நஜிபை விடுவிக்க கோருவது அநாவசியமான ஆர்ப்பரிப்பு

இராகவன் கருப்பையா- ஊழல் குற்றங்களுக்காக 12 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிபை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அவர் குற்றவாளிதான் என நாட்டின் எல்லா நிலைகளிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ள சூழலில் அவருக்கு தற்போது இருக்கும் ஒரே வழி பேரரசரின் மன்னிப்பு மட்டுமே.

ஆனால் அவரை விடுவிப்பதற்கு குறிப்பிட்ட ஒரு சாரார் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டி வருகின்றனர் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதன் வழி தேவையில்லாத அவப்பெயர் ஏற்படுவதைப் பற