அடுத்த மாதவாக்கில் மேலும் அதிகமான செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் மலேசிய மருத்துவ சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை.
நாட்டில் தற்போது 51 பேர் செனட்டர்களாக உள்ளனர். மேலும் 19 பேருக்கான இடங்கள் காலியாக உள்ளதால் இன்னும் இரண்டொரு வாரங்களில் அவை நிரப்பப்டும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மலேசிய மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் செனட்டராக்கப்பட வேண்டும் என அதன் தலைவர் டாக்டர் முருக ராஜ் கடந்த மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாட்டின் சுகாதார முறையை மேம்படுத்துவதற்குத் தேவையான யோசனைகளையும் இதர விவகாரங்கள் குறித்தும் நேரடியாக எழுப்புவதற்கு இந்த நியமனம் ஏதுவாக இருக்கும் என அவர் கூச்சிங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த யோசனைக்குத் தாம் முழு அதரவு வழங்குவதாகக் கூறிய சரவாக் பிரதம மந்திரி அபாங் ஜொஹாரி, துணைப்பிரதமர் ஃபடிலா யூசோஃபிடமும் இதுகுறித்து பேசவிருப்பதாகக் கூறினார்.
பெரும்பாலான சமயங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அவர்களுக்கு வேண்டிய கட்சி உறுப்பினர்கள் செனட்டர்களாக நியமிக்கப்படுவது இந்நாட்டில் வழக்கமாக இருந்து வருகிறது.
பொதுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதவர்களையும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களையும் சமாதானப்படுத்தும் வகையிலும் கூட இந்நியமனங்கள் அமைவதுண்டு.
வலுக்கட்டாயமாக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் நோக்கத்தில் நாட்டின் பிரதமரும் கூடத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சிலரை செனட்டர்களாக நியமிக்கிறார்.
உள்துறை அமைச்சர் சைஃபுடின், அனைத்துலக தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் மற்றும் தொழில் முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி போன்றோரும் இப்படி நியமிக்கப்பட்டவர்கள்தான்.
ஒரு சில வேளைகளில் ‘செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக,’ மேலவைக்கு சம்பந்தமே இல்லாதவர்களும் கூட நியமனம் பெறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆக, செனட்டர்களாக நியமிக்கப்படுபவர்களில் எல்லாருமே அரசியல்வாதிகளோ சமூக சேவையாளர்களோ சிந்தனையாளர்களோ கிடையாது. கொஞ்சமும் தகுதியில்லாதவர்களுக்குக் கூடச் சில சமயங்களில் இப்பதவி கிடைக்கிறது. படிப்பறிவு குறைவானவர்களும் இவர்களில் அடங்குவர். ஆக மேலவையில் அமர்ந்திருக்கும் எல்லாருமே புத்திசாலிகள் என்றோ திறமைசாலிகள் என்றோ நாம் எண்ணிவிட முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் நாட்டு மக்களின் சுகாதார நலனை முன்வைத்து மேலவையில் நியமனம் கோரும் மலேசிய மருத்துவ சங்கத்தின் கோரிக்கை நியாயமான ஒன்றாக உள்ளதால் அதனை நிறைவேற்றுவதில் தவறே இல்லை.
கடந்த காலங்களில் பல வேளைகளில் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் மேலவைக்கு நியமனம் பெற்றிருக்கிறார்கள். எனவே எந்தக் காலக்கட்டத்திலும் மலேசிய மருத்துவ சங்கப் பிரதிநிதி ஒருவர் செனட்டராக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்வது சிறப்பாக இருக்கும்.
தகுதியும் திறமையும் இல்லாத, பொது நலனுக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதை இனிமேலாவது அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், உடனடியாக நிறுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட நியமனங்களினால் அரசாங்கத்திற்கோ பொது மக்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. சுயநல அடிப்படையில் பரிந்துரைக்கும் அரசியல் தலைவருக்கும் நியமனம் பெறுபவருக்கும் மட்டுமே அது பயனாக அமைகிறது.
புதிய அரசாங்கம் இது போன்ற முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என்றால் அதன் சீர்திருத்தக் கொள்கைகள் அர்த்தமற்ற ஒன்றாகவே கருதப்படும்.