கண்டிக்கப்படாத இனவாதம், ஒற்றுமையை சீர்குழைக்கும்   

 இராகவன் கருப்பையா – அன்மையில் ஜொகூரில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் மிகவும் அப்பட்டமாக அரங்கேற்றப்பட்ட இன பாகுபாட்டிலான ஒரு கல்வி முகாம் குறித்த செய்திகள் தற்போது நாடு தழுவிய நிலையில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எல்லாருக்கும் தெரியும்.

பள்ளிகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது புதிய விஷயம் ஒன்றுமல்ல என்பதும் காலங்காலமாக இது போன்ற நிலை இருந்து வருகிறது என்பதையும் நிறைய பேர் அறிந்துள்ளனர்.

இந்த ஜொகூர் சம்பவத்தை அப்பள்ளியின் தலைமையாசிரியர் ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை’ப் போல மூடி மறைக்கும் விதம் பாதிக்கப்பட்ட பெற்றோர் மட்டுமின்றி நாடளாவிய நிலையில் அதிக அளவிலான மலாய்க்காரர் அல்லாதாரிடையே அதிருப்தியை தூண்டியுள்ளது.

அதற்கு ஏற்றாற் போல் கல்வியமைச்சர் ஃபட்லினாவும் ‘கூத்தில் கோமாளி’யைப் போல அத்தவற்றை முடி மறைக்க எத்தனித்துள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. நடந்துள்ள தவறை, ‘தவறு’ என்று சுட்டிக்காட்டத் துணிச்சல் இல்லாமல் போய்விட்டது அவருக்கு.

இனத்துவேசத்தை தண்டிப்பதற்கு இந்நாட்டில் தெளிவான ஒரு சட்டம் இல்லையென்ற போதிலும் அதனைக் கண்டிப்பதற்கு நிறையவே வழிகள் உள்ளன. இது போன்றத் தவறுகளை கண்டிக்காமல் விட்டுவிட்டால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சீர்குழைவதற்கு அரசாங்கமே வழிவகுப்பதைப் போலாகிவிடும்.

புதிய அரசாங்கம் அமைந்து கிட்டதட்ட 2 மாதங்கள் நிறைவடையும் இவ்வேளையில் பல சம்பவங்கள் நமக்கு பழைய பக்காத்தான் அரசாங்கத்தைதான் ஞாபகப்படுத்துகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆட்சியமைத்த பக்காத்தான் கூட்டணி நடந்து கொண்ட விதம் சிறிது நாள்களிளேயே நிறைய பேருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்போதைய பிரதமர் மகாதீரின் மமதையானப் பேச்சும் பல புதிய அமைச்சர்களின் அலட்சியப் போக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏனோதான நிலைமையும் நம் நினைவிலிருந்து இன்னமும் அகலவில்லை.

ஓரளவு வெறுப்படைந்த பொது மக்கள் அடுத்தடுத்து நடைபெற்ற இடைத் தேர்தல்களில் தங்களுடைய வாக்குரிமையின் பலத்தை வெளிப்படுத்தி பக்காத்தானுக்கு தகுந்த பாடம் கற்பித்ததையும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஆனால் தற்போது பாரிசானையும் கிழக்கு மலேசியக் கூட்டணிகளையும் அரவணைத்து தனது தலைமையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ள பக்காத்தான், அதே தவறைத்தான் மீண்டும் செய்வதைப் போல் உள்ளது.

பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து மக்களுக்கு பயனளிக்கக் கூடிய நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ள அன்வார், நாட்டில் விஷக் கிருமியைப் போல் பரவிவரும் இனத்துவேசம் தொடர்பான விவகாரங்களில் மௌனமாக இருப்பது அரசியல் பலவீனம்தான்.

இருபினும், நாட்டின் நீண்டகால நல்வாழ்வுக்கு வித்திடும் வாய்ப்பும், இன-மத அரசியலுக்கு சவாலாக ஒரு சீரமைந்த மக்களாட்சியை உருவாக்கும் வாய்ப்பும் அன்வாருக்கு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுதுவதை விவேகமாக அவர் கருத வேண்டும்.