பல ஆண்டுகளாக, நாங்கள் (சுவாராம்) ஏராளமான மனித உரிமை மீறல் வழக்குகளைப் பெற்று வருகிறோம். அவற்றுள் பெரும்பாலும் காவல்துறையின் முறைகேடு அல்லது அதிகார அத்துமீறல் தொடர்பான வழக்குகளே எங்களை நாடி வரும். அதோடு, மிரட்டல், ஊழல் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.
அவ்வகையில், 2020-ஆம் ஆண்டில் நாங்கள் கையாண்ட வழக்குகளில் ஒன்று ரமேஸின் கொத்தடிமை
தொழிலாளர் வழக்கு. மலேசியாவில், நவீன கால அடிமைத்தனத்தால் பாதிக்கப்படுபவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே என்ற பொதுவான கண்ணோட்டம் நம்மில் பலரிடையே இருந்தாலும், அது ஒரு தவறான பார்வை என்பதனை ரமேஸ் போன்றோரின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. பல மலேசியத் தொழிலாளர்கள் தங்கள் வாங்கியக் கடனை அடைக்க, வலுக்கட்டாயமாகக் கொத்தடிமைகளாக்கப்படுவது இதுபோன்ற கதைகளின் வழி தெரிவருகிறது.
நெகிரி செம்பிலான், ஜெம்போல் மாவட்டத்தில் அமைந்துள்ள பகாவ், சீன மொழியில் இருந்து பெறப்பட்ட சொற்றொடர் என நம்பப்படுகிறது; இதற்கு குதிரையின் வாய்
என்று பொருள். சிறிய கிராமப்புற நகரமான பகாவ், பல்வேறு நகரங்களுக்கு மையப் புள்ளியாக அல்லது நான்கு வெவ்வேறு மாநிலங்களான மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் பகாங் ஆகியவற்றிற்கு இணைப்பு நகரமாக விளங்குகிறது.
வெள்ளி
(Tin) தாது தேடிவந்த சீனக் குடியேற்றவாசிகளால் உருவாக்கப்பட்ட பகாவ், இரப்பர், செம்பனை எண்ணெய் மற்றும் மரக்கட்டை விநியோகத்திற்கான தங்கச் சுரங்கமாக வளர்ச்சி கண்டது. சமூகப் பன்முகத்தன்மையைக் கொண்ட பகாவ், முக்கியமாக சீனர், மலாய்க்காரர்களை உள்ளடக்கியது; அவர்கள் பகாவ் புறநகரைச் சுற்றியுள்ள ஃபெல்டா (Felda) குடியிருப்புகளில் குடியமர்ந்த வேளை, தலைமுறை தலைமுறையாகத் தோட்டத்தில் வசித்து வந்து இந்தியர்கள், தோட்டம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
தோட்டங்களில் முக்கியத் தொழிலாளர்களாக மலேசிய இந்தியர்கள் இருந்தனர்; மலாய்க்காரர்கள் ஃபெல்டா குடியிருப்புகளில் சமூகப்-பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் தோட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள குடியேற்றங்களிலும், தொழிலாளர்களுக்கு அடிமட்ட ஊதியம் வழங்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தன[1].
கொத்தடிமை
என்பது கட்டாய உழைப்பின் ஒரு வடிவமாகும், இது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் தங்கள் கடனை அடைப்பதற்காக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் சூழலில் உருவாகிறது. பெரும்பாலும் அவர்கள் ஏமாற்றப்பட்டு, தவறாக கையாளப்பட்டு, கொத்தடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். அவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படும், சில வேளைகளில் அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. கொத்தடிமை தொழிலாளர்களின் கடனுக்கு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கப்படுவதில்லை; அவர்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி அல்லது சம்பாதித்த அனைத்துப் பணமும் அவர்களது கடனை அடைப்பதற்கு வலுகட்டாயமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) கூற்றுப்படி, உலகளாவிய நிலையில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், கட்டாயத் தொழிலாளர்கள்
விஷயத்தில் 11, 700, 000 தொழிலாளர்களுடன் ஆசியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள 28 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகக் கட்டாயத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் நாடாக, மலேசியா 14-வது இடத்தில் உள்ளது என 2018-ஆம் ஆண்டின் உலகளாவிய அடிமைக் குறியீடு கூறுகிறது.
பல சந்தர்ப்பங்களில், கடனை அடைக்க முடியாததால், தொழிலாளர்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்க முடியாமல் அடக்குமுறைக்கு அடிபணிந்தே கிடப்பார்கள். ஐ.எல்.ஓ. கூற்றுப்படி, கொத்தடிமை
என்பது தொழிலாளி-கடனாளி மற்றும் முதலாளி-கடன் வழங்குபவருக்கு இடையே உள்ள அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கிறது. நிர்ணயிக்கப்படாத அல்லது குறிப்பிடப்படாத காலத்திற்கு, தொழிலாளியை முதலாளியிடம் பிணைக்கும் விளைவை இது கொண்டுள்ளது [1]. சில வருடங்களுக்கு அல்லது சில சமயங்களில் அடுத்தடுத்த தலைமுறைகள் வரையிலும் கூட தொழிலாளியை முதலாளியிடம் இது கட்டிப்போட்டு வைக்கும்.
பகாவில், ஒரு தோட்டத்தில், சசி (முதலாளி) என்று அழைக்கப்பட்ட குத்தகையாளரிடம், தினசரி சம்பளத்தில் ரமேஸ் வேலை செய்து வந்தார். ரமேஷ் தனது முதலாளியால் வழங்கப்படும் பணிகளை முறையாக செய்து வந்ததால், அருகிலுள்ள தோட்டங்களில் உள்ள வேலைகளையும் கவனித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ரமேஸ் செம்பனை தோட்டத்தில் குழி தோண்டுதல், நிலத்தை உழுதல், மரக்கன்றுகளை நடுதல், உரம் இடுதல், நாற்றுகளைப் பாதுகாப்பது என பல வேலைகளை மேற்கொள்ள வேண்டும். சில சமயங்களில், வேலைகள் குறிப்பிடப்பட்டவற்றை விட அதிகமாக இருக்கும்.
ஒருநாள், குடியிருப்பிற்கு அருகில் வசித்த தொழிலாளி ஒருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடிவிட்டார் எனக் கூறி, ரமேஸ் பகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். வியப்பூட்டும் வகையில், நீதிமன்றத்தில் ரமேஸுக்கான ஜாமீன் தொகையைச் செலுத்திய அவரது முதலாளி, அக்கடனை அடைக்கும் வரை ரமேஸ் தனது மனைவியுடன் தோட்டத்தில் தங்கி வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ரமேஸும் அவரது மனைவியும் அதற்குக் சம்மதித்தனர்; உள்ளூர் மக்களால் குடுகுடு
[2] எஸ்டேட் என்று அழைக்கப்படும் குட்வுட் (GoodWood) தோட்டத்திற்குக் குடிபெயர்ந்தனர். சசி அந்தத் தோட்டத்தின் முக்கிய குத்தகையாளர்களில் ஒருவர், அதுமட்டுமின்றி தோட்டத்தில் வேறு பல வேலைகளும் சசியின் மேற்பார்வையில் இருந்தன. ரமேஸ் சசியிடம் கொத்தடிமையாக வேலை செய்யத் தொடங்கினார். இங்குதான், சசி மற்றும் சசியின் கீழ் பணிபுரிபவர்களான அந்த இடத்தின் மேற்பார்வையாளர்களால் ரமேஸ் இடைவிடாத பல சிக்கல்களை அனுபவிக்கத் தொடங்கினார்.
“நாங்கள் தங்கியிருந்த குடுகுடு எஸ்டேட்டில் இன்னும் பல தொழிலாளர்கள் இருந்தனர். சசியின் ஆட்கள் எங்களை அடிமைகளைப் போல நடத்தினார்கள், வேலைக்குத் தாமதமானால் அடிப்பார்கள், சிறிய தவறுகளுக்குக் கூட எங்களைத் திட்டுவார்கள். எங்களுக்குப் போதிய சம்பளம் வழங்கவில்லை, இதனால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாக, நாங்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி, ஸ்ரீ ரொம்பினில் உள்ள எங்கள் வீட்டிற்குத் திரும்பினோம்,” என்று 24 வயதான ரமேஸ் கூறினார்.
