கவனிப்பாரற்று கிடக்கும் அழகிய பிரேஸர் மலை

இராகவன் கருப்பையா- கோலாலம்பூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள பிரேஸர்ஸ் ஹில்’ எனப்படும் பிரேஸர் மலை, அமைதியான விடுமுறையைக் கழிப்பதற்கு மிகச் சிறந்த ஒரு இடம்.

குறிப்பாக ஒரு காலக் கட்டத்தில் புதுமணத் தம்பதிகள் சிக்கனமானதொரு தேன் நிலவைக் கழிப்பதற்கு அந்த இடம் ஒரு சிறந்தத் தேர்வாக இருந்தது. சுமார் 1400 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள அந்த மலைப்பகுதியின் சராசரி வெப்பக் குறியீடு 20 டிகிரியாகும்.

ஆனால் அந்த மலை தற்போது கனிசமான அளவு பொலிவிழந்து வெறிச்சோடிக்கிடப்பது வேதனையான ஒன்று.

அங்குச் செல்லும் உள்நாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை சன்னம் சன்னமாகக் குறைந்து வார இறுதி நாள்களைத் தவிர மற்ற நாள்களில் கிட்டதட்டக் கேட்பாரற்றுக் கிடப்பைதைப் போலவே உள்ளது.

அண்மைய காலமாக ‘ஹோண்டட் ஏரியா'(பேய் பிடித்தப் பகுதி) எனும் அவப் பெயரைக் கூட சுமக்க வேண்டிய பரிதாப நிலைக்கு அச் சுற்றுலாத்தளம் தள்ளப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் அங்கு பேயோ பிசாசோ ஒன்றுமில்லை. அது சில பொறுப்பற்றவர்களின் வீன் வதந்தி.

1890ஆம் ஆண்டில் லூயிஸ் ஜேம்ஸ் ஃப்ரேஸர் எனும் ஒரு ஆங்கிலேயர் அந்த இடத்தில் ஈய வளம் இருப்பதைக் கண்டுபிடித்து ஈயச் சரங்கம் ஒன்றை அங்கு நிர்மாணித்தார். அவருடையப் பெயரைக் கொண்டே அவ்விடத்திற்கு ‘பிரேஸர் மலை’ என்றும் பெயரிடப்பட்டது.

ஆனால் சுமார் இருபதே ஆண்டுகளில் ஈய வளம் அங்கு குறைந்து விட்டதால் ஈயச் சுரங்கம் முடப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் வெளியேறிவிட்டனர்.

எனினும் ஒரு சில ஆண்டுகளில் அப்பகுதி சற்று மேம்படுத்தப்பட்டு 1922ஆம் ஆண்டில் சுற்றுப் பயணிகளுக்கத் திறந்துவிடப்பட்டது.

குதிரைச் சவாரி, டென்னிஸ் மைதானம், மலையேறும் வசதி, சுவர்பந்து அரங்கம், கோல்ஃப் திடல் மற்றும் அம்பு எய்தல் மைதானம் போன்ற பலதரப்பட்ட விளையாட்டு வசதிகளும் பொழுது போக்கு அம்சங்களும் தற்போது அங்கு நிறையவே உள்ளன.

சுற்றுப் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப நூற்றுக் கணக்கான ‘ஹோம் ஸ்டே’ எனப்படும் வீடுகளும் அறைகளும் தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. உணவகங்களுக்கும் குறைவில்லை.

இவ்வளவு வசதிகள் இருந்தும் அந்த மலை கேட்பாரற்றுக்குக் கிடப்பதற்கு ஒரே காரணம் போக்குவரத்து வசதிதான் என்று நம்பப்படுகிறது.

பஹாங்கின் ரவுப் நகரில் இருந்தோ சிலாங்கூரின் கோல குபு பாருவில் இருந்தோ அங்கு செல்வதற்குக் கடக்க வேண்டிய சாலை மிகவும் குறுகலாகவும் ஆபத்து நிறைந்த, எண்ணற்ற வலைவுகளையும் கொண்டுள்ளதால் சுற்றுப் பயணிகள் அங்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

ஏறத்தாழ 38 கிலோமீட்டர் தூரத்திற்கு அச்சாலை இந்தக் கோலத்தில்தான் இருக்கிறது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது சர்வ சாதாரணமான ஒன்று. பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள சிலப் பகுதிகளில் தொழிலாளர்கள் அங்கேயே கூடாரமிட்டு சமைத்து, சாப்பிட்டு, உறங்கி, சாலைகளை பழுதுபார்க்கின்றனர்.

மற்ற சில இடங்களில் சிறிய அளவிலான நிலச் சரிவுகள் சாலையில் பாதியை முற்றாக மூடிவிடுகின்றன.

மேலும் பல இடங்களில் சாலையில் மரங்கள் அல்லது மரக் கிளைகள் விழுந்துக் கிடக்கின்றன. சில இடங்களில் முறிந்த மரக் கிளைகள் தலைக்கு மேலே அச்சமூட்டும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு ஆபத்துக்கு மத்தியிலும் வேறு வழியின்றி அச்சாலையை ஆன்றாடம் கடப்போருக்கு அது பழகிப் போன ஒன்றாகிவிட்டது.

அங்கு சிறிய மலிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் ஒரு இந்தியரும் அதைத்தான் கூறுகிறார். ‘ஆபத்துதான், ஆனால் வேறு வழியில்லையே’ என்று ஆதங்கப்படும் அவர் வாரம் ஒரு முறை தனது மோட்டார் சைக்கிளில்

கோல குபு பாரு வரையில் வந்து தனது வியாபாரத்திற்கு வேண்டிய மலிகை சாமான்களை வாங்கிச் செல்கிறார். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் யாருமே சாமான்களை மேலே கோண்டு வருவதில்லை என்றார் அவர்.

அங்கிருக்கும் ஒரே இந்திய உணவகம் வார இறுதி நாள்களில் மட்டும்தான் திறந்திருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை சுற்றுப் பயணிகள் இல்லாததால் அது மூடித்தான் கிடக்கும்.

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று மேலே இருந்த ஒரேயொரு பெட்ரோல் நிலையமும் கடந்த 2001ஆம் ஆண்டில் முடப்பட்டது. அதே ஆண்டு அம்மலைக்கான அன்றாட பேருந்துச் சேவையும் நிறுத்தப்பட்டது.

ரவுப் மாவட்ட மன்ற அலுவலகம் ஒன்று அங்கு உள்ள போதிலும் சாலை பராமரிப்பில் ஏன் இந்த மெத்தனப் போக்கு என்று தெரியவில்லை. அசம்பாவிதங்கள் ஏதாவது நடந்தப் பிறகுதான் துயிலெழுவார்களா என்றுக் கூட நினைக்கத் தோன்றுகிறது.

சாலைகளை சிறப்பாக செப்பனிட்டு பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுத்தால் அங்குள்ள வணிகர்களின் வாழ்வில் வசந்தம் வீசுவது மட்டுமின்றி ஃப்ரேஸர்ஸ் மலை மீண்டும் பழையப் பொழிவைப் பெற்று பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி பெறும் என்பதில் ஐயமே இல்லை.