செகாமாட் தேர்தல் மனு வழி மஇகா என்ன சாதிக்கும் இயலும்!

இராகவன் கருப்பையா – ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ம.இ.கா., ஜொகூர் செகாமாட் தொகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு அடாவடித்தனம் கிஞ்சிற்றும் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.

கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் மகத்தான வெற்றிபெற்ற துடிப்பு மிக்க இளைஞரான யுனேஸ்வரன் தேர்தல் குற்றங்கள் புரிந்துள்ளதாக வீண்பழி சுமத்தி அவருக்கு எதிராக ம.இ.கா. வழக்கு பதிவு செய்துள்ளது.

அவரிடம் தோல்வியடைந்த ம.இ.கா.வின் பொருளாளர்  இராமசாமி அந்த வெற்றியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தேவையில்லாத அகங்காரத்திற்கு முன்னுரிமை கொடுத்து, சுயநல வேட்கையில் வீம்புக்கென்றே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி ம.இ.கா.வினர் சற்றும் சிந்திக்கவில்லை என்றே தெரிகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள இது போன்ற இரு சம்பவங்கள் நமக்கு தகுந்த பாடத்தைக் கற்றுத் தந்துள்ளன. எனினும் சுயதல அரசியல்வாதிகள் சமூக நலனை புறம் தள்ளி தங்களுடைய சுய இலாபத்தை மட்டுமே முன்னிருத்தி மேற்கொள்ளும் இவ்வாறான வீன் விதண்டாவாதங்கள் நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பஹாங், கேமரன் மலையில் வெற்றி பெற்ற ம.இ.கா.வின் சிவராஜ் தேர்தல் குற்றங்கள் புரிந்தார் என அவரை எதிர்த்துப் போட்டிறிட்ட ஜ.செ.க.வின் மணோகரன் வழக்குத் தொடுத்தது நாம் அறிந்ததே.

குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட ம.இ.கா.வுக்கு வாய்ப்பு வழங்காத பாரிசான், அம்னோ சார்பாக பூர்வக்குடி மக்களின் பிரதிநிதி ஒருவரை களமிறக்கியது.

மீண்டும் போட்டியிட்ட மணோகரன், அவரிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நம் சமூகத்தை விட்டு அத்தொகுதி நிரந்தரமாக கை நழுவியது. கடந்த 15ஆவது பொதுத் தேர்தலின் போது கூட அத்தொகுதி ம.இ.கா.விடம் மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை. பல்லாண்டுகளாக அத்தொகுதி ம.இ.கா வின் கைவசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல கெடாவின் பாடாங் செராய் தொகுதியும் பி.கே.ஆர். கட்சியின் சார்பாக இந்தியர்களின் பாரம்பரியத் தொகுதியாக இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும் கடந்த பொதுத் தேர்தலில் அதனைத் தற்காக்கவிருந்த கருப்பையா திடீரென காலமானதைத் தொடர்ந்து சந்தர்ப்ப சூழ்நிலையில் அதுவும் கை மாறியது.

தற்போது செகாமாட்டில் எழுந்துள்ள சர்ச்சையானது இதே போன்ற ஒரு நிலையை உருவாக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லாத பட்சத்தில் இராமசாமியின் அடாவடித்தனத்தினால் நம் சமூகத்திற்கு இழப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.

ஒரு வேளை அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாட்டின் “பச்சை அலை”யை  கருத்தில் கொண்டு அன்வார் அத்தொகுதியில் யுனேஸ்வரனுக்குப் பதிலாக வேறொருவரை களமிறக்கக் கூடும். இச்சூழலில் இராமசாமிக்கும் அங்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை சற்று கவனிப்போமேயானால் யாரை அங்கு நிறுத்தினாலும் பி.கே.ஆர். அத்தொகுதியை இழக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் நிராகரிக்க முடியாது. இத்தகையதொரு நிலை உருவானால் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் ஒரு தொகுதியை அநாவசியமாக இழந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்ட ஒரு இழப்பு ஏற்பட்டால் அதற்கு இராமசாமிதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த 2 தவணைகளிலும் பி.கே.ஆர். கட்சியைப் பிரதிநிதித்து இந்திய வேட்பாளர்கள் அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அதற்கு முன் அத்தொகுதி காலங்காலமாக ம.இ.கா.வின் பாரம்பரியத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

செகாமாட் தொகுதியுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத இராமசாமி எப்படிதான் குட்டிக்கரணம் அடித்தாலும் அங்கு மீண்டும் போட்டியிடவோ வெற்றிபெறவோ வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியிருக்க ஏன் வெறுமனே குட்டையைக் குழப்ப வேண்டும் என்பதே  ஆதங்கமுமாகும்.

எனவே சமூக நலன் மட்டுமின்றி அரசாங்க நலனையும் கருத்தில் கொண்டு, ம.இ.கா. இந்த வழக்கை மீட்டுக் கொள்வது தோல்வியாகாது. மாறாக அது அக்கட்சியின் சமூக அரசியல் முதிர்ச்சியையும், இனவாத அரசியலில் பிரதிநிதித்துவம் காக்க அக்கட்சி எடுத்த ஒரு வியூக நடவடிக்கையாகவும் கருதப்படும்.