ஸாஹிட்டின் சிறப்பு அதிகாரிக்காக ம.இ.கா கங்கணமா?

இராகவன் கருப்பையா –நாட்டிலுள்ள இந்திய விவகாரங்களை கவனிக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் நியமித்த ரமேஷ் ராவ் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து அப்பதவிக்கு ம.இ.கா. குறி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பாரிசானின் உறுப்புக் கட்சி எனும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையில் காலங்காலமாக பலதரப்பட்ட பதவி சுக போக வசதிகளை ம.இ.கா அனுபவித்து வந்துள்ளது எல்லாருக்கும் தெரியும்.
எனினும் அக்கூட்டணி முதல் முறையாக ஆட்சியை இழந்த போது அம்னோவோடு சேர்ந்து ம.இ.கா.வும் எதிரணியில் காலத்தைக் கடத்த வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
இருந்த போதிலும் அந்த வனவாசம் 22 மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது என்பதும் யாவரும் அறிந்த ஒன்றுதான். ஏனெனில் அதன் பிறகு முஹிடின் கொல்லைப் புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய போது அதற்கு உடந்தையாக செயல்பட்ட அம்னோவின் அழுக்குப் படிந்த வரலாற்றில் ம.இ.கா.வும் ஒரு அங்கமானது.
இப்படியாக, ‘பூவோடு சேர்ந்த நாராக’ அம்னோவோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தனது நிலையில் ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள எதிர்பாரா மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் அக்கட்சி தடுமாறுவதைப் போல் தெரிகிறது.
பக்காத்தானுடனான ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் இணைந்துள்ள போதிலும், ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும் ஒதுக்கிவிட்டு அம்னோ மட்டுமே தனியாக இணைந்துள்ளதைப் போன்ற தோற்றம்தான் நிலவுகிறது.
அவ்விரு கட்சிகளின் செயல்தான் இதற்கான முக்கியக் காரணம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. பாரிசானை விட்டுப் பிரிந்து இனவாத, மதவெறிப் பிடித்தக் கட்சிகளுடன் சோரம் போக அவர்கள் மேற்கொண்ட முயற்சியை  ஸாஹிட்  விரும்ப வில்லை.
ஆக, அரசாங்கத்தில் எவ்வித சுகத்தையும் அனுபவிக்க இயலாமல் தனித்து விடப்பட்ட சூழலில், காலியாக இருக்கும் துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரிக்கான பதவி மீது ம.இ.கா. குறி வைத்துள்ளதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சியில் உள்ள போதிலும் அமைச்சரவையிலோ வேறு அரசாங்கப் பதவிகளிலோ அங்கம் வகிக்காதது ம.இ.கா.வுக்கு முன்னுதாரணம் இல்லாத ஒரு புதிய அனுபவம்.
எனவே குறைந்த பட்சம் ரமேஷ் ராவ் விட்டுச் சென்ற  பதவியையாவது அடைய ம.இ.கா. தலைவர் ஒருவர் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆண்டாண்டு காலமாக பெரும்பாலும் ம.இ.கா. வழியாகத்தான் இந்தியர்களுக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவை அனைத்துமே இப்போது நின்றுவிட்ட நிலையில் ஏமாற்றமடைந்துள்ள அக்கட்சி இக்கட்டான ஒரு சூழலில் தடுமாறி தவிப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்தியர் பிரச்சினைகளைக் கலைய சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்படும் என மனிதவள அமைச்சர் சிவகுமார் 3 வாரங்களுக்கு முன் அறிவித்தார்.
இப்படிப்பட்ட சூழலில் துணைப் பிரதமர் தனியாக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிப்பாரா அல்லது அம்முயற்சியைக் கைவிடுவாரா என்று தெரியவில்லை.
அப்படியே அப்பதவிக்கு ம.இ.கா. தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டாலும் நம் சமூகம் எப்படி அதனை ஏற்றுக் கொள்ளும் என்பது மிகப் பெரிய கேள்விகுறிதான். ஏனெனில் ரமேஷ் ராவ் நியமனம் செய்யப்பட்ட போதே பொங்கி எழுந்த நம் சமூகத்தினர் ம.இகா. தலைவரின் நியமனத்தை  வரவேற்கவா போகிறார்கள்?
எது எப்படியோ, தேர்தல் முடிவடைந்து 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லாமே வழக்க நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் நம் இனத்தின் எதிர்காலத்திற்கு மட்டும் இன்னமும் தெளிவான வெளிச்சத்தைக் காணவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!