இராகவன் கருப்பையா – வசதி குறைந்த இந்தியர்களின் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட மித்ரா நிதியை சம்பந்தமே இல்லாத சில பேர் பிரித்து மேய்ந்துள்ள நிலையில் அரசாங்கமும் அதற்குத் தெளிவான ஒரு விளக்கத்தைத் தர இயலாமல் அந்த விவகாரம் இன்னமும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
வஞ்சிக்கப்பட்ட நம் சமுதாயத்திற்காக கேள்வி எழுப்ப அரசாங்கத் தரப்பில் இயலாத நிலையில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரனும், அவ்வப்போது பத்துகாஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமாரும் மட்டுமே தொடர்ந்து இவ்விவகாரத்திற்கு ஒரு தீர்வு காணமுற்படுவதைப் போல் தெரிகிறது.
ஆனால் குலசேகரன் இந்த விசயத்தை மிகைப்படுத்தி வியாக்கியானம் செய்கிறார் என ம.இ.கா. உதவித் தலைவர் மோகன் அண்மையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களில் மொத்தம் 992,406 பேர் மித்ராவினால் பயனடைந்துள்ளனர் என ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா சாடிக் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என முன்னாள் மனிதவள அமைச்சருமான குலசேகரன் கூறினார்.
ஆனால் இந்த எண்ணிக்கை மலேசிய இந்தியர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் என்பதால் அவர்களுடைய பெயர்களை அறிவிக்குமாறு அவர் வலியுறுத்தியது வேடிக்கையாக இருந்தாலும் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் மோகனுடைய ஆதங்கம்தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த மித்ரா விவகாரத்தை குலசேகரன் மிகைப்படுத்தி இந்தியர்களை குழப்புகிறார் என்றும் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முற்படுகிறார் எனவும் மோகன் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதாக இல்லை.
பொது மக்கள் யாரும் குழம்பவில்லை. எல்லாருமே தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மித்ரா நிதியை களவாடியவர்ளின் யார் என்று தெரிய வேண்டும்.
மித்ரா நிதி உதவி தேவை படுவோருக்குச் சென்று சேர வேண்டிய பொது மக்களின் வரி பணம் என்பதால் குலசேகரனோ சிவகுமாரோ மட்டுமின்றி எந்த குப்னோ சுப்பனோ கூட கேள்வி எழுப்ப உரிமை உண்டு. மக்களின் பிரதிநிதி என்ற வகையில்தான் குலசேசரன் இவ்விவகாரத்திற்கு ஒரு தெளிவு காண முற்படுகிறார்.
ஹலிமாவும் கூட இதுவரையில் நமது ஐயங்களுக்கு வெளிச்சமூட்டியதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்திலும் மழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார். குலசேகரனோ, சிவகுமாரோ, ஜெலுத்தோங் உறுப்பினர் ராயரோ எழுப்பும் கேள்விகளுக்கு முறையாக பதிலுரைக்காமல் ‘போய் பசியாறுங்கள்’, போய் தோசை சாப்பிடுங்கள் என்று கிண்டல் பேசுகிறார்.
ஊழல் தடுப்பு ஆணையம் இவ்விகாரத்தை விசாரணை செய்கிறது என்றும் அதனால் இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன் சில பேரை கைது செய்து விசாரணை செய்தது. அப்படி கைது செய்யப்பட்டவர்களுக்குப் பின்னால் திரை மறைவில் இருந்து கொண்டு மித்ரா பணத்தை கையாடல் செய்த அரசியல் புள்ளிகள் யார் என்று இன்னமும் தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் நமது இந்திய சமூகம், குறிப்பாக பி40 தரப்பினர் நலிந்த வாழ்வாதாரத்தில் தொடர்ந்து தல்லாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அதைவிடுத்து, அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் ம.இ.கா.வுக்கு எதிரான மக்களின் காழ்ப்புணர்ச்சியை மேலும் மோசமாக்கும் என்பதுதான் உண்மை.