ஆணியப் பிடுங்குவது ஒரு அமைச்சரின் வேலையா ? சரவணனுக் குலா பதில்

நான் அமைச்சராக இருந்த போது ஒரு ஆணியைக்கூட பிடுங்கவில்லை என்று மனித வள அமைச்சர் கூறுகிறார்!

எனக்கு அமைச்சர் வேலையைத் தவிர்த்து ஆணியை பிடுங்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும் என்பதை நான் அவருக்கு இந்த வேளையில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

தோட்டப் புறத்தில் பிறந்து கஷ்டங்களை  அனுபவித்து லண்டன் வரை சென்று சட்டம் பயின்றவன் நான். மாடு மேய்ப்பதிலிருந்து பால் மரம்  சீவுவது, பத்திரிக்கை  வினியோகம் செய்வது போன்ற  பல தரப்பட்ட தொழில்கள்களைச்  செய்து வாழ்க்கையில் உயர்ந்தவன்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பும் அரசியலில் வந்த பின்னும் சட்ட நுட்பம் அறிந்து நடப்பவன்.

சரவணம் எந்த அளவுக்கு கல்வித்தகுதி உடையவர் என்று எனக்குத்தெரியாது.  … அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் என்பதும் எனக்குத் தெரியாது.

டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் மனித வள அமைச்சராக  பதவி யேற்ற சில நாட்களிலேயே வசந்தம் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் என்னைப்பற்றி  புகழ்ந்து பேசினார். குலா நல்ல  பல திட்டங்களை மேற்கொண்டிருந்தார் என்றும் தொழிலாளர் நலனுக்காக பல சட்ட திருத்தங்களை மேற்கொண்டிருந்தார் என்றும் அந்த திட்டங்களை  மறவாமலும் மாற்றாமலும் தொடருவேன்  என்றும் கூறினார். பேசியதை மறந்துவிட்டாரா ?

இப்பொழுது நான் ஒரு ஆணியைக்கூட பிடுங்கவில்லை என்று கூறுகின்றார்.

“நாம் “அறவாரியம் இந்திய இளைஞர்களுக்கு மிளகாய் பயிர் செய்வதில் பயிற்சி அளித்து  அவர்களுக்கு சுயதொழில் செய்ய வழி காட்டும் ஒரு அமைப்பாக இருக்கும் என்று கூறிவிட்டு கடைசியில் அவர்கள் தலையிலேயே மிளகாய் அரைத்துவிட்டீர்கள்.

“நாம் “ திட்டத்தைக் கொண்டு இந்தியர்களுக்கு நாமம் போட்டவர்  யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

உங்களின் நிர்வாகத் திறன் இல்லை என்பதற்கும் ,  நிதி ஆளுமையில் நீங்கள் ஒரு நிபுணர் இல்லை  என்பதையும்  நிரூபிக்க அரசாங்க தலைமை கணக்காய்வாளரின் 2019 ஆண்டு அறிக்கையே  சிறந்த அத்தாட்சி  .

அந்த அறிக்கையில் 5 இடங்களை சுட்டிக்காட்டி “நாம்” இயக்கம் செய்த  கோளாருகளையும் தில்லு முல்லுகளையும்  வெட்ட வெளிச்சாமாக  குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதனால் மக்கள் பயனடைந்தார்களா இல்லையோ  ம.இ.கா வின் முக்கிய தலைவர்கள் ,சரவணனைச் சார்ந்த அடிவருடிகள் மட்டுமே  பலன் பெற்றார்கள்!

இவ்வளவு  குளருபடிகள்  இருக்கும் பட்சத்தில்  எந்த ஒரு மனசாட்சியும் இல்லாமல் என்னை ஒரு ஆணிக்கூட பிடுங்க முடியவில்லை என்று கூற சரவணனுக்கு  தார்மீக  முறையில் எந்த ஒரு  தகுதியும் இல்லை.

