கூத்தாடிகளாக அரசியல்வாதிகள்: சிறுமைப்படுத்தப்படும் இந்தியர்கள்

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கும் போதுதான் இந்தியர்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர் எனப் பல வேற்று இன அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வருகிறது.

அரசியல் கட்சிகள் அதிகமாகும்போது, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே, நாடு முழுவதும்  நிறையத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான் ஒருவருடைய வெற்றியை நிர்ணயிக்க இயலும். அதனால் தேர்தல் சமயங்களில் மட்டும் நமது தேவை அங்கீகரிக்கப்படுகிறது. மற்ற வேளைகளில் அவர்களுடைய பார்வையிலோ எண்ணத்திலோ துளியளவும் நாம் இருப்பதில்லை.

இத்தகைய சூழலில், ஏமாற்றப்படுகிறோம் என்று உணராமலேயே நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதே நிதர்சனம். அதற்குக் காரணங்களும் உண்டு.

அண்மைய ஆண்டுகளாகச் சில அரசியல்வாதிகள் நடிகர் ரஜினிகாந்த்தைப் போலப் பேசுவதும் எம்.ஜி.ஆரைப் போல ஆடுவதுமாக நம்முடைய வாக்குகளைக் கவருவதற்கு முயற்சிக்கின்றனர்.

அவர்களுடைய திறமையைக் கண்டு இதில் நாம் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்தியர்கள் சினிமா மோகத்தில் திளைத்துக் கிடக்கின்றனர், எனவே இந்த வழியில் சுலபத்தில் வாக்குகளை வளைத்துவிடலாம் என்ற அவர்களுடைய கீழ்த்தரமான எண்ணத்தையே இது காட்டுகிறது.

ஒரு வகையில் பார்த்தால் நமது சிந்தனைக்கும் விவேகத்திற்கும் இது சவாலாக அமைவது மட்டுமின்றி வாழைப் பழத்தில் ஊசியை நுழைப்பதைப் போல நமது சமூகத்தை இவர்கள் சிறுமைப்படுத்துவதாகவும் உள்ளது.

இப்படிப் பகல் வேஷம் போடுபவர்களைக் கூத்தாடிகளாகத்தான் நாம் பார்க்க வேண்டுமே ஒழிய ரஜினியைப் போல நன்றாகப் பேசுகிறார் எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாக ஆடுகிறார் என்று மெய் மறந்து ரசிக்கலாம்.

ஆண்டு முழுவதும் நம்மை மறந்துவிட்டுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது மட்டும் மேடையேறி ‘நான் தளபதி’, ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’, ‘நான் படையப்பா’, நான் அண்ணாத்த’, ‘கபாலிடா’, போன்ற வசனங்களைத் தமிழில் பேசி நம் இனத்தவரை, குறிப்பாக நகர் புறங்களுக்கு அப்பால் உள்ளவர்களைக் குஷிப்படுத்த எண்ணுகின்றனர் சில அரசியல்வாதிகள்.

அவர்களுடைய கோமாளித்தனத்தைப் பார்த்து, ரசித்து, கைதட்டி, ஆரவாரம் கூடச் செய்யலாம் ஆனால் அவை வாக்குகளாக மாறிவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பது அவசியமாகும்.

மலாய்க்காரர்களுக்கு 97% என்றும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு வெறும் 3%  மட்டுமே எனவும் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நமக்காக அந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஒரு நாதியில்லை.

ஒப்புக்காக ஆங்காங்கே சில சலசலப்பு, அப்புறம் யாரும் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதுதான் இந்நாடடில் காலங்காலமாக நமது தலை விதியாக உள்ளது.

இதுபோன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்துத் துணிச்சலாக யாரும் மேடைகளில் பேசுவது இல்லை, யாரும் கேள்வி எழுப்புவதும் இல்லை. வாக்குகள் கேட்டுக் கூத்தடிக்க மட்டும் வந்துவிடுவார்கள்.

ஏற்கெனவே கடந்த காலங்களில் இந்தியர்களுக்கு ‘ஆட்டுக் கறி உணவு போட்டால் ஓட்டுக் கிடைக்கும்’ எனும் அவப் பெயரை நம் இனம் சுமந்து நிற்கிறது.

சினிமா வசனங்களுக்கும் ஆட்டுக் கறிக்கும் சோரம் போகும் காலம் கடந்துவிட்டது எனச் சம்மட்டியால் அடித்த மாதிரி சில அரசியல்வாதிகளுக்கு நாம் உணர்த்துவது அவசியமாகும்.

ஆண்டாண்டு காலமாகப் பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தைச் சூறையாடிக் கொண்டிருப்போர் மற்றும் ஏழை இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘மித்ரா’ உதவி நிதியைச் சரமாரியாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருப்பவர்கள் பிரச்சாரங்களுக்கு வந்தால் அவர்களை அடையாளம் கண்டு, உதாசீனப்படுத்தித் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

நகர்ப் புறங்களுக்கு அப்பால் உள்ளவர்கள் மட்டுமின்றிப் பிரதான நகரங்களில் உள்ள வாக்காளர்களும் கவனமாகவும் விவேகமாகவும் சிந்தித்துத் தங்களுடைய வாக்கின் வலிமையைத் தைரியமாகக் காட்டுவது அவர்களுடைய ஜனநாயக உரிமையாகும்.

note- added picture was taken from file and not an election campaign picture