பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகளை அகற்ற வேண்டும்

தமிழ் ஈழ இராணுவ அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை, மலேசியப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து அகற்றக் கோரும் வழக்கு, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த 2020 அக்டோபர் 9-ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் விரிவாக்கத்தைக் கடந்த 2021 ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக மனுதாரர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

வருகிற ஏப்ரல் 14-இல், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்களான, அருள் மேத்யூசு, ஓமார் குட்டி, முகமது பர்அன், க கலைநிலா, லிம் வெய் ஜெய்ட் மற்றும் அம்பிகா ஆகியோர் இணைந்திருக்கின்றனர் என்றும் வீ பாலமுருகன் கூறினார்.

சிங்களப் பவுத்த இனவெறி அரசால், இனப்படுகொலைக்கு இலக்கான தமிழ் மக்களைக் காக்க போரிட்ட, தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கம், கடந்த 2009-ஆம் ஆண்டே செயலிழந்தது என்பது அனைவரும் அறிந்தது.

செயலிழந்த இயக்கத்தை, அதுவும் 5 ஆண்டுகளுக்குப் பின்னர், 2014-ஆம் ஆண்டு மலேசியப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தது தவறு என்றும், மேலும் பயங்கரவாதப் பட்டியலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை உள்துறை அமைச்சு மறுபரிசீலனைச் செய்ய வேண்டிய அரசிலமைப்பு விதிமுறையைக் கடைபிடிக்காமல், இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து வருவது தவறு என்றும் பாலமுருகன் தனது வழக்கறிஞர்கள் வழி தனது சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

ஈழப் படுகொலைக்கு அனுதாபம் காட்டி, நீதி வேண்டிக் குரல்கொடுத்த காரணத்திற்காக, விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என வீ பாலமுருகன் உட்பட 11 தமிழர்கள் சொஸ்மா சட்டத்தில் 5 மாதத் தடுப்பு காவலுக்குப் பின்னர், விடுவிக்கப்பட்டனர். அவ்வழக்கை சட்டத்துறை மீட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.