அன்வார் – நஜிப், பொது விவாதத்தால் மக்களுக்கு என்ன பயன்?

இராகவன் கருப்பையா – எதிர்கட்சித் தலைவர் அன்வாருக்கும் முன்னாள் பிரதமர் நஜிபுக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற பொது விவாதத்தினால் தாங்கள எவ்வித பயனும் அடையவில்லை என நாட்டின் வெகுசன மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அன்வார் முதற்கொண்டு இந்த பொது விவாதத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்பதே பலருடைய ஒருமித்தக் கருத்தாக உள்ளது.

உலக வரலாற்றில் ஆகப் பெரியத் திருட்டுச் சம்பவம் என அமெரிக்கா உள்பட அனைத்துலக ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட 1MDB வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட நஜிபுடன் விவாதத்தில் கலந்து கொண்டதன் வழி அன்வார் தனது நிலையைத் தாழ்த்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

‘தேசிய அவமானம்’ என நீதிபதியால் வர்ணிக்கப்பட்ட நஜிப் நாடளாவிய நிலையில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதற்கு கிடைக்கும் அவ்வளவு வாய்ப்புகளையும் மிகத் திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார். அவ்வகையில் இந்த பொது விவாதமும் ஒன்று.

ஆனால் நாட்டிற்கு அடுத்த பிரதமராவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் அன்வார் இப்படிப்பட்ட ஒருவருடன் விவாதத்தில் ஈடுபட்டது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை என பொது மக்கள் கருதுகின்றனர்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது கூட இத்தகைய மரபுதான் வழக்கத்தில் உள்ளது.

எனவே முறைப்படி பார்த்தால் அன்வார், பிரதமர் சப்ரியுடன் பொது விவாதத்தில் ஈடுபடுவதே பொருத்தமாக இருக்கும்.

இது போன்ற பொது விவாதங்கள் அதிக அளவில் நடைபெற வேண்டும் என அன்வார் உற்சாகத்துடன் கருத்துரைத்ததானது மக்களின் உணர்வுகளை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

அன்வாரும் நஜிபும் சுயநலப் போக்கில் தங்களுக்குத் தேவையான அளவு விளம்பரம் தேடிக் கொண்டார்களேத் தவிர மக்களுக்குத் தேவையான எந்த விசயமும் ஆழமாக விவாதிக்கப்படவில்லை என்பதுவே பொது மக்களின் ஆதங்கமாகும்.

நாட்டு மக்கள், குறிப்பாக பி40 தரப்பினரும் எம்40 தரப்பினரும் தற்போது எதிர்நோக்கும் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கலைவதற்குத் தேவையான விளக்கத்தையே எல்லாரும் எதிர்பார்க்கின்றனர்.

பெரும்பாலோர் சமாளிக்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசிகள் கிடுகிடுவென அன்றாடம் உயர்ந்த வண்ணமாக உள்ளன. இந்நிலை, இதுபோன்ற மேலும் மோசமான சூழலில் அவதிப்படும் இலங்கை மக்களின் துயரத்தையே ஞாபகப்படுத்துகிறது.

கொல்லைப்புற அரசாங்கம் அட்சிக்கு வந்த நாளிலிருந்து திறமையற்ற அமைச்சர்களின் அரைகுறை செயல்பாட்டினால் அவதிப்படும் தங்களுடைய அடிப்படை பிரச்சினைகள் கவனிக்கப்படாத வரையில்  வேறு எந்த விசயத்தைப் பற்றி விவாதித்தாலும் மக்களின் காதுகளில் அது விழாது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கிட்டதட்ட எல்லா அரசியல்வாதிகளும் தொகுதிகளையும் அரசாங்கத்தையும் கைப்பற்றுவதிலேயே குறியாக இருப்பது மக்கள் அறியாமல் இல்லை.

இத்தகையச் சூழலில் அநாவசியமான, பயனற்ற பொது விவாதங்கள் யாருக்குத்தான் தேவை?