற நிகழ்வுகளை நம் இனம் சார்ந்த அரசு சாரா இயக்கங்களும் விளையாட்டு மன்றங்களும் ஆங்காங்கே உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் முன்னெடுத்து ஏற்பாடு செய்ய வேண்டும்.