40 ஆண்டுகளைக் கடந்த பார்வை: தைபூசத்தை உளுக்கிய விபத்து! ~இராகவன் கருப்பையா

வழக்கமாகத் தைப்பூசம் என்றாலே இன்று வரையில் நமக்கெல்லாம் இனமறியாத ஒரு உற்சாகம் ஏற்படுவதை உள்ளூர உணர முடியும். சிலாங்கூர், பத்துமலை மட்டுமின்றி அநேகமாகப் பினேங் மாநிலத்திலும் ஈப்போவிலும் கூட இதே நிலைதான்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1983ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் பத்துமலைக்கு சென்றிருந்த எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் அப்போதைய தமிழ் ஓசை நாளிதழுக்குச் செய்தி சேகரிப்பதற்காக ஒரு இளம் பத்திரிகையாளனாக அங்கு நான் சென்றிருந்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் காலை 10 மணியளவில் மலை அடிவாரத்தின் இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையொன்றில் இடம்பெறும் பிரமுகர் உரை கிட்டதட்ட விழாவின் உச்சக் கட்டமாக இருக்கும். ஏனென்றால் தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிப்பு ஏதாவது வருமா எனும் ஏக்கம்தான் அப்போதெல்லாம்.

அன்றைய பிரமுகர் அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் அஹ்மட் ரஸாலி. மாநில சட்டமன்ற சபாநாயகர் சைடின் தம்பியும் வந்திருந்தார். பொதுப்பணி அமைச்சர் சாமிவேலு மற்றும் அவருடைய மனைவி இந்திராணி, ஆகியோரின் தலைமையில் ம.இ.கா.வைச் சேர்ந்த ஒரு பெரிய பட்டாளமே அங்கிருந்தது.

கட்சியின் அப்போதைய துணைத் தலைவரான ஊராட்சி வீடமைப்புத் துறை துணையமைச்சர் சுப்ரமணியம், அவருடைய மனைவி தீனா, உதவித் தலைவரும் சுகாதாரத் துறை துணையமைச்சருமான பத்மநாபன், அவருடைய மனைவி பிரேமா, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மஹாலிங்கம் மற்றும் கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், ஆகியோரும் அம்மேடையை அலங்கரித்திருந்தனர்.

அந்த மேடைக்கு எதிரில்தான் வழக்கமாகக் காவல் துறையினர் தங்களுடையக் கூடாரத்தை  அமைத்திருப்பார்கள். அப்போதைய சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் அழகேந்திரா அதனுள் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டங்களை நடத்துவார்.

அப்படியொரு சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய சில நிமிடங்களில் பிரமுகர்கள் மேடையில் அவர்களுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்கிவிட்டது.

கோயில் தேவஸ்தானத்தின் அப்போதையச் செயலாளர் நடராஜாவின் வரவேற்புரை முடிந்தக் கையோடு அஹ்மட் ரஸாலிக்குத் தலைவர் கோடிவேல் மாலை அணிவித்தார்.

அடுத்து சாமிவேலுவுக்கு மாலை அணிவிக்கப்டும் என நிகழ்ச்சி நெறியாளர் அறிவித்த மறுகணம் அவ்வட்டாரமே அதிரும் அளவுக்கு ‘டமார்’ எனும் ஒரு பெரிய சத்தம் அங்குக் குழுமியிருந்த அனைவரையும் உலுக்கியது. அடுத்த விநாடி அந்தப் பிரமுகர் மேடை இடிந்து சடசடவெனக் கீழே சரிந்து அங்கிருந்த எல்லாரையும் ஒரு நொடி உறையச் செய்தது.

பிரமுகர்களும், அவர்களுடைய மனைவிகளும், கோயில் நிர்வாகஸ்தர்களும், வெவேறு பக்கமாக மல்லாக்க விழுந்து, எழுவதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தனர். அங்குக் குழுமியிருந்த பக்தர்களும், எதிரே முகாமில் இருந்த காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் விரைந்துச் சென்று அவர்களுக்கு உதவினார்கள்.

சில பிரமுகர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டுக் கிடந்தனர். மேலும் பலர் ஆணிகளாலும் பிற கூரிய பொருள்களாலும் கீறப்பட்டு ரத்தம் வழியக் கிடந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த இடம் குண்டு வீசப்பட்ட ஒரு போர்க்களம் போலவே காட்சியளித்தது.

உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் 30கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  சாமிவேலு உள்பட பலர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

சுமார் 10 அடி உயரமுடைய அந்தத் தற்காலிக மேடை ஏறத்தாள 20 பேரைச் சுமக்கக்கூடிய வகையில் மரத் தூண்களாலும் ஒட்டுப் பலகைகளாலும் அமைக்கப் பட்டிருந்தது. அளவுக்கு அதிகமானோர் அதன் மேல் ஏறியதால்தான் அது உடைந்து சரிந்தது என அழகேந்திரா பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

கோயில் நிர்வாகஸ்தர்களில் ஏராளமானோர் மேலே ஏறிப் பிரமுகர்கள் அருகில் நின்று ‘போஸ்’ கொடுக்க முற்பட்ட போதுதான் எடை தாங்காமல் அது உடைந்தது எனப் பிறகு கூறப்பட்டது. அந்தச் சமயத்தில் பிரமுகர்களோடு சேர்த்து குறைந்தது 40 பேர் அதன் மேல் இருந்ததாக நம்பப்படுகிறது.

அதே இடத்தில்தான் தற்போது நிரந்தரக் கட்டிடம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. ஒட்டுப் பலகைகளாளும் மரத் தூண்களாலும் எழுப்பப்பட்ட தற்காலிக மேடையெல்லாம் காலத்தால் மறக்கப்பட்ட ஒரு சரித்திரம்.

இருந்த போதிலும் கோயில் நிர்வாகத்தினரின் கவனக்குறைவினால் விழைந்த அச்சம்பவம் மலேசிய தைப்பூச வரலாற்றில் கறை படிந்த ஒரு அத்தியாயமாகும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு சம்பவம் அங்கு நிகழ்ந்தது தற்போதைய இளையத் தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் அச்சமயத்தில் அங்கிருந்த ஊடகவியலாளர் என்ற வகையில் என் மனக் கண்களில் இன்னமும் அது ஒரு தெளிவானக் காட்சியாகவே பதிவாகியுள்ளது.