அரசியல் அறிமுகம் – சுந்தர் சுப்ரமணியம்

இராகவன் கருப்பையா – முன்னாள் ம.இ.கா. துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையா. இவர் 5 தவணைகளுக்கு ஜொகூரின் செகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடைய மகன் சுந்தர், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட வாரிசான் கட்சி தீபகற்ப மலேசியாவில் கால் பதிக்கும் பொருட்டு மேற்கொண்டுவரும் தீவிர முயற்சிகளில் ஒரு  பகுதியாக செகாமாட் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராகச் சுந்தரை நியமனம் செய்துள்ளது. அதற்கேற்றவாறு  சுந்தரும் அத்தொகுதியில் தன்னை நன்றாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் தற்போது முடுக்கிவிட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலின் போது அந்த வட்டாரத்தில் போட்டியிட்ட வாரிசான் கட்சி வேட்பாளர்களுக்கு நேரடியாக அவர் களமிறங்கி தீவிரப் பிரச்சாரம் செய்ததை மக்கள் கவனிக்காமல் இல்லை.

செகாமாட் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சி புத்தகங்களைக் கடந்த மாத பிற்பகுயில் வழங்கிய சுந்தர் அவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் இதர பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்ததாகச் செய்திகள் வெளியாகின.

அவருடையத் தந்தை சுப்ரமணியம் சின்னையா கடந்த 1982ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரையில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றினார்.

கடந்த 80ஆம் ஆண்டுகளிலும் 90ஆம் ஆண்டுகளிலும் ம.இ.கா.வின் மிக ஆற்றல் மிக்கத் தலைவராக விளங்கிய அவர் மலேசிய வரலாற்றில் நீண்ட நாள் துணையமைச்சராக  இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்வாருக்கு மகாதீர் எப்படியோ அதேபோல்தான் சுப்ரமணியத்திற்கு சாமிவேலு அக்காலகட்டத்தில் இருந்தார் என்பது தற்போதைய இளையோர்  நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து அவர் நோயுற்றிருக்கும் நிலையில் அவருடைய 44 வயது இளைய மகன் சுந்தர் தற்போது அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இடைப்பட்ட  காலத்தில் ம.இ.கா. சார்பாக செகாமாட் தொகுதியில் அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு சில தரப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்று நம்பப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து 3 தவணைகளுக்கு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் ம.இ.கா. தலைவர் சுப்ரமணியம் சதாசிவம் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போதனா பக்காத்தான் அலையில் மன்னைக்கவ்வினார்.

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் தனது மருத்துவத் தொழிலுக்கே மீண்டும் திரும்பியுள்ள நிலையில் ம.இ.கா.வை பிரதிநிதித்து அடுத்த பொதுத் தேர்தலில் அங்கு யார் போட்டியிடுவார் என்று தெரியவில்லை. அங்கு மலாய்க்காரர்களும் சீனர்களும் 88%கும் மேல் இருப்பதால் ம.இ.கா.விற்கு மீண்டும் அத்தொகுதி கிடைக்குமா என்று கூட உறுதியாகச் சொல்ல முடியாது.

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர குமார் 2020ஆம் ஆண்டில் கட்சிக்கும் வாக்காளர்களுக்கும் துரோகமிழைத்து அரசியல் தவளையாக மாறியதால்  அப்பகுதியில் இனி அவர் தலை காட்டவே முடியாது என்பது உறுதி.

தொகுதி மக்கள் அவர் மேல் உள்ள கோபத்தில் பி.கே.ஆர். கட்சியின் புதிய வேட்பாளருக்கு எவ்வாறான ஆதரவு வழங்குவார்கள் என்று இப்போதைக்கு யூகிக்க முடியாது.

எனினும் அவர்களைச் சுந்தர் எப்படி கவர போகிறார் என்பதுதான் கேள்விக்குறி. அவருடையத் தந்தை தனது 32ஆவது வயதிலேயே துணையமைச்சருக்கு சமமான நாடாளுமன்றச் செயலாளராக இருந்தவர். ஆனால் சுந்தர் இப்போதுதான் தீவிர அரசியலில் நுழைகிறார்.

அது ஒரு புறமிருக்க வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி அப்டால் எப்படியாவது பிரதமராகிவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில்தான் மேற்கு மலேசியாவில் தனது சிறகுகளை விரிக்க முற்பட்டுள்ளார். தீபகற்ப மலேசியாவில் அக்கட்சிக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை அண்மைய ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகப்   புலப்படுத்தியுள்ளன. போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் அது படுதோல்வியடைந்ததானது மேற்கு மலேசியர்கள் அக்கட்சியை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்னும் கனியவில்லை  என்பதையே காட்டுகிறது.

இருப்பினும் தனது தந்தையின் கடந்த காலச் சேவைகளை மையமாக வைத்து செகாமாட் தொகுதியின் மூத்த வாக்காளர்களை தன் வசம் இழுப்பதற்கான வாய்ப்புகள் சுந்தருக்கு உள்ளன. சுப்ரமணியம் சின்னையா அத்தொகுதியில் சேவையாற்றி 18 ஆண்டுகள்  கடந்துவிட்ட நிலையில் தற்போதைய இளையோர் அவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆக அத்தொகுதியில் சுந்தர் போட்டியிடுவது உறுதியானால் எம்மாதிரியான வியூகங்களை அவர் கையாள்வார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.