புத்துணர்ச்சி பெற்றுள்ள லங்காவி சுற்றுலா துறை

இராகவன் கருப்பையா – சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் கோறனி நச்சிலின் கோறத் தாண்டவத்தினால் வாழ்வாதாரம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் லங்காவி தீவும் ஒன்று.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்த்து வந்த அத்தீவு நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது  முடக்கம் கண்டு இலட்சக் கணக்கானோரின் வாழ்க்கையைப் பரிதாபகரமாகப் புரட்டிப் போட்டது.

ஆனால் தற்போது புத்துயிர் பெற்றுப் புதுப் பொழிவுடன் இயங்கும் அதன் சுற்றுலாத் துறை கிட்டத்தட்டப் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதைப் போல் தெரிகிறது.

வார இறுதி நாள்கள் மட்டுமின்றி இதர நாள்களிலும் கூட மிகவும் பரபரப்பாகக் காணப்படும் அத்தீவின் சுற்றுலாத் தளங்களில் ஆயிரக் கணக்கான சுற்றுப் பயணிகள் அலைமோதுகின்றனர்.

ஏறத்தாழ 480 சதுரக் கிலோமீட்டர் அளவுடைய லங்காவி கடந்த 1987ஆம் ஆண்டில் வரிவிலக்கு அளிக்கப்பட்ட தீவாகப் பிரகடனம் செய்யப்பட்டது ஒரு வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் அதிக அளவிலான சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்கு ‘வரி விலக்கு’ ஒரு பிரதான அம்சமாக விளங்குகிறது.

இருந்த போதிலும் கோவிட்டுக்குப் பிந்திய காலக்கட்டத்தில் உணவு வகைகளின் விலைகள் அங்குச் சற்று அதிகரித்து உள்ளன என்றே தெரிகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது இழுத்து மூடப்பட்ட தங்கும் விடுதிகளில் பல, இன்னமும் அப்படியேதான் கிடக்கின்றன. காடு மண்டி வெறிச்சோடிக் கிடக்கும் அந்தக் கட்டிடங்கள் தற்போதைக்கு மீட்சிபெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே ஒரு சில கடைத் தொகுதிகளில் நம் இனத்தவருக்கு எதிராகக் கொஞ்சம் அலட்சியப் போக்கு காட்டப்படுகிறது. அண்மையில் நம் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் காரின் மேல் அமர்ந்து மது அருந்தியது மற்றும் நீச்சல் குளத்தில் பீர் டின்களை மிதக்கவிட்டு அராஜகம் புரிந்தது போன்ற ஈனச் செயல்கள் இதற்குக் காரணமாக இருக்குமோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இதர நகரங்களைத் தவிர்த்துத் தலைநகரில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்குச் சராசரி 26 விமானப் பயணங்கள் லங்காவித் தீவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

தவிர, பினேங், கோலப் பெர்லிஸ் மற்றும் கோலக் கெடா முதலிய துறைமுகங்களில் இருந்தும் எண்ணற்ற பயணப்படகு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாண்டு மொத்தம் 2.5 மில்லியன் சுற்றுப் பயணிகளை ஈர்க்க அத்தீவு இலக்கு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இத்தகைய இலக்கைச் சிறப்பாக வகுத்துள்ள போதிலும் சுற்றுப் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது  வருந்தத்தக்க ஒன்று.

குறிப்பாக உல்லாசப் பயணப் படகு சேவைகளின் நடத்துனர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு முதலிடம் வழங்குவதை அரசாங்க அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அமலாக்க அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சூழலில் பல வேளைகளில் பல இடங்களில் ஏனோ தானோ போக்கை மிகத் தெளிவாகக் காணமுடிகிறது.

உதாரணத்திற்குப் பயணப் படகில் ஏறி அமர்ந்தவுடனேயே பாதுகாப்பு ஜேக்கட்டுகளை அணிந்து கொள்ள வகை செய்ய வேண்டும்.

ஆனால் நிலைமை அப்படியில்லை. படகு நகர்ந்தவுடன் பாதுகாப்பு ஜேக்கட்டுகள் எந்த இடத்தில் உள்ளது என்பதை மட்டும்தான் அறிவிக்கிறார்கள்.

திடீர் விபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு ஜேக்கட்டை அணிவதற்கு நிச்சயம் அவகாசம் இருக்காது. ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்ற நிலைதான் ஏற்படும்.

லங்காவி தீவின் கடல் பகுதிகளில் அடிக்கடி படகு விபத்துகள் நிகழ்வதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பாதுகாப்பு அம்சங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்விபத்துகளில் பெரும்பாலானவை அலட்சியப் போக்கின் காரணமாக நிகழ்ந்துள்ளன.

ஆக அத்தீவின் சுற்றுலாத்துறை தற்போது மீட்சியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் கொஞ்சம் சிரத்தையெடுத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாயின், வடக்கே உள்ள தாய்லாந்தின் புக்கெட் தீவைப் போல இங்கும் மேலும் அதிகமான  அயல்நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்க்க முடியும்.