இராகவன் கருப்பையா – விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ம.இ.கா.வின் நிலைப்பாடு கேள்விக்குறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர், பினேங், நெகிரி செம்பிலான், கெடா, தெரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் திருப்பங்களினால் ம.இ.கா-வின் அரசியல் ஆதிக்கம் துரும்பாகிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் எழுச்சியும் மலேசிய அரசியலின் ஜாம்பவானாகக் கருதப்பட்ட அம்னோவின் வீழ்ச்சியும் வரலாறு காணாத ஒன்று.
அதே அலையில் மூழ்கிய ம.இ.கா.வினர் சற்று பொறுமையைக் கடைபிடித்து தோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதை விடுத்து வீரவசனம் பேசி நிலைமையை மோசமாக்கிக் கொண்டார்கள்.
அரை நூற்றாண்டுக்கும் மேல் ஒதுங்க இடமளித்த அம்னோவுக்கு முரணாக, வலச்சாரிக் கட்சிகளுடன் சோரம் போக முனைந்தது மட்டுமின்றி, இந்திய சமூகத்தை எடுத்தெறிந்து பேசியது அக்கட்சியின் தலைமைத்துவம் செய்த பெரிய தவறாகும்.
நடப்பு அரசாங்கத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில், “இந்திய சமூகத்தினரின் பிரச்சினைகளை இனி நாங்கள் கவனிக்க முடியாது, எங்கள் கட்சியை மட்டுமே நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என அதன் தலைவர் விக்னேஸ்வரன் செய்த பகிரங்க அறிவிப்பானது, “சொந்தமாகவே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டதற்கு” சமமாகும்.
கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவர் செய்த இந்த அறிவிப்பினால் மீதியிருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் அக்கட்சி இழந்திருக்கக் கூடும்.
இப்படிப்பட்ட சூழலில் எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் போட்டியிட அவர்களுக்குத் தொகுதிகள் கிடைப்பது “தம்பிரான் புண்ணியம்” என்றுதான் சொல்ல வேண்டும்.
“மக்கள் பிரச்சினைகளை இனி நாங்கள் கவனிக்கமாட்டோம்” என்று பகிரங்க அறிவிப்பு செய்த ஒரு கட்சிக்கு தொகுதிகள் வழங்கப்படுவது நியாயமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அப்படியே பாவம் புண்ணியத்திற்கு ஓரிரு தொகுதிகள் கொடுக்கப்பட்டாலும் யார்தான் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் எனும் ஐயப்பாடும் நிலவுகிறது.
இந்நிலை ஒரு புறமிருக்க, பெரிக்காத்தானுக்கு ஆதரவு வழங்க சட்டப் பத்திரத்தில் கையெழுத்திட்ட ஒரு கட்சியை அம்னோ எப்படி அரவணைக்கும் என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.
இதற்கிடையே பொதுத் தேர்தலில் பெருமளவில் காயப்பட்டுள்ள அம்னோ தனது நிலைப்பாட்டை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்கு அதிகமானத் தொகுதிகள் தேவைப்படுகிறது.
கடந்த காலங்களில் எல்லா சந்தர்ப்பத்திலும் அம்னோவின் தயவில்தான் ம.இ.கா.வுக்கு தொகுதிகள் கிடைத்து வந்துள்ளது வெள்ளிடை மலை.
ஆனால் தற்போதைய இக்கட்டான சூழலில் ம.இ.கா.விடம் தொகுதிகளைக் கொடுத்து இழப்பை எதிர்நோக்குவதை விட தானே போட்டியிட்டு வெற்றி பெற அம்னோ எண்ணக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது.
எனவே இப்படி எண்ணற்ற எதிர்மறையான சூழல்கள் நிலவும் பட்சத்தில் எதன் அடிப்படையில் அம்னோவிடம் ம.இ.கா. தொகுதிகளைக் கோரும் என்பதும் கேள்வியாக உள்ளது.