 

நாங்கள்  யாரையும் கோடீஸ்வர ர்களாக்குவோம் என்று பொய் சொல்லி அரசாங்கம் ஏழை இந்திய மக்களுக்கு  ஒதுக்கீடு செய்த மானியம் மற்றும் நிலங்களை அவகரித்ததில்லை, திருடியதில்லை ,ஏமாற்றியதில்லை.

பாரிசான் ஆட்சிக்காலத்தில் கட்சி சார்பாக பலர் நிதி பெற்று  பயிற்சிகள் பட்டறைகள்  , தன் முனைப்பு கூட்டங்கள் நடத்துகிறோம் என்று பெயரளவில் சொல்லி நிறைய மானியம் பெற்று வந்தனர் . எங்கள் ஆட்சி காலத்திலும்  அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொடுத்த பணம் முறையாக பயன் படுத்தப்பட்டதா ? அதற்குறிய பலனை  மக்கள்பெற்றுள்ளனரா என்று தெரியாத பட்சத்தில் அது போன்ற விண்ணப்பங்களை பாக்காத்தான் அரசு ஏற்கவில்ல.

அதற்காக நாங்கள் நிறையவே ஏச்சும் பேச்சும் வாங்கியுள்ளோம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. மக்களின்  வரிப்பணத்திற்கு  முறையான பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம் என்பதில் பாக்காத்தான் அரசு கவனமாக இருந்தது.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது  பிடுங்கிய ஆணிகளின் பட்டியல் இது ;

ஆணி 1 .உலக வரலாற்றிலேயே பெரிய அளவில் நாட்டை சூறையாடி மோசடி செய்த இரண்டு களவாணிகளை  நீதி மன்றம் ஏற வைத்து அதில் ஒருவருக்கு   தண்டனை வாங்கிக் கொடுத்ததுதான் நாங்கள் பிடுங்கிய ஆணிகளிலேயே பெரிய ஆணி

ஆணி 2.டோல் கட்டணத்தை குறைத்தது ! பெட்ரோல் விலையை குறைத்தது

ஆணி 3.கூட்டணியில் இருந்த உள் துறை அமைச்சரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் 100 நாட்களில்  3500 பேருக்கு குடியுறிமை பெற்று தந்தது  .மேலும் டிரா மலேசியாவின்  உதவி மூலம் மேலும் 350 பேருக்கு குடியுறிமை கிடைக்கச் செய்தது

ஆணி 4. சொக்சோவின் புதிய முயற்சியாக பதவியேற்ற உடனேயே  முழு மூச்சாக இறங்கி மறு வாழ்வு மையம் ஒன்றை ஈப்போவில் அமைக்க பெரும் பாடு பட்டு அதற்கான அனுமதியும் பெற்றது . இப்பொழுது சரவணன் அந்த அடிக்கல் நாட்டு விழாவை வெற்றிகரமாக செய்து முடித்த வேளையில் அதில்  குலாவின் முயற்சியை பாராட்டியதும் நினைவு கொள்ளத்தக்கது

ஆணி 5. அரசாங்கம் நடத்தும் தொழிற்பயிற்சிகூடங்களில்  இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை ஓரே ஆண்டில் 3%  இல் 10 % ஆக உயர்த்தியது.அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் சில தளர்வுகளை கொண்டுவந்தது..

ஆணி 6. சிறந்து விளங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெளி நாடுகளுக்குச்  சென்று அறிவியல் போட்டிகளில் பங்கு கொள்ள  100 இலவச  டிக்கட்டுக்களை ஏர் ஆசியாவிடமிருந்து  பெற்றுத் தந்தது

ஆணி 7. உலக நாடுகள்  தொழிற் புரட்சியை நோக்கிம் சென்றுகொண்டிருக்கும் போது  மலேசியாவும்  பின்தங்கிவிடக்கூடாது  என்ற புத்தாக்க சிந்தனையோடு தொழிற் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சு நடத்தும் தொழிற் திறன் கல்விகூடங்களில் மாலை நேர வகுப்பு நடத்தி பகலில் வேலை செய்வோர்  இரவில் தங்களின் திறனை மேம்படுத்த வாய்புக்கொடுத்தது .

