இராகவன் கருப்பையா – விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் ‘ஃபிகோஸ்'(Figos) எனும் அனைத்துலக நிறுவனத்திற்கு ‘விளம்பரத் தூதராக’ (Brand Ambassador) நியமனம் பெற்றது தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்கிறார் ‘ஃபுட்சால்'(Futsal) விளையாட்டுப் பயிற்றுனர் கீர்த்தனா.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இவ்விளையாட்டில் 24 வயதே நிரம்பிய இந்திய இளம் பெண் ஒருவர் கோலோச்சுவது உண்மையிலேயே வியக்கத்தக்க ஒன்றுதான்.யூனித்தார் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் வரைகலை வடிவமைப்பு(Graphic Design) துறையில் இறுதியாண்டு பட்டப் படிப்பை மேற்கொண்டுள்ள கீர்த்தனா சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஓட்டப்பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
பள்ளிப் பருவத்தில் இரு தடவை சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கணையாகத் தேர்வு பெற்றுள்ள அவர், பி.கே.என்.எஸ். குழுவுக்கு காற்பந்து விளையாடும் தனது அண்ணன் தேவேந்திரன் பங்கேற்கும் ஆட்டங்களை சென்று காணத் தவறியதில்லை.
காற்பந்து விளையாட்டு மீது அப்போதே ஆர்வம் துளிர்விடத் தொடங்கியதைத் தொடர்ந்து, பயிற்றுனராகும் வழிமுறைகளை வலையொளி(Youtube) வழி தீவிரமாகக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் இந்த சிங்கப்பெண்.
பிறகு பல்கலைக்கழகம் சென்றதும் அங்கு உறங்கிக் கிடந்த அதன் காற்பந்து கிளபுக்கு புத்துயிரூட்டி எழுச்சியுறச் செய்ய முணைந்த போது தொடக்கத்தில் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை.
இருந்த போதிலும் விடா முயற்சியாக பல பெண்கள் உள்பட சுமார் 60 பேரை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கிய போது துரதிர்ஷ்டவசமாக நடமாட்டக் கட்டுப்பாடு அமலாக்கம் கண்டது.
எனினும் இணையம் வழி அவர்களுக்கு இடைவிடாது பயிற்சியளித்த கீர்த்தனாவுக்கு இயல்பாகவே தலைமைத்துவ பண்புகள் இருப்பதை உணர்ந்த பலர் அவருக்கு மிகுந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஃபுட்சால் போட்டிகளையும் தொடர்ந்து ஏற்பாடு செய்துவரும் அவர் அவ்விளையாட்டின் மேன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.
அண்மையில் ஆர்.கே.எஸ். விளையாட்டு மைதானத்தில் விறுவிறுப்பாக அவர் பயிற்சியளித்த முறைகளை கண்ணுற்ற அதன் நிர்வாகம் அவருக்குத் தெரியாமலேயே அதன் படவரியில்(Instagram) பல படங்களை பதிவேற்றம் செய்துள்ளது.
சற்றும் எதிர்பாராத அந்த செயல்பாடுதான் கீர்த்தனாவின் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற ஒரு திறவுகோலாக அமைந்திருக்கிறது. ‘மலேசியாவின் ஒரே இந்திய பெண் பயிற்றுனர்’ என படவரியில் அவர்கள் குறிப்பிட்டுருந்தது ஆயிரக் கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.
அந்த பதிவேற்றத்தை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்த ‘ஃபிகோஸ்’ நிறுவனத்தின் தலைமை இயக்குனர் தெங், தன்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தன்னை வந்து சந்திப்பார் என்று கடுகளவும் தான் எதிர்பார்க்கவில்லை என்றார் கீர்த்தனா.
“தமது ‘ஃபிகோஸ்’ நிறுவனத்தின் பொருள்களுக்கு விளம்பரத் தூதராக என்னை நியமிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது என தெங் குறிப்பிட்ட போது முதலில் என்னால் நம்ப முடியலில்லை,” என்று கூறும் கீர்த்தனா அந்நிறுவனத்துடன் ஒரு ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சுப்ரமணியம் – நீலாம்பிகை தம்பதிகளின் கடைசிப் பிள்ளையான அவர், தனது தொடக்கக் கல்வியை ஷா அலாம் சுங்ஙை ரெங்காம் தமிழ் பள்ளியில் பயின்றுள்ளார். அவருடைய மூத்த சகோதரி ராஜலஷ்மி ஒரு மருத்துவராகவும் 2ஆவது சகோதரி அர்ச்சனா ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாகவும் உள்ளனர். அண்ணன் தேவேந்திரன் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.