இராகவன் கருப்பையா- கடந்த 60ஆம் 70ஆம் ஆண்டுகளில் குடி நுழைவு அலுவலகங்கள் மற்றும் பதிவு இலாகாக்கள் போன்ற அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியே ‘பெட்டிஷன் ரைட்டர்ஸ்’ எனப்படும் ‘மனு எழுதுபவர்’கள் செய்த தொழில் தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.
நவீன முறையில் இப்போது அத்தொழிலை செய்பவர்கள் ‘பெட்டிஷன் ரைட்டர்ஸ்’ என்று அழைக்கப்படுவதில்லை எனும் போதிலும் அவர்களுடைய சேவை ஏறத்தாழ் ஒரே மாதிரிதான்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கணினி பயன்பாடு இல்லாத காலக் கட்டத்தில் பாரங்களை பூர்த்தி செய்வது மற்றும் அதிகாரத்துவ கடிதங்களை தயார் செய்து கொடுப்பதற்கும் தங்கள் கைவசம் ஒரு சிறிய தட்டச்சுப்பொறியை வைத்துக் கொண்டு அவர்கள் தொழில் செய்த விவரம் தற்போதைய இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அரசாங்க அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு பக்கத்தில் அல்லது அருகில் உள்ள மரத்தடிதான் அவர்களுடைய அலுவலகம். ஒரு சிறிய மேஜை மற்றும் ஒரு நாற்காலி, அவ்வளவுதான்.
மூவினத்தவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும் இந்தியர்கள் சற்று அதிகமாக இருந்தனர். ஏனெனில் அக்காலத்தில் நம் சமூகத்தினர் ஆங்கிலத்தில் அதிகம் பாண்டியத்துவம் பெற்றிருந்ததுதான் அதற்குக் காரணம்.
தங்களுடைய சேவைக்கு சுமார் 5 ரிங்கிட் மட்டுமே வசூலிக்கும் அவர்கள் பாரங்களை பூர்த்தி செய்வதில் எவ்வித சிக்கலையும் நாம் எதிர்கொள்ளாத வகையில் நிறைவாக வேலையை முடித்துக் கொடுப்பார்கள்.
இந்த பாரம்பரியத் தொழில் கிட்டதட்ட அழிந்து கொண்டிருக்கும் போதிலும் ஒரு சில இடங்களில், குறிப்பாக நகர்ப் புறங்களுக்கு வெளியே இன்னமும ஓரளவு இருப்பதாகத் தெரிகிறது.
இரண்டு ஆண்டு கால கோறனி நச்சிலின் சீற்றத்திற்குப் பிறகு தற்போது வெளி நாட்டுப் பயணங்கள் பழையபடி மாமூல் நிலைக்குத் திரும்பியுள்ளதால் நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு அலுவலகங்கள் மீண்டும் பரபரப்பாகியுள்ளன.
ஆனால் வெவ்வேறு இடங்களில் மாறுபட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் கடந்த சில மாதங்களாக பொது மக்கள் அதிக அளவில் குழப்பமடைந்துள்ளனர்.
குறிப்பாக தலைநகரில் உள்ள பல குடிநுழைவு அலுவலகங்களில் கடப்பிதழுக்கான விண்ணப்பத்தை இணையம் வழி செய்ய வேண்டும். பிறகு ஒரு குறிப்பிட்டத் தேதியில் நேரடியாகச் சென்று அதனை பெற வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறையிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாரம் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றாலோ புகைப்படம் விவரக்குறிப்புக்கு ஏற்றவாறு இல்லை என்றாலோ அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதனால் அநாவசியமான கால தாமதம் ஏற்படுகிறது.
எனினும் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இத்தகையப் பிரச்சினைகள் இல்லை. இணையம் வழியான விண்ணப்ப முறை அப்போது இல்லை. குடிநுழைவு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கடப்பிதழ் கைக்கு வந்துவிடும். அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்னமும் அதே நடைமுறைதான்.
எல்லாருக்கும் சுலபமாக இருந்த நடைமுறை ஏன் மாற்றப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் நவீன ‘பெட்டிஷன் ரைட்டர்’களின் சேவைகளுக்கானத் தேவைகளுக்கு அது வழிக் கொணர்ந்துள்ளது.
குடிநுழைவு அலுவலக நுழைவாயிலுக்கு வெளியே கணினி மற்றும் புகைப்படக் கருவி உள்பட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகம் போன்ற சிறிய கூடாரம் ஒன்றை சொந்தமாக அமைத்துக் கொண்டு அவர்கள் செயல்படுகின்றனர்.
ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 20 ரிங்கிட் வசூல் செய்யும் அவர்கள் பாரத்தை நிறைவாகப் பூர்த்தி செய்து இணையம் வழி அனுப்பிவிடுகின்றனர். அதன் அத்தாட்சியை முகப்பில் சமர்ப்பித்தப் பிறகு இரண்டொரு நாள்களில் கடப்பிதழ் தயாராகிவிடுகிறது.
ஆக, சொந்தமாக விண்ணப்பம் செய்து எதிர்பாராத சிக்கல்களில் மாட்டி தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இந்த நவீன ‘பெட்டிஷன் ரைட்டர்’களிள் சேவைகளை அதிகமானோர் நாடுகின்றனர்.
எனினும் நாட்டின் இதர பகுதிகளில், குறிப்பாக சிறிய நகரங்களில் இவர்களுடைய சேவைகளுக்கானத் தேவை ஏற்படவில்லை.ஏனெனில் அங்கெல்லாம் எல்லா வயதினரும் நேரடியாகச் சென்று விண்ணப்பம் செய்யலாம். இணையம் வழி முன் கூட்டியே செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உதாரணத்திற்கு பெர்லிஸ் மாநிலத்தின் கங்ஙார் நகரில் நேரடியாகச் சென்று விண்ணப்பம் செய்பவர்களுக்கு 2 மணி நேரத்திற்குள் கடப்பிதழ் கிடைத்துவிடுகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆக, பாரம்பரிய ‘பெட்டிஷன் ரைட்டர்’களின் சேவைகள் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அத்தொழிலை நவீனமயமாக்கி செயல்பட்டுக் கொண்டிருப்போரின் சேவைகள் எவ்வளவு நாள்களுக்குத் தேவைப்படும் என்பது அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் அரசாங்க நடைமுறையைப் பொறுத்தே உள்ளது.