ஆணி 8-கை சிப்புட்  பகுதியில் சைம் டார்பி நிறுவனத்துடன்  பேச்சுவார்த்தைகள் நடத்தி 10 ஏக்கர் நிலத்தை இலவசமாகப் பெற்று தோட்ட  தொழிலாளர்களுக்கு  வீட்டுமை திட்டத்தை கொண்டு வந்தது

ஆணி 9 -22 மாதத்தில் ஏறக்குறைய 6000 பொது மக்களை சந்தித்து பலரின் பிரச்சனைகளை தீர்த்து உள்ளோம்.

நீங்கள் பிடுங்கிய ஆணிகள்

  1. மித்ரா பணத்தை முறைகேடாக பயன்படுத்தொயது யார்? நாங்களா ? உங்கள் கட்சியைச் சார்ந்தவர்களா?
  2. வெளி நாட்டு தொழிலாளர்கள் விஷயத்தில் வங்களாதேச அரசும் , இந்தோனீசிய அரசும் உங்களை உண்மை பேசுபவர் அல்ல என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. ஒப்பந்தம் செய்து கொண்டபடி  நடக்காதவர் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியது. காலை இவர் அறிக்கை ஒன்றை விடுவார் அதனை மறுத்து ஆதரங்ககளோடு இந்தோனீசிய அரசும் வங்காள தேச  அரசாங்கமும் ஒரு மறுப்பு அறிக்கை விடும். மீண்டும் இவர் ஒரு அறிக்கை விடுவார் .இப்படியே அறிவுபூர்வமாகவும்  தர்க்க ரீதியாகவும் உண்மைகள்  பேசத்தெரியாமல்  மனம் போன போக்கில் உளறிகொண்டிருப்பவர்தான் நீங்கள்.
  3. நீங்கள் வந்தபிறகுதான் அமெரிக்க ஆள்கடத்தல்   பட்டியலில் மலேசியா 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட்து   . இவருக்கு நிர்வாகத்திறனும் அரச தந்திர வியூகமும் இருந்திருந்தால் நாட்டிற்கு இந்த நிலைமை வந்திருக்காது. வெளிநாட்டு தொழிலாளர் விவகாரத்தில் இவர் கையாண்ட விதம் நாடு இந்த நிலைமைக்கு போகக்  காரணமாய் இருக்கிறது.
  4. உங்கள் ஆட்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி வைத் திருந்த இரண்டு இந்திய பெரிய நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தால் கருப்பு பட்டியலிக்கு தள்ளப்பட்டது.
  5. ம.இ.க ஹோல்டிங்ஸ் வழி ஏழைத்தொழிலாளர்களின் பணத்தை பிடுங்கி உயர்த்திகாட்டுகிறேன் என்று கூறி எட்டி உதைத்தவர்கள் தானே நீங்கள் ! தட்டிக்கேட்க வந்ததவர்களை தடி கொண்டு விரட்டிய குழுவைச்சார்ந்தவர்கள்தானே நீங்கள்.
  6. டெலிகம்ஸ் பங்ககுகள் நினைவு இருக்கிறதா? இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை ஓரம் கட்டியவர்கள் உங்கள் கூட்டத்தைச் சார்ந்தவர்கள்தானே !

யார் எந்த ஆணியப் பிடுங்கினார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.

சரவணன் ஒரு சிறந்த தமிழ்ப் மேடைப்பேச்சாளர்  என்பதை  ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பட்டி மன்றம் போக வேண்டியவர் பாராளுமன்றதில் அமர்ந்திருப்பதுதான்  மலேசிய இந்தியர்களின் துரதிஷ்டம்.

மு குலசேகரன் -ஈப்போ பாராட்