தமிழ்ப் பள்ளிகள் மதக் கல்விக்கூடங்களாக மாற கல்வியமைச்சு இடமளிக்கக் கூடாது!

கல்வியே முதன்மையென மிகச்சிறந்த முறையில் இயங்கிவரும் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் மத சாயம் பூச, இந்து சமயக் கல்வி அல்லது வகுப்புகள் நடத்த முனையும் இந்து தர்ம மாமன்றக் கோரிக்கைக்குக் கல்வி அமைச்சு துளியும் இசைவு அளிக்கக்கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகமும் கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கமும் கேட்டுக்கொண்டுள்ளன.

நேற்று, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வீ. பாலமுருகன் மற்றும் பேராக், கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ம.தமிழரண் ஆகியோர் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு தமிழ்வழிக் கல்வியாகும். தமிழ்வழிக் கல்வி என்பதில் தமிழர் அடையாளம், பண்பாடு, கலை, வாழ்வியல், வரலாறு போன்றவையே முதன்மையாக கற்பிக்க படவேண்டும். இவைகளே தமிழ்ப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு சிதையாமல் இருக்க வழிவகுக்கும். தமிழர்கள் தமிழ்ச்சமயத்தைத் தவிா்த்து பல்வேறு சமயங்களைச் சாா்ந்து விட்ட நிலையில், தமிழ்ப்பள்ளியில் சமய நிகழ்ச்சிகள் அல்லது சமய வகுப்புகள் நடத்தப்படுவது ஏற்புடையதல்ல.

அனைத்து சமயத்தினர்க்கும் மதிப்பளிக்கும் வகையில், பொதுமையில் இறையியல் கருத்தை வெளிப்படுத்தும் தமிழர் மறையான திருக்குறளில் இருக்கின்ற கடவுள் வாழ்த்தைப் பள்ளிகளில் பயன்படுத்துவதே ஏற்புடையதாகும். இதுவே தமிழர்களிடையே சமய மத அடையாளங்களைக் கடந்து ஒற்றுமையை மேலோங்கச் செய்யும்.

பெரும்பான்மையினர் என்ற காரணத்தால் தமிழ்ப்பள்ளியில் இந்துமதக் வகுப்பிற்கு இடமளிப்பதால், நாளை மற்ற மதத்தினரும் தங்கள் மதக்கல்விக்குக் கோரிக்கை வைத்தால், தமிழ்ப்பள்ளிகள் தாய்மொழிவழிப் பள்ளி எனும் அடையாளத்தை இழந்து மதவழிக் கல்விக் கற்கும் பள்ளிகளாக தோற்றமளிக்கக் கூடும் என்பதால் சமய மத வகுப்புகளை அவரவர் வழிபாட்டுத் தலங்களில் ஏற்பாடு செய்துக் கொள்வதே சாலசிறந்ததாகும்.

தமிழ்ப்பள்ளிகள் என்றென்றும் தாய்மொழிவழி கல்வி கற்கும் பாடசாலையாக விளங்குவதே சிறப்பாகும். அதுவே அறமாகும்.

உண்மையில் தமிழ்ப்பள்ளியில் தமிழர் இன வரலாற்று வகுப்புதான் தொடங்கப்பட வேண்டும். அதுவும் இந்து திராவிட அமைப்புகளை கடந்து தமிழ், தமிழர், தமிழியல் அறிவர்களின் வழிகாட்டுதலின் வழியே நடத்தப்பட வேண்டும். இதனை இந்து அமைப்புகளும் திராவிட அமைப்புகளும் பரிந்துரைக்குமா.? தமிழர் வரலாற்று வகுப்புகள் நடைபெற தொடங்கினால் தமிழர் தலைமுறைகள்  தெளிவடைந்து விடுவாா்கள் எனவும் தமிழின பகைவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் உள்ளவர்கள்தான் தமிழர் வரலாற்று வகுப்பை மறுப்பாா்கள்.

ஏற்கனவே தமிழச்சமயம், தமிழர் கோவில், தமிழர் இடுகாடு போன்ற எண்ணற்ற தமிழ் தமிழர் உரிமைகளும் அடையாளங்களும் இந்து, இந்தியர், திராவிடர் என்ற மாயையில் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு மாற்றப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் மத கொள்கைகளுக்கும் வகுப்புகளுக்கும் வழிவிட்டால், எதிா்காலத்தில் தமிழ்ப்பள்ளி இந்துப்பள்ளியாக மாற்றப்படும் என்பது உறுதி. அதற்கான விதையைதான் இந்து தர்ம மாமன்றம் போன்ற மத அமைப்புகள் விதைக்க முயல்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதனை நன்கறிந்தே, கல்வி அமைச்சு மத கல்விக்கு இசைவளிக்க மறுக்கிறது. மத அமைப்புகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அடுத்தக்கட்ட முயற்சியாக பெற்றோா் ஆசிரியர் சங்கங்களையும் அறியாமையில் இருக்கும் பெற்றோா்களையும் தூண்டிவிடும் நடவடிக்கையை இந்து தர்ம மாமன்றம் முயற்சிப்பதாக அவர்கள் வெளியிட்ட நாளிதழ் செய்தி உணர்த்துகிறது.

பெயரில் மட்டுமே தர்மத்தைக் கொண்டிருக்கும் இந்து தர்ம மாமன்றம் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளின் அறம் சாா்ந்த தோற்றத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தால், பிறப்பால் தமிழர்களாகிய நாங்கள் தமிழ்ச்சமயம், இந்து, இசுலாம், கிருத்துவம், பௌத்தம் போன்ற பல்வேறு சமயங்களைச் சாா்ந்த நடுநிலையாளர்களை ஒன்றுத் திரட்டி மாபெரும் இன பொதுமைப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.