இராகவன் கருப்பையா –கோறனி நச்சிலின் கொடூரத்தால் 2 ஆண்டுகளுக்குத் தடைபட்டிருந்த தைப்பூசத் திருவிழா நாடு தழுவிய நிலையில் இவ்வாண்டு மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக சுமார் 1.5 மில்லியன் பக்தர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்த்த சிலாங்கூர் பத்துமலையில் இத்திருவிழா பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதற்கு 2,500கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஆற்றியப் பங்கு உண்மையிலேயே அளப்பரியது.
கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதம் புறப்பட்டு பத்துமலை சென்றடைந்த அந்த 20 மணி நேர, 15 கிலோமீட்டர் பயணம் மட்டுமின்றி அங்கு நடைபெற்ற 2 நாள் கொண்டாட்டங்களின் போதும் மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து வசதிகளுக்காகவும் அவர்கள் பணியாற்றிய விதம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ரதத்தோடு நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல வேளைகளில் நிம்மதி இருந்ததில்லை. மோட்டார் சைக்கிள்களில் வரும் அடாவடிக் கும்பல்களின் மிதமிஞ்சிய தொல்லைகளுக்கு அப்போதெல்லாம் அளவிருக்காது.
தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை வேகமாக முறுக்கிக் கொண்டு, பக்தர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாய் கூட்டத்தைக் கடந்து செல்லும் அவர்களுடைப் போக்கு பெரும் அச்சத்தையே ஏற்படுத்தும்.
ஆனால் அத்தகைய அராஜகத்திற்கெல்லாம் காவல்துறையினர் தற்போது ஒரு முடிவுகட்டி ரதத்துடனான பக்தர்களின் நடை பயணத்திற்கு முழுமையான பாதுகாப்பையும் நிம்மதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
அதிக அளவிலான காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டு இதனை சாத்தியமாக்கியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. போக்குவரத்து பாதுகாப்புக்கென மொத்தம் 682 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் கூறினார்.
அதே போல கோயில் வளாகத்திற்கு வெளியேயும் அருகில் உள்ள சாலையோரங்களிலும் கார் நிறுத்துவது ஒரு பெரிய போராட்டமாகவே இருந்து வந்துள்ளது.
சட்ட விரோதமாக அங்கு செயல்படும் ரவுடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு காருக்கும் 10 ரிங்கிட்டிலிருந்து 30 ரிங்கிட் வரையில் கூட வசூல் செய்த காலமெல்லாம் இப்போது கடந்துவிட்டது. பணம் கொடுக்க மறுத்தவர்களின் கார்கள் சேதப்படுத்தப்பட்டக் கதைகளும் கூட ஏராளம்.
போட்டிக் கும்பல்களுக்கிடையே கார் நிறுத்தும் ‘எல்லை’களை ஒதுக்கிக் கொள்வதில் வெட்டுக் குத்துச் சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதை பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அக்தகைய அவலங்கள் எல்லாம் இப்போது இல்லை என்பது மகிழ்ச்சியான ஒரு விடயம்.
யாருடையத் தொல்லையும் இல்லாமல் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அங்கு பணியில் இருந்த எண்ணற்ற காவல்துறையினர் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு அப்பாற்பட்டு கோயில் வளாகத்திற்கு உள்ளேயும் எங்கு பார்த்தாலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் நடமாட்டம் பக்தர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் மாநில காவல் துறையைச் சேர்ந்த மொத்தம் 1,888 அதிகாரிகள் களமிறக்கப்பட்டதாக அதன் இடைக்காலத் தலைவர் சசிகலா தேவி கூறினார்.
ஆக இப்படிப்பட்ட மேம்பாடுகளைத் தொடர்ந்து பத்துமலை தைப்பூசம் அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியை வழங்கத்தக்க ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.