சுய தொழில் செய்ய வேண்டும்: கடுமையாக உழைக்க வேண்டும்

இராகவன் கருப்பையா – “மகளிர் தின சிறப்புக் கட்டுரை”

இந்நாட்டில் பெரும்பாலான சமயங்களில் பல துறைகளில் நமக்கு சரி சமமான உரிமைகள் மறுக்கப்படுவதால் சுய தொழில் ஒன்றை செய்வதை விட வேறு வழியே இல்லை என்கிறார் ஜொகூர் சீனாயைச் சேர்ந்த ஷீலா மணியரசு.

“அரசாங்கத் துறையில் மட்டுமின்றி தனியார் துறையிலும் கூட நாம் ஒரு மூன்றாம் தரப்பினராகத்தான் ஒதுக்கப்படுகிறோம், உதாசினப்படுத்தப்படுகிறோம். எவ்வளவு நாள்தான் இவர்களிடம் கெஞ்சிக் கிடப்பது,” எனும் தனது ஆதங்கத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் அவர் நாட்டின் தலைசிறந்த காப்புறுதி அதிகாரியாக இப்போது மிளிர்கிறார்.

நாம் கனவில் காணும் வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால் சுய தொழில் மட்டுமே அதற்கு வழிக் கொணரும் என்று ஆணித்தரமாகக் கூறும் 51 வயதுடைய ஷீலா, கடந்த 18 ஆண்டுகளாக இத்துறையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 1,700கும் மேற்பட்டோருக்கு காப்புறுதி பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அவர் இத்துறையில் அடைந்துவரும் வெற்றிகளின் பலனாக 40 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளார்.

தான் சார்ந்துள்ள கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் சார்பாக  உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் கூட அவர் ஆற்றியுள்ள எண்ணற்ற எழுச்சி மிக்க தன்முணைப்பு உரைகளினால் நூற்றுக்கணக்கானோர், குறிப்பாக பெண்கள் பயனடைந்துள்ளனர், வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்துள்ளனர்.

எம்.டி.ஆர்.டி. எனும் ஒரு அனைத்துலக விருதை பெற்றுள்ளதன் வழி உலகின் ஆக உயரிய நிலையில் உள்ள 5 விழுக்காட்டு காப்புறுதி அதிகாரிகளைக் கொண்ட ஒரு அமைப்பில் ஷீலா அங்கத்துவம் வகிக்கிறார்.

பெர்மால் பிள்ளை, பார்வதி, தம்பதிகளின் 6 பிள்ளைகளில் 3ஆவதாகப் பிறந்த அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் 5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் கொடிய நோய்களுக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

“ஒரு வாடகைக் காரோட்டுனராக இருந்த என் தந்தை எங்களை வளர்ப்பதற்கு எவ்வாறெல்லாம் சிறமப்பட்டார் என்று நன்றாகத் தெரியும். எனவே வாழ்க்கையில் ஒரு உயரிய இடத்தை அடைய வேண்டும் எனும் வெறித்தனமான ஒரு இலட்சியத்தை அப்போதே நான் வகுத்தேன்”, என்று கூறும் ஷீலா, திருமணத்திற்குப் பிறகுதான் இத்துறையில் கால் பதித்தார். அவருடைய கணவர் மணியரசும் ஒரு காப்புறுதி நிர்வாகியாவார்.

“சுய தொழில் ஒன்றை அமைத்துக் கொண்டு, அதனையும் சிறப்பாக செய்யவில்லை என்றால் பிள்ளைகளின் கல்விக்குக் கூட நாம் சிறமப்பட வேண்டும். அரசாங்க உதவியோ உபகாரச் சம்பளமோ நம் இனத்திற்கு இன்னமும் எட்டாக் கனியாகத்தான் உள்ளது. இந்த அவல நிலையில் மாற்றங்கள் ஏற்படும் அறிகுறியை துளியளவும் காணவில்லை”, என்று கூறும் ஷீலாவின் 3 பிள்ளைகளும் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

மூத்த மகள் நாக இந்தினி முணைவர் கல்வி மேற்கொண்டுள்ள வேளையில் மகன் டினேஷ் ராவும் கடைசி மகள்  கரிஸ்மாவர்தியும் தொழில் நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பை தொடர்கின்றனர்.