கொண்டெய்னர் பள்ளியின் நிலையென்ன?

இராகவன் கருப்பையா – பகாங் மாநிலத்தில் ‘கொண்டெய்னர்’ எனும் கொள்கலனுக்குள் கல்வி பயிலும் தமிழ் பள்ளி ஒன்றின் நிலையில் இன்னமும் மாற்றமில்லை என்றுத்தெரிகிறது. இதற்கான தீர்வு யார் கையில் உள்ளது?

குவாந்தான் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி ஏறத்தாழ 26 ஆண்டுகளாக இந்த  நிலையில்தான் இயங்கிவருகிறது.

இது குறித்து கல்வித் துறை துணையமைச்சர் லிம் ஹூய் யிங்கிடம் கேட்ட போது அவரும் கூட பதில் ஏதும் கூறாமல் நழுவினார். அண்மையில் ஜ.செ.க.வைச் சேர்ந்த சில துணையமைச்சர்கள் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது இது குறித்து அவரிடம் வினவப்பட்டது.

ஆனால் அதற்கு அவர் முறையாக பதிலுரைக்காமல், தனது சிறப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு பணித்துவிட்டு இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகக் கருதாததைப் போல நழுவியது வேதனைக்குறிய ஒன்று.

 

ஜ.செ.க. தலைவர் லிம் குவான் எங்கின் தங்கையான லிம் ஹூய் யிங் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாண்டுகளாக இப்படிப்பட்ட ஒரு அலட்சியப் போக்கினால்தான் அந்தப் பள்ளிக்கூடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் நினைத்தால் நொடிப் பொழுதில் இதற்கு தீரவு கண்டுவிடலாம்.

‘பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல’ அரசாங்க அதிகாரிகள் அப்பள்ளிக்கு அவ்வப்போது வந்து போகின்றனர். ஆனால் சுயமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கான முன்னெடுப்புகளைத்தான் காணவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் கல்வித்துறை துணையமைச்சராக இருந்த ம.இ.கா.வின் கமலநாதனுக்கும் பிறகு பக்காத்தான் ஆட்சியின் போது அதன் துணையமைச்சராக தியோ நீ சிங்கிற்கும் கூட இது குறித்து நன்றாகவேத் தெரியும். ஆனால் அவர்கள் செய்த அறிவிப்புகள் எல்லாமே வெறும் வெற்று வாக்குறுதிகள்தான் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

அண்மையில் கூட சில அரசு அதிகாரிகள் இப்பள்ளிக்கு வருகை மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஆனாலும் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கையில் அதில் மன எழுச்சி அடைய ஒன்றுமில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த 1957ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளிக்கூடம் நாளடைவில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப அரசாங்கத்தால் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்தது.

அபோது ‘தற்காலித்திற்கு’ எனும் அடிப்படையில் பிள்ளைகள் கொள்கலனுக்கு மாற்றப்பட்டனர். அந்த தற்காலிகம்தான் இப்போது 26 ஆண்டுகளைக் கடந்து இலக்கில்லாமல போய்க் கொண்டிருக்கிறது.

புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்நிலத்தில் இன்று வரையில் ஒரு துரும்பு கூட எழவில்லை எனும் அவலம் அரசாங்கத்திற்கும் தெரியாமல் இல்லை.

கட்டுமானம் தொடங்குவதற்கு முன் குத்தகையாளருக்கு ஏதோ பிரச்சினை வந்துவிட்டதால் அதோடு அவரைக் காணவில்லை என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு அந்த விஷயம் தொடர்பாக தீவிர முன்னெடுப்பு எதுவுமே இல்லை.இப்பள்ளி சார்பாக மலாக்க முத்துகிரிஷ்ணனின் 2019-ஆண்டில் பதிவு செய்த தகவல்களை இங்கே காணலாம்.  http://ksmuthukrishnan.blogspot.com/2019/11/blog-post_29.html