தமிழர் புத்தாண்டு வரலாறு – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். எது தமிழர் இனத்தின் புத்தாண்டு.?

உலகில் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்கும் தமது புத்தாண்டு எது என்பது தெரிகிறது. ஆனால், தமிழர்கள் நமக்கு மட்டும் தையா? சித்திரையா? என்னும் குழப்பநிலை சர்ச்சை நூற்றாண்டிலும் நிலவுகிறது

நம்முடைய வரலாற்றை நாம் அறிந்து விடக்கூடாது என. சில அந்நிய சூழ்ச்சி சக்தி வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நம்முடைய வரலாற்றை நாம் கட்டாயம் அறிந்து, தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்

அவ்வகையில், தமிழர் புத்தாண்டு வரலாற்றை அனைத்து தமிழர்களும் அறிந்துகொள்ளும் நோக்கில் இக்கட்டுரையை எழுதுகிறோம்.

ஆதியில் தமிழர் புத்தாண்டு தை மாதத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

நம்முடைய பழங்கால, சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவைகளில் தைத்திங்கள் சிறப்பைப் போற்றும் சான்றுகள் உள்ளன.

தமிழர்கள் திணை வழி வாழ்வியல் மரபைக் கொண்டவர்கள்.

ஆதியில், குறிஞ்சித் திணையில், கால மரபுக்குத் தை மாதம் ஆண்டு தொடக்கமாக அமைந்துள்ளச் செய்தி நம் கருத்தை மறுப்பவர்கள் ஏற்கும் வட நூலான  மகாபாரத்தில் வியாசகர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பின்பு, முல்லைத் திணையில் கால மரபுக்கு ஏற்ப ஆவணியில் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதுவே, தொல்காப்பியர் இருந்த இரண்டாம் தமிழ் சங்கக் காலம் ஆகும்.

நச்சினார்க்கினியர் சிங்கவோரையில் (ஆவணியில்) ஆண்டு தொடக்கம் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

ஆவணியில் ஆண்டு தொடக்கத்தை இன்றுவரை சேரலத்து மரபைச் சேர்ந்த கேரள மக்கள் பின்பற்றி வருகின்றனர். பாண்டிய, சோழ மரபினர் இடையே இவ்வழக்கம் மாறிவிட்டது

இதற்குப் பின்னரே வானியல் கணக்கோடு இசையப் பெற்றதாக அயண வழி ஆண்டு முறையாகும்.

கிமு 317 ஆம் ஆண்டுக்குப் பின், நடு வட இந்தியாவை ஆட்சி செய்த சாலிவாகனன் என்ற மராட்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட சாலிவாகன சகம் என்ற ஆண்டு முறை, சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு, பழந்தமிழர் முறையும் ஆரிய முறையும் கலந்து போன நிலையான விழா முறையைக் கடைச்சங்க காலத்தை ஒட்டிய சோழர்களால் கடைபிடிக்கப்பட்டது

பிற்காலத்தில் வல்லாளுமை முறையில் ஆரிய வழியினர் பல்லவர் காலம் முதல், இன்றுவரை சித்திரையைப் புத்தாண்டாக வயப்படுத்திக் கொண்டனர்.

இதற்கிடையில், சித்திரையை ஒரு சமய விழாவாக உருமாற்றம் செய்து, ஏற்க முடியாத நிலையில் சிறுமைபடுத்தப்பட்டும்  உள்ளது.

குறிப்பாக, அறுபது ஆண்டு சுழற்சி என்பது கிருஷ்ணரும் நாரதரும் புனைந்து 60 பிள்ளைகளைப் பெற்றதாகக் கூறப்படுவதுடன்,  இந்த அறுபது ஆண்டு பெயர்களும் ஒன்று கூட தமிழில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

சித்திரை புத்தாண்டு தமிழர் மரபுக்கும் வாழ்வியலுக்கும் ஒவ்வாத நிலையை அறிந்த தமிழ் அறிஞர்கள், ஓர் இனம் சார்ந்த தமிழர் தொடராண்டு ஒன்று உருவாக்கம் பெற வேண்டும் என்பதை உணர்ந்தனர்.

இதனடிப்படையில், 1921ஆம் ஆண்டில் தமிழறிஞர்கள் சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, 18.11.1935 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளுவர் தொடராண்டு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தைத்திங்கள் முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் என ஏற்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

தைத்திங்கள் முதல் நாளில் வரும் பொங்கல் திருநாளை அனைத்து தமிழர்களும் சமயம் மதம் பாராமல் கொண்டாடுவது இனம் சார்ந்த விழாவாக உள்ளது.

இதுவே, இன்றைய கால மரபுக்குத் தைத்திங்கள் முதல் நாளே தமிழர்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுவது மிகப் பொருத்தமாக அமைகிறது.

அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டில் தமிழர்களின் ஆண்டின் முதல் மாதம் தை மாதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் தங்கள் ஆண்டு தொடக்கத்தைத் தை முதல் நாளில் தான் தொடங்கியுள்ளார்கள் என்பதற்கு இந்தக் கல்வெட்டும் ஒரு சான்றாகும்.

இதனை அடிப்படையாக கொண்டு, 1971ஆம் ஆண்டில் தையில் புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பான அரசாணையைத் தமிழ்நாட்டு அரசு வெளியிட்டது.

தைத்திங்கள் முதல் நாளே, தமிழர் புத்தாண்டு என மக்கள் மத்தியிலும் அரசு ஆவணங்களிலும் எல்லா நாளிதழ்களிலும், குறிப்பாக இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் மத்தியில் அமலாக்கம் பெற்று தொடர்ச்சியாக இன்றுவரை வழக்கமாகிவிட்டது.

தமிழருடையப் புத்தாண்டு என்பது கால மரபுக்கு ஏற்ப மாறி வந்துள்ளது என்பது நமக்கு தெளிவாகிறது.

ஆகையால், இன்றையக் கால சூழலுக்கு ஏற்ப தைப் பொங்கலைத் தமிழர் புத்தாண்டு ஆகவும், திருவள்ளுவர் ஆண்டு தொடக்கமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தை முதல் நாளே தமிழர் இனத்தின் புத்தாண்டு.

இணைவோம் ஒன்றாக, வெல்வோம் தமிழராக!


பாலமுருகன் வீராசாமி, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்