நான் அமைச்சராக இருந்த போது ரிம 1,100 குறைந்த பட்ச சம்பளத்தை நான் எதிர்த்ததாகவும் , இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதால் ரிம 1,500 வெள்ளிக்கு குறைந்த பட்ச சம்பளத்தை நடைமுறை படுத்த நான் அழுத்தம் கொடுப்பதாகவும் நஜிப் தன் அறிக்கை ஒன்றில் என்னைச் சாடியிருக்கிறார்.
2019 ல் குறைந்த பட்ச சம்பளம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முதலாளிமார்கள் ரிம1100 அதிகம் என்றும் தொழிலாளிகள் அந்தச் சம்பளம் போதவில்லை என்றும் சொன்னார்கள். அமைச்சராக இருந்த நான் இரு தரப்பு விவாதங்களையும் கேட்க வேண்டிய நிலையில் இருந்தேன். இறுதியில் ரிம 1,100 கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதை நிறைவேற்றவும் செய்தோம். நான் அந்த ரிம 1,100 வெள்ளி குறைந்த பட்ச சம்பளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது அன்று நிறைவேற்றப்பட்டிருக்காது .
இந்த விவரங்க்களைதான் அன்று நான் சுட்டிக்காட்டினேன். அதில் முதலாளிமார்களின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை என்னுடையது என்று பொருள்படும் வகையில் நஜிப் கூறுவது தீய நோக்கு கொண்டது. இந்த ரிம 1500 வெள்ளி குறைந்த பட்ச சம்பளம் குறித்த அவரது நிலைப்பாட்டை நஜீப் இன்னும் சொல்லவே இல்லை. அதற்குப் பதிலாகா நான் சொல்வதை வைத்து அரசியல் செய்கிறார்.
தான் எதிர் நோக்கும் சட்டச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க அவர் மேல் மக்கள் கொண்டிருக்கும் எண்ணங்களை மாற்ற நஜிப் செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உண்மையில் அடித்தட்டு மக்களின் நலன் மேல் அக்கறை கொண்டவராக நஜிப் இருப்பாரேயானால், அரசாங்கம் குறைந்த பட்ச சம்பளத்தை அறிவிக்கும் பொழுது அதனை அரசாங்க குத்தகையாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நஜிப் ஏன் இன்றுவரை வலியுறுத்தவில்லை் ?
பள்ளிகளில், மருத்துவமனைகளில் அரசாங்க இலாக்காக்களில் துப்புரவு வேலைச் செய்பவர்களுக்கும், புல் வெட்டுபவர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் குறைந்த பட்சமாக ரிம 1500 வெள்ளி கொடுக்கப்படவேண்டுமென்று அரசாங்கம் அறிவித்த பொழுது , வேலை ஒப்பந்தத்தைக் காரணம் காட்டிப் பல குத்தகையாளர்கள் சம்பளத்தை உயர்த்த மறுக்கின்றனர். இதுவரை . முதலாளிமார்களை சாடி அறிக்கை ஒன்றையும் நஜிப் வெளியிட்டதாகத்தெரியவில்லை.
என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதுதான் அவரின் அரசியல் நோக்கமாக இருக்கிறது.
அவரின் இப்போதைய போக்கைப் பார்த்தால் அவரைத் தவிர ஆளும் கட்சியிலும் , எதிர்க்கட்சியிலும் வேறு யாரும் அறிவாளிகள் திறமையானவர்கள் இல்லாதது போல ஒரு மாயையை உண்டு பண்ணித் தன் அதிமேதாவித்தனத்தை காட்ட முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது.
அடிமட்ட வர்கத்தில் இருந்து வரும் மக்களின் வலி நஜிப்பிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிறந்ததிலிருந்தே செல்வந்தராக வாழ்ந்து கொண்டு வருபவர் அவர். ஊழலில் சிக்கித் தண்டனை பெற்ற பின்னர் , அந்த ஆடம்பர வாழ்க்கையைத் தற்காத்துக்கொள்ள என்னவெல்லம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து வருபவர். நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன். உழைப்பவர் துயரத்தை உணர்ந்தவன் , அந்த அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தினரின் உயர்வுக்குப் போராடுகிறவன்.
2022ல் உள்ள நிலைமை வேறு !
மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியைப் பின் வாசல் வழியாக வந்த அரசு தனது நிர்வாகத்திறன் இன்மையால் நாட்டைப் பாழ்படுத்தி வருகிறது.
அதன் விளைவாக விலைவாசி உயர்ந்து மக்கள் இன்று அடிப்படை செலவினங்களுக்கே பணம் இன்றி அவதியுறுகிறார்கள்.
அதற்காகத்தான் குறைந்த பட்ச சம்பளத்தை ரி1500 வெள்ளியாக உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறி வருகிறேன்.
நான் அமைச்சராக இருந்த பொழுதே அடிப்படை சம்பளத்தை வருடத்திற்கு 100 வெள்ளியென படிப்படியாக உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன் அதற்கு மறுப்பு தெரிவித்தவர் மகாதீர். என்னுடைய அதிகாரிகள் முழுமையான சம்பள அறிக்கையைத் தயார் செய்து அவரிடம் சமர்ப்பித்த போது அதற்கு முதலில் ஆதரவு தர மறுத்தவரும் அவரே.
அவர் எப்பொழுதும் முதலாளிமார்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்தவர். அப்படி அது நிறைவேற்றப்பட்டிருந்தால் கடந்த மூன்றாண்டுகளில் இந்த ரிம 1500 குறைந்த பட்ச சம்பளத்தைச் சுலபமாக எட்டியிருக்கலாம். முதலாளிமார்கள்களும் அதன் தாக்கத்தைச் சமாளித்திருப்பார்கள்.
இந்த ரிம1500 ஒன்றும் மிகவும் பெரிய அளவிலான சம்பளம் இல்லை. சிங்கப்பூரில் இதைவிட மூன்று மடங்கு சம்பளம் தரப்படுவதால் நமது மக்கள் அங்குப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் என்னுடைய நிலையில் என்றுமே மாறியதில்லை . நஜிப் போன்றவர்கள் தங்களின் சுய அரசியல் நோக்கத்திற்காக விடும் அறிக்கைகளைக்கண்டு நான் அஞ்சப்போவதில்லை.
மு குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஈப்போ பாராட்