இராகவன் கருப்பையா – பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பாரிசான் தனது வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து ரகசியமாகவே வைத்திருக்கிறது.
தேர்தலின் போது பங்காளி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு என்பது சுலபமான காரியமில்லை. ஏனெனில் இவ்விசயத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது.
அவ்வகையில் வழக்கத்திற்கு மாறாக அம்னோவுக்கு இம்முறை கூடுதல் தலைவலி என்றே சொல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் பாரிசானுக்கு ஆதரவாக இருந்த தோழமை கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கப்படும் என இவ்வாண்டுத் தொடக்கத்தில் அறிவித்த அம்னோ தற்போது சற்றுத் தடுமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காக ஏற்கெனவே காலங்காலமாக எண்ணற்ற கட்சிகள் ஏங்கிக் கிடக்கும் பட்சத்தில் தற்போது மக்கள் முன்னேற்றக் கட்சியும் (ம.மு.க) அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மான் கொம்பு வந்தவுடன் மாட்டுக் கொம்பை மறந்த கதையாக, முன்னாள் அமைச்சர் வேதமுர்த்தியின் ம.மு.க.வுக்கு முக்கியத்துவம் கொடுக்க அம்னோ ஆர்வம் கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பக்காத்தானுடன் அணிசேர முயற்சித்த ம.மு.க.வை அந்தக் கூட்டணி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் விரக்தியடைந்து வேறு வழியின்றிப் பாரிசானுடன் ஒத்துழைக்க முடிவு செய்ததாக வேதமூர்த்தி ஏற்கெனவே கூறியிருந்தார்.
அடிமட்ட இந்தியர்களைத் தூக்கிவிடுவதற்கு நம்மிடையே இன்னமும் ஒரு தலைமைத்துவம் இல்லை. அந்த இடத்தை நிரப்பி நம் சமுதாய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருப்பதே தனது பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியச் சமுதாயம் இன்னமும் கவனிக்கப்படாமல்தான் இருக்கிறது என்பதை ஒப்பு கொண்டுள்ள அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட், ம.மு.க.வின் வழி அதற்கு நல்லதொரு தீரவுகான இயலும் என்று நம்புவதாகத் தெரிகிறது.
ம இ.கா.வுக்கு நிகராகப் பாரிசானுக்குப் பக்கத்தில் இன்னொரு இந்தியக் கட்சி இருப்பதை ஸாஹிட் விரும்புகிறார் என்று நம்பப்படுகிறது.
பக்காத்தான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த வேதமூர்த்தியின் அனுபவத்தை ஸாஹிட் அங்கீகரிப்பதால்தான் இதர தோழமைக் கட்சிகளைவிட ம.மு.க.வுக்கு அவர் முன்னுரிமை வழங்குவதாகத் தெரிகிறது.
அந்தக் கட்சியில் ஏறத்தாழ 50,000 உறுப்பினர் இருக்கிறார்கள் எனும் அம்சமும் கூட ஸாஹிட்டை ஈர்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஸாஹிட்டின் இத்தகைய நிலைப்பாட்டினால் ஐ.பி.எஃப், மக்கள் சக்தி, எம்.யு.ஐ.பி. மற்றும் கிம்மா போன்ற இதர தோழமைக் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன என்று நம்பப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று வேதமூர்த்தி வீட்டிற்கு ஸாஹிட் விருந்தினராகச் சென்ற புகைப்படங்கள் அனைத்துத் தரப்பினரின் புருவங்களையும் உயர்த்தியது. இது யாரும் எதிர்பாராத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.
ஐ.பி.எஃப். கட்சியின் விருந்திற்கோ, மக்கள் சக்தியின் தனேந்திரன் வீட்டிற்கோ, எம்.யு.ஐ.பி. கட்சியின் தலைவர் நல்ல கருப்பன் வீட்டிற்கோ ஸாஹிட் சென்றதாகத் தெரிவில்லை.
ஆனால் வேதமூர்த்திக்கு மட்டும் ஏன் அவர் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது அம்னோவின் ஒரு வியூகமா அல்லது ஓர் அரசியல் விளையாட்டா?
வேதமூர்த்தியின் அனுபவத்தையும் அவரின் அரசியல் ஈடுபாட்டையும் ஹாராப்பான் புறக்கணித்தது ஆனால் அம்னோ ஆதரிக்கிறது. இதில் ஒரு வகை முரண்பாட்டை உணரலாம்.கொள்கை அரசியலை அவமானப்படுத்தும் அளவுக்கு நமது கட்சி அரசியல் நாடகங்கள் இருக்கின்றன.