இராகவன் கருப்பையா – சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் இலாகாவில் துணையமைச்சராக இருந்த முருகையா தனது அரசியல் பயணத்தைத் தொடருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார்.
இப்போது ம.இ.கா.வின் உதவித் தலைவராக இருக்கும் அவர் அடுத்த பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகுயின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் கிட்டதட்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினரைப் போலவே அங்கு முகாமிட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் தனது இலாகாவில் ஒரு துணை அமைச்சராக அவரை நியமனம் செய்த அப்போதையப் பிரதமர் நஜிப், பொது மக்களின் புகார்களைக் கையாள்வதற்கான பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் முருகையா பி.பி.பி. கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருந்தார்.
மிகுந்த உற்சாகத்துடன் தனது பணிகளை மேற்கொண்ட அவர் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் அச்சமயத்தில் ஒரு ‘ஹீரோ’வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கட்சித் தலைவர் கேவியஸுடன் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலில் மாட்டிக்கொண்ட முருகையா இரண்டே ஆண்டுகளில் அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
அதன் பிறகு ம.இ.கா.வில் இணைந்த அவர் கிடுகிடுவென உயர்ந்து அக்கட்சியின் உதவித் தலைவர் பதவியை எட்டிப்பிடிதார். சுமார் 5 மாதங்களுக்கு முன் நடைபெற்ற ம.இ.கா. தேர்தலில் தனது பதவியை வெற்றிகரமாக தற்காத்துக் கொண்ட 58 வயது முருகையா ஒரு சிறந்த சேவையாளர் என்பது மறுப்பதற்கில்லை.
எனினும் தெலுக் இந்தான் தொகுதியில் அவர் போட்டியிடுவாரேயானால் அவருடைய வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதைக்குக் கணிக்க இயலாது. இதுவரையில் அவர் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் தேர்வு செய்யப்படக் கூடும் என அரசல் புரசலாக செய்தி வெளியானது. ஆனால் அத்தொகுதியை ம.இ.கா.விடமிருந்து திடீரென அம்னோ தட்டிப் பறித்துக் கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தெலுக் இந்தான் தொகுதியில் ஜ.செ.க.வின் ஙா கோர் மிங் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அக்கட்சியின் பலமிக்கத் தலைவர்களில் ஒருவரான அவரைத் தோற்கடிப்பது அவ்வளவு சுலபமானக் காரியமில்லை. பக்காத்தான் ஆட்சியின் போது நாடாளுமன்றத் துணை சபாநாயகராக அவர் பொறுப்பு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அத்தொகுதியில் களமிறங்கி தீவிரமாக சேவையாற்றி வரும் முருகையா ஓரளவு மக்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார் என்பதும் உண்மைதான்.
அண்மையில் இலவச ரத்த பரிசோதனை முகாம் ஒன்றை அங்கு ஏற்பாடு செய்திருந்த அவர், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கணினி அறையொன்றை அமைப்பதற்கு மானியம் வழங்குவதற்கும் உறுதியளித்தார்.
பி40 தரப்பைச் சேர்ந்த வசதி குறைந்த பல்லின மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்குவது மற்றும் நோன்புத் திறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றுவருகிறார்.
இருந்த போதிலும் தேர்தல் என்று வரும் போது மக்கள் பொதுவாக இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை. நம் நாட்டை பொருத்த வரையில் பெரும்பாலான சமயங்களில் எந்தக் கட்சி, எந்தக் கூட்டணி என்று பார்த்துதான் மக்கள் வாக்களிக்கின்றனர். காலங்காலமாக இதுதான் இந்நாட்டின் அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
மலாக்காவிலும் ஜொகூரிலும் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் ம.இ.கா. வேட்பாளர்கள் கணிசமான அளவு வெற்றி பெற்றது ஏதோ உண்மைதான். ஆனால் அந்த வெற்றிகள் பாரிசான் எனும் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியே ஒழிய ம.இ.கா.வின் நேரடி வெற்றியல்ல என்பதை யாராலும் மறுக்க இயலாது.
பி.பி.பி.யிலும் பிறகு ம.இ.கா.விலும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேல் கட்சி ரீதியில் முக்கியப் பங்காற்றியுள்ள முருகையாவுக்கு பொதுத் தேர்தல் அனுபவம் இல்லாத போதிலும் தெலுக் இந்தானில் அவருடைய அனுகுமுறை இதுவரையில் சிறப்பாகவே உள்ளது.
இருந்த போதிலும் எதிர்கட்சியின் இரும்புக் கோட்டையான தெலுக் இந்தானில் பாதம் பதிக்கத் துணிந்திருக்கும் அவருடைய அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.