இராகவன் கருப்பையா —அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கென ‘பிரவாசி’ எனும் ஒரு மாபெரும் மாநாட்டை இந்திய அரசாங்கம் ஆண்டு தோறும் நடத்தி வருவது எல்லாரும் அறிந்த ஒன்று.
தென் ஆப்ரிக்காவில் இன பாகுபாடுகளுக்கு எதிராக போராடி வந்த இந்தியாவின் சுதந்திரத் தந்தையான மகாத்மா காந்தி, தமது தாய் நாட்டுக்குத் திரும்பிய தினமான ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி சில தினங்களுக்கு இம்மாநாடு மிகவும் விமர்சையாக நடத்தப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டின் வெவ்வேறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் தொடரில் இவ்வாண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் இம்மாநாடு நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் நம் நாட்டில் இருந்தும் ஏராளமானப் பேராளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் மலேசியாவைப் பொருத்த வரையில் எப்படிப்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ள முடியும், யார் யாருக்கெல்லாம் வாய்ப்புக் கிட்டுகிறது, சாமானியர்கள் கலந்து கொள்ள முடியுமா, பலருக்கு உல்லாச விடுமுறையாக அமைகிறதா, போன்றக் கேள்விகளுக்கு இதுவரையில் தெளிவான ஒரு விடை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் சாமிவேலு தொடங்கி ம.இ.கா. தேசியத் தலைவர்களின் தலைமையில் ஒரு பெரும் பட்டாளமே இம்மாநாட்டில் கலந்து கொள்ளும். ம.இ.கா.வினரின் ஆதிக்கம்தான் பெரிதாக இருக்கும்.
கொஞ்ச நாள்கள் கழித்து மலேசிய வர்த்தக சம்மேளனங்களைச் சேர்ந்த பலரும் பிறகு குறிப்பிட்ட சில அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
இவ்வாண்டு பார்த்தால் மனிதவள அமைச்சர் சிவகுமாரும் அவருக்கு வேண்டிய பல ஜ.செ.க.வினரும் அங்கிருக்கின்றனர். அப்படியென்றால் இம்மாநாடு அரசியல் ஆதிக்கம் கொண்ட ஒன்றா எனும் கேள்வியும் எழுகிறது.
கடந்த காலங்களில் இவ்விவகாரத்தில் ம.இ.கா. எப்படி நடந்து கொண்டதோ அதே போல்தான் இப்போது ஜ.செ.க.வும் பின்பற்றுவதைப் போல் தெரிகிறது.
இந்திய அரசாங்கம் தத்தம் தூதரகங்களின் வழி அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கிறதா, அல்லது யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாமா எனும் நிலை இருக்கிறதா என்று தெரியவில்லை.
அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே அழைத்துச் சென்றால் இத்தகைய அமைப்புகளுடன் தொடர்பு இல்லாத மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றே பொருள்படும்.
ஏராளமான தலைசிறந்த கல்விமான்களும் சமுதாயச் சிந்தனையாளர்களும், சேவை மனப்பான்மை கொண்டவர்களும் இவ்விவகாரத்தில் ஓரங்கட்டப்படுவதாகவே தெரிகிறது.
இதற்கிடையே நாட்டைப் பிரதிநிதித்து, பெரிய இடத்துச் செல்வாக்குடனும் தொடர்புகளுடனும் அங்குச் செல்லும் நமது பேராளர்களின் பங்களிப்பு இங்குள்ள மக்களுக்கு எவ்வகையில் பயனாக அமைகிறது எனும் விவரமும் தெளிவாக இல்லை.
மற்ற நாடுகளின் நிலை எப்படி என்று தெரியவில்லை. ஆனால் நமது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலருக்கு இம்மாநாடு ஒரு உல்லாச விடுமுறைக்கு தளம் அமைத்துக் கொடுக்கிறது என்றே நம்பப்படுகிறது.
இந்த பிரவாசி மாநாட்டு அழைப்பு குறித்து வினவிய போது, தலைநகரில் உள்ள இந்தியத் தூதரகம் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.