கல்வி துணையமைச்சராக அரசியல்வாதி வேண்டாம்

இராகவன் கருப்பையா-  நம் நாட்டின் கல்வியமைச்சுக்கு இந்தியர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனும் அரைக்கூவல்கள் அண்மைய காலமாக வலுத்து வருகின்றன.

இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏனெனில் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படலாம் எனும் சூழல் நிலவுவதால் அமைச்சரவை மாற்றத்திற்கோ புது நியமனத்திற்கோ அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இருந்த போதிலும் தொடர்ந்து நெருக்குதல் கொடுப்பதில் தவறில்லை. இந்நாட்டில் பெரும்பாலான சமயங்களில் மறக்கப்பட்டு உதாசினப்படுத்தப்பட்டுக் கிடக்கும் நம் இனத்திற்கு தேவையான நிறைய விசயங்கள் சுலபத்தில் கிடைப்பதில்லை என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்கும் அரசாங்கம் நம் கோரிக்கையை பரிசீலிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நாம் தொடர்ந்து நெருக்குதல் கொடுக்கத்தான் வேண்டும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில் கல்வித்துறை நாட்டின் மிக முக்கியமான அமைச்சுகளில் ஒன்று என்பதால் அரசியல் சார்பற்ற, மிகுந்த தமிழ் பற்றுடைய கல்விமான் ஒருவர்தான் அப்பொறுப்புக்கு நியமனம் பெறவேண்டும். இந்தியர் ஒருவரை துணையமைச்சராக நியமிக்க வேண்டும் என நெருக்குதல் கொடுக்கும் எல்லா தரப்பினரும் இதனையும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.

அப்படி இல்லாமல் அரசியல் கட்சிகளுக்கான ஒதுக்கீட்டை நிறைவு செய்யும் நோக்கத்தில் தோழமைக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்பட்டால் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்றாகி முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும்.

நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் இந்தியர் ஒருவர் கல்வித் துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய செயல் திறனில் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் எதிர்பார்த்த அளவு திருப்தியடையவில்லை என்பதுதான் உண்மை.

அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த ம.இ.கா.வின் கமலநாதன் தமிழ் பள்ளிகளுக்காகவே பிரத்தியேகமாக நியமிக்கப்படவில்லை என்ற போதிலும் அந்த 5 ஆண்டுகளில் தனது அதிகாரத்தின் கீழ் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காக அவர் எவ்வளவோ செய்திருக்கலாம் என்பதே மக்களின் ஆதங்கமாகும்.

புதிய கட்டிடங்களுக்கு தகுதிச் சான்றிதல் பெறுவதில் சிக்கல், ஆசிரியர்கள் பற்றாக்குறை, மகவும் மோசமாக பழுதடைந்த நிலையில் பழையக் கட்டிடங்கள், முறையான கட்டிடங்கள் இல்லாமல் கொள்கலன்களில் வகுப்பறைகள், நிலங்கள் இருந்தும் புதியக் கட்டிடங்களை எழுப்புவதில் சிக்கல்கள், இப்படியாக பலதரப்பட்டப் பிரச்சினைகளை தமிழ் பள்ளிகள் நீண்ட நாள்களாகவே எதிர்நோக்கி வருகின்றன. இவையாவும் நேற்றோ இன்றோ முளைத்த புதிய பிரச்சினைகள் அல்ல.

இப்படிப்பட்டப் பிரச்சினைகளை அமைச்சின் ஆக உயர் மட்டத்தில், அதிகாரத்தில் உள்ளவர்கள் கலையவில்லை என்றால் வேறு யார்தான் தீர்ப்பது?

இது போன்ற பதவிகளுக்கு நியமனம் பெறும் அரசியல்வாதிகள் தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடுதான் செலாற்றுகின்றனர். ஆனால் கடைசி ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளில் அவர்களுடைய கவனம் இயல்பாகவே சிதறுகிறது. அடுத்து வரப்போகும் தேர்தலில் அவர்களுடைய நிலையை தற்காத்துக் கொள்வதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

எனினும் அரசியல் சார்பற்றவர்களை நியமனம் செய்வதிலும் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. பதவி சுகபோகத்தில் ‘ருசிகண்ட புனை’யாக தீடீரென அரசியலில் நுழைய முயற்சிக்கும் கசப்பான அனுபவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

முன்னாள் பிரதமர் மகாதீர் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் கல்வியமைச்சராக நியமித்த மூசா முஹமட் எனும் ஒரு கல்வியாளருக்கு திடீரென அரசியல் ஆசை வந்தது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும்.

அதே போல தற்போதைய நிதியமைச்சர் ஸஃப்ருலுக்கும் அரசியல் ஆசை பிறந்துள்ளதைப் போல் தெரிகிறது.

சி.ஐ.எம்.பி. பொருளகத்தின் முன்னாள் செயல்முறை அதிகாரியான அவரை யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நிதியமைச்சராக நியமனம் செய்தார் முன்னைய பிரதமர் முஹிடின்.

தமக்கு அரசியல் ஆசை இல்லையென்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அண்மைய காலம் வரையில் கூறி வந்த அவர் தற்போது கோலசிலாங்கூர் தொகுதியில் போட்டியிடத் தயார் செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஆக, இவற்றையெல்லாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தமிழ் மீதும் தமிழ் பள்ளிகள் மீதும் அதிக நாட்டமுடைய, திறமையான, செயல் திறன் மிக்க ஒரு கல்விமானை கல்வி துணையமைச்சராக நியமனம் செய்ய பரிந்துரைப்பதே சிறப்பு.