கேலிக்கூத்துக்கு உள்ளான நஜிபின் சிறைத் தண்டனை

முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அடுத்தடுத்து நிகழும் அவர் தொடர்பான சம்பவங்கள் நாட்டின் சட்டத்துறையை கேலிக் கூத்தான ஒன்றாக மாற்றியுள்ளது.
‘பேசாமல் அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்’ என சினம் கொண்டுள்ள பொது மக்கள் ஆவேசமடையும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் அவருடைய வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ள காலக் கட்டத்திலேயே நீதிமன்றத்திலும் வெளியிலும் அவர் காட்டிய அலட்சியப் போக்கும் அவமதிப்புகளும் எண்ணிலடங்காது.
வழக்கை வெறுமனே தாமதப்படுத்துவதற்கு எம்மாதிரியான யுக்திகளையெல்லாம் கையாண்டு நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் அவர் அலைக்கழித்தார் என்பதை உலகறியும்.
ஆனால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அவருடைய ஆணவமும் அகங்காரமும் அடங்கவில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.
சிறை சென்ற ஓரிரு நாள்களிலேயே உடல் நலக்குறைவு எனும் அடிப்படையில் அங்கிருந்து வெளியேறிய அவர் மருத்துவமனக்கு சென்றுவிட்டார்.

அவருக்குச் சிறப்பான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்  எனப் பிரதமர் சப்ரி அறிவித்த போது மக்கள் மேலும் சினமடைந்தனர். ‘மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததற்காகச் சிறை சென்றுள்ள ஒருவருக்கு ஏன் இந்த சிறப்புச் சலுகை?’ ‘

அப்படியென்றால் மற்றவர்களுக்கு எம்மாதிரியான மருத்துவச் சலுகைகள்’, போன்ற கேள்விகளே பொது மக்களின் ஆதங்கமாக வெளிப்பட்டது.அவர் ஒரு ‘வி.ஐ.பி’ கைதியாகவும் ‘வி.ஐ.பி’ நோயாளியாகவும் நடத்தப்படுவது வெகு சன மக்களின் சினத்தைக் கிளறிக் கொண்டிருந்த வேளையில் தலைநகர் செராஸில் உள்ள எச்.யு.கே.எம். மருத்துவமனையின் புணர்வாழ்வு பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

தனது அரசியல் சகாக்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சர்வ சாதாரணமாக அவர் சந்திப்பதற்கே இந்த ஏற்பாடு என்ற சந்தேகம் எல்லாரது மனங்களிலும் இயற்கையாகவே வலுக்கத் தொடங்கியது. நீண்ட நாள்களுக்கு அவர் அங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் இரண்டே நாள்களில் அவர் சுகமாகத்தான் இருக்கிறார் என்று கூறிய மருத்துவர்கள் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பியது எதிர்பாராத ஒரு திருப்பம்.

அவர் எதிர்நோக்கியுள்ள இதர ஊழல் வழக்குகளை  சந்திப்பதற்குக் கோட்டுச் சூட்டுடன், பிரத்தியேக வாகனமொன்றில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். ஆனால் மற்றக் கைதிகளோ சிறைச்சாலை சீருடையில் அவ்விலாக்காவின் சுமையுந்தில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

இதுவும் கூட பொது மக்களின் வெறுக்கத்தக்க உணர்வுகளை தூண்டியுள்ளதை சமூக வலைத் தளங்களின் வழி காண முடிகிறது.நிலைமை இவ்வாறு இருக்க, நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் தனது பெக்கான் தொகுதிக்கு சென்று மக்களைச் சந்திப்பதற்கும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாருடைய சினத்தையும் தற்போது உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளதைப் போல் தெரிகிறது.

சிறைச்சாலை அனுமதித்தால் நாடாளுமன்றத்திற்கு அவர் வரலாம் என மக்களவை சபாநாயகர் ஆர்ட் ஹருன் அறிவித்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதற்கிடையே பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அங்குச் செல்வதற்கும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கும் வழிக் கொணரும் வகையில் வழக்குத் தொடுக்கப் போவதாக நஜிபின் வழக்கறிஞர் முஹமட் ஷாஃபி அறிவித்துள்ளார்.

இந்த ‘டிராமா’வை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கு அவர் மீது இருந்த மரியாதை, அனுதாபம் எல்லாமே குறைந்துவிட்டது

மட்டுமின்றி கோபம் அதிகரித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.தனது சிறைவாசத்தை ஒரு கேலிக் கூத்தான அத்தியாயமாக அவர் நடத்திவருவதைப் பார்த்தால் தனக்கு அரசியல் பலம் இன்னமும் இருக்கிறது என்பதை புலப்படுத்த அவர் துடிக்கிறார் என்றே தெரிகிறது.

நஜிப் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்ட போதிலும் அதே நீதி தற்போது சரமாரியாக அலைக்கழிக்கப்படுவது மிகவும் வேதனையான ஒன்று.