ரமேஸின் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவர் தனது முதலாளியிடம் நல்ல ஊதியம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது மறுக்கப்பட்டது. பகாவில், சசிக்குத் தோட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் குத்தகைகள் இருந்ததால், ரமேஸுக்குத் தோட்டங்களுக்குள் வேலை செய்தால் நாளொன்றுக்கு RM42-உம், தோட்டத்திற்கு வெளியே வேலை செய்தால் RM50 எனவும் வழங்கப்பட்டது.
“என் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதும், எனக்கு உதவ ஒரு வழக்குரைஞர் இருப்பதும் எனக்குத் தெரியும். நீதிமன்ற வழக்கு தீர்வுக்கு வரும், ஜாமீன் தொகையைத் திருப்பித் தந்துவிடலாம் என எதிர்பார்த்தேன்; ஆனால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது,” என்று ரமேஸ் மேலும் கூறினார்.
வழக்கு ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருந்ததால், தனது கடனைத் தீர்க்க ரமேஸ் வேறு வழிகளைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், கோவிட் -19 காரணமாக, தனது முதலாளியிடமே தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தென்படவில்லை[3].
“2020, அக்டோபர் 9, அன்று காலை, ஒரு வெள்ளை நிற ஹைலக்ஸில் ஶ்ரீ ரொம்பினில் உள்ள எனது வீட்டிற்கு வந்த எனது மேலதிகாரியும் மூன்று துணை அதிகாரிகளும், என்னைக் கட்டாயப்படுத்தி பகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். என் வழக்கு இன்னும் தீர்வுக்கு வரவில்லை என்ற எண்ணத்தில் இருந்த நான், அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நீதிமன்றத்தில், முதலாளி எனக்கு வழங்கிய ஜாமீனை இரத்து செய்து, என்னைச் சிறையில் அடைக்க முயன்றார். ஆனால், அது ஒரு முறையான விண்ணப்பமாக இல்லாததால், நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. அதன் பிறகு, நாங்கள் மீண்டும் குடுகுடு எஸ்டேட்டில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று ரமேஸ் அந்தத் திடுக்கிடும் சம்பவத்தை விளக்கினார்.
இந்தச் சம்பவத்தால், ரமேஸைப் பிரதிநிதிக்கும் சுவாராம் வழக்கறிஞர் சசிதேவனும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ரமேஸ் மனைவியின் நண்பரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார். இது குறித்து சசிதேவன் கூறுகையில், “அதிகாலையிலேயே குழப்பமான அந்த அழைப்பு வந்ததால், உடனடியாக நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அந்தக் காலை நேரத்தில், நீதிமன்றத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் காரணத்திற்காக தேதியை நான் மாற்றிவிட்டேனா என்பதைச் சரிபார்க்க நீதிமன்றத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் நான் குழப்பமடைந்தேன்.
இருந்தபோதிலும், அன்று காலை கோலாலம்பூரில் இருந்து நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தேன். நான் நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிமன்றத்தின் முன் காத்திருப்புப் பகுதியில் ஏராளமான ஆண்கள் மோட்டார் சைக்கிளில் குவிந்திருப்பதைக் கண்டேன். நான் உடனடியாக நீதிமன்றத்தில் சரிபார்த்தேன், ரமேஸின் வழக்கு அன்றைய செவிமடுப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. நான் காத்திருப்புப் பகுதியில் அமர்ந்திருந்த பிணை (ஜாமீன்) எடுப்பவரிடம் பேச முயற்சித்தேன். ஜாமீனை இரத்து செய்து, ரமேஸை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக அந்தப் பெண்மணி சொன்னார். அவரை அவ்வாறு செய்யச் சொல்லி, ஒரு போலீஸ்காரர் அறிவுறுத்தியுள்ளார். வழக்குரைஞரின் கூற்றுப்படி, அன்றைய தினம் ரமேஸின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, முன்பு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கேத் திரும்பும்படி வலியுறுத்தியுள்ளது.
“ஜாமீனை இரத்து செய்வது எனக்கு இது முதல் முறையல்ல, இந்த நீதிமன்றம் எவ்வாறு இதில் செயல்படும் என்பது எனக்குத் தெரியும், ஜாமீனை இரத்து செய்தால் ரமேஸை அன்றைய தினமே கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ரமேஸை ஜாமீனில் எடுக்க வேறு யாரும் இல்லை. எனவே, இது அவருக்கு நல்ல பாடத்தைப் புகட்டும்,” என்று சசிதேவனிடம் அந்த ஜாமீன்தாரப் பெண் தெரிவித்துள்ளார்.
முதலாளி சசியின் பணத்தைத் திருப்பிக் கொடுக்க, அவரும் அவரது மனைவியும் அல்லும் பகலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக ரமேஸ் கூறினார். சசி அவர்களை எப்படி வற்புறுத்தினார் என்று கேட்டபோது: “2020, அக்டோபர் 19 இரவு, எனது மேலதிகாரி மூவருடன் வந்து, அனுமதியின்றி என் வீட்டிற்குள் நுழைந்தார். பிறகு, என்னையும் என் மனைவியையும் வேலைக்கு அன்றிரவே புறப்படும்படி வற்புறுத்தினார்கள். நாங்கள் மறுத்ததால், சசி எனது மனைவிக்குக் காயம் விளைவிக்கப்போவதாகவும் அவரைப் பூட்டி வைக்கப்போவதாகவும் மிரட்டினார். அவர்கள் எங்களைச் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும்படி வற்புறுத்தினார்கள்; சசிக்கு நான் செலுத்த வேண்டிய ஜாமீன் பணக் கடனை அடைக்கவே இது எனக் காரணம் என்று கூறினார்கள்,” என்று ரமேஸ் கூறினார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரக்கமற்ற அந்த முதலாளியின் கீழ் வேலை செய்வது குறித்து ரமேஸுக்கும் அவரது மனைவிக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இருவரும் தோட்டத்தை விட்டு வெளியேறினர். ரமேஸுக்கு வேறு வழியேதும் இல்லாததால் குற்றத்தை ஒப்புக்கொண்டு, சசியின் ஜாமீன் பணத்தைத் திருப்பித் தந்தார். இதனால், சில மாதங்கள் சிறையில் இருந்த ரமேஸ், பின்னர் விடுதலையானார். இப்போது அவர் தனது மனைவியைப் பிரிந்து, பகாவிற்கு வெளியே வசிக்கிறார்.
ரமேஸின் இந்த நிலைமை பகாவ் மக்களுக்கு, குறிப்பாக அங்குள்ள இந்தியச் சமூகத்திற்குப் புதிதல்ல. பெருந்தோட்டங்களில் கொத்தடிமைத் தொழில் பரவலாக நடைமுறைபடுத்தப்படுவதை அவர்களில் பலர் அறிவர்.
மலேசியாவில், இந்தக் கொத்தடிமைத் தொழிலாளர் முறை 1980-களில் பரவலாக நடைமுறைக்கு வரலானது. ஆனால், அதற்கு முன்னமே, அனேகமாக சுதந்திரத்திற்கு முன்னமே இது தொடங்கிவிட்டது. மலேசியச் சட்டங்களை இந்த நடைமுறை மீறிய போதிலும், பல குத்தகையாளர்கள் இன்னமும் இந்த முறையைக் கடைப்பிடித்து, வணிகத்தில் அதிக இலாபத்தை ஈட்டுகின்றனர்.
80-களின் முற்பகுதியில் அம்பலப்படுத்தப்பட்ட மிகவும் கொடூரமான கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளில் ஒன்று தென் பகாங், ஃபெல்டா செலஞ்சார் அம்பாட் நரக எஸ்டேட்
(Hell Estate) ஆகும். ‘ஹெல் தோட்ட’ ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமை முறையில் சுரண்டப்பட்டதோடு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர்[4]. இதில் இளையர்களும் குழந்தைகளும் கூட அடங்குவர்.
- நாளை தொடரும்
தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை
சிவன் துரைசாமி, சுவாராம் தலைமை நிர்வாக அதிகாரி