இராகவன் கருப்பையா – கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று கண்டதைப் போன்ற இன்னொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
தீபகற்ப மலேசியாவில் மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பாரிசான் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள போதிலும் மக்களின் ஆதரவு அக்கூட்டணிக்குத் திரும்பியுள்ளது என்று பொருள்படாது.
மக்களைத் திசை திருப்புவதற்காக அம்னோ, ம.சீ.ச., ம.இ.கா. ஆகிய 3 கட்சிகளும் வெறுமனே பிதற்றிக் கொள்கின்றன என்பதுதான் உண்மை.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கின்றன என்பது ஒரு புறமிருக்க அவற்றுள் தலைமைத்துவ மாற்றங்கள் நிகழ வேண்டிய காலம் கணிந்துவிட்டது.
எதிரணியில் அன்வார் மட்டும்தான் பிரதமராவதற்குத் தகுதியுடையவர் எனும் மனப்போக்கு முதலில் மாறவேண்டும். அண்மைய காலமாக மலேசிய அரசியலில் நிகழ்ந்து வரும் துரித மாற்றங்களை வைத்துப் பார்த்தால் அன்வாரின் காலம் கடந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
பி.கே.ஆர். கட்சிக்கு அன்வார் தலைவராக இருப்பதாலோ என்னவோ அவருடைய மகள் நூருல் இஸ்ஸா பின் வரிசையிலேயே இருக்கிறார். பெர்மத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அவரை முன்னிலைக்குக் கொண்டுவந்து, தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுப்பது பற்றி அன்வார் சிந்திக்க வேண்டும்.
அக்கட்சியின் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி தீவிர அரசியலுக்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து எதிர் தரப்பில் பரவலான ஒரு உத்வேகம் பிறந்துள்ளதைப் போல் தெரிகிறது. எதிர்வரும் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
நூருல், ரஃபிஸி, பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஹ்மி ஃபட்ஸில், முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் லியூ சின் தோங் போன்ற திறமை மிக்க இளம் அரசியல்வாதிகளை முன்னிறுத்தி தீவிர அரசியலில் இருந்து அன்வார் ஒதுங்கி ஆலோசகர் பொறுப்பில் அமர வேண்டும்.
வாக்காளர்களின் வயது வரம்பு 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிட்டதட்ட 6 மில்லியன் புதிய இளம் வாக்காளர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதியாகின்றனர்.
இவர்களைக் குறி வைத்துத்தான் சைட் சாடிக்கின் மூடா கட்சி களமிறங்கியுள்ளது என்ற போதிலும் இளமையான தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதன் வழி பி.கே.ஆர். கட்சியும் அவர்களைக் கவருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இதற்கிடையே ஜ.செ.க.வின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் 56 ஆண்டுக் கால அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைப் போல அமானாவின் முஹமட் சாபுவும் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வழிவிடும் தருணம் வந்துவிட்டது.
ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சாமாட் போன்றத் துடிப்பு மிக்கத் திறமையானவர்கள் கட்சியை வழி நடத்த வேண்டும்.
மலேசியாவில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் எனும் நிலை உள்ளதால் பி.கே.ஆர். மட்டுமின்றி அமானா கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட அப்பதவியை அலங்கரிக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே அடுத்த பொதுத் தேர்தலில் இளையோர்களின் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுவதால் பக்காத்தானைச் சேர்ந்த எல்லா கட்சிகளுமே இளமைத் தோற்றத்திற்கு உருமாறுவது அவசியமாகும்.
அதோடு மூடா கட்சியைக் கூட்டணியில் இணைப்பது குறித்தும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இன்னும் 1 வயது கூட ஆகாத அக்கட்சி அண்மைய ஜொகூர் மாநிலத் தேர்தலில் 48,000 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மறந்தும் கூட முஹிடின் யாசினின் பெர்சத்துவை சேர்த்துவிடக் கூடாது. பக்காத்தான் ஆட்சிக் கவிழ்ந்ததற்கு மகாதீர் மட்டுமின்றி பிரதமர் பதவி மீது ரகசியமாகக் குறி வைத்திருந்த முஹிடினும் ஒரு முக்கியக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அது ஒரு புறமிருக்க அக்கட்சி விரைவில் அஸ்தமனமாகும் தறுவாயில் இருப்பதைப் போலவும் தெரிகிறது.
அதே சமயம் மகாதீரின் உந்துதலின் பேரில் பிரதமராகும் ஒரே இலக்கைக் கொண்டு தீபகற்ப மலேசியாவிற்குள் தனது வாரிசான் கட்சியை ஊடுருவச் செய்துள்ள ஷாஃபி அப்டாலின் ஜம்பம் இப்போதைக்கு எடுபடாது.
தனது மகன் முக்ரிஸின் அரசியல் வாழ்க்கைக்கு விளக்கேற்ற வேண்டும் எனும் சுயநலப் பின்னணியில் மகாதீர் தோற்றுவித்த பெஜுவாங் கட்சி எழுவதற்கு முன்பே மடிந்துவிடும் நிலையில் உள்ளது. ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் இதற்குச் சான்று. அக்கட்சி போட்டியிட்ட எல்லா 42 தொகுதிகளிலும் வைப்புப் தொகையை அது இழந்து படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படலாம் எனும் சூழல் நிலவுவதால் பக்காத்தான் கூட்டணி சற்றும் காலம் தாழ்த்தாமல் தேவையான வியூகங்களை உடனே வரைவது அவசியமாகும்.