தலைமை ஆசிரியரை காரணம் காட்டி பள்ளியை புறக்கணிக்கத் திட்டம்

இராகவன் கருப்பையா – சிலாங்கூரில் உள்ள ஒரு தமிழ் பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போர்க் கோடி தூக்கியுள்ளனர்.

அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அந்த பெற்றோர்கள் அது குறித்து மேலிடத்தில் பல புகார்கள் செய்துள்ளனர். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பிள்ளைகளை ஒரு வார காலத்திற்கு பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

“இப்படி செய்தால்தான் இவ்விவகாரம் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்க்கும், அரசாங்கத்தின் நேரடிப் பார்வைக்கும் செல்லும். எங்களுக்கு வேறு வழியில்லை.”

“இதனால் பள்ளியின் நற்பெயர் கெட்டு விடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பெற்றோர் ஒரு மனதாக செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடாது. ஏனென்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஒரு வருடம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அது போல் நினைத்துக் கொள்வோம்.”

மேற்கண்டவாறு அந்த பெற்றோர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி குமுறிக் கொண்டிருக்கின்றனர். அந்த பெற்றோர்களில் கிட்டதட்ட 70 விழுக்காட்டினர் இப்பள்ளியிலேயே பயின்றவர்கள். அவர்களில் ஏராளமானோர் தற்போது சிறந்த கல்விமான்களாகவும், தொழிலதிபர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், அரசாங்கத்தில் உயர் பதவிகளிலும் இதே பள்ளியில் ஆசிரியர்களாகவும் கூட உள்ளனர்.

சுமார் 87 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில் தற்போது ஏறத்தாழ 600 மாணவர்கள் பயில்கின்றனர். சிலாங்கூர் மாநிலத்திலேயே சிறந்த அடைவு நிலையை பதிவு செய்யும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்த  இப்பள்ளியின் நிலைமை புதிய தலைமையாசிரியர் வந்தவுடன் மாறியது எனவும் பெற்றோர்கள் குறை கூறுகின்றனர்.

அடுத்த ஆண்டு முதலாம் படிவத்திற்குச் செல்ல உற்சாகமாக இருக்கும் 6ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 3 மாதங்களுக்கு தங்களுக்கு ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை போதிப்பதற்கு ஆசிரியர் இல்லாமல் பரிதவித்ததாகக் கூறப்படுகிறது. அச்சூழலை நிவர்த்தி செய்வதற்கு தலைமையாசிரியர் போதுமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

அவருடைய ஏற்பாட்டில் கடந்த நவம்பர் மாதத்தில் ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி முகாம் ஒன்றை நடத்திய அரசு சாரா இயக்கதினர் பிள்ளைகளை வரம்பு மீறி நடந்ததாகவும் அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இத்தகையக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருடன் கருத்து பறிமாற்றம் செய்ய முற்பட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரை அவர்  சாடியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர், மாநில கல்வி இலாகாவின் தலைமைச் செயலாளர், அவ்விலாகாவின் தலைமை இயக்குனர் மட்டுமின்றி கல்வியமைச்சருக்கும் கூட தாங்கள் புகார் கடிதங்களை அனுப்பியுள்ளதாக அந்தப் பெற்றோர்கள் கூறினர். மேற்கொண்டு 6 பெற்றோர்கள் காவல் துறையிலும் அவர் மீது புகார் செய்துள்ளனர்.

எனினும் இதுவரையில் அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையோ அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்வதற்கோ எம்மாதிரியான முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இந்த பள்ளி புறக்கணிப்பு நவடிக்கையை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெற்றோர்கள் கூறினர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அந்த தலைமையாசிரியருடன் தொடர்பு கொண்ட போது கருத்து எதனையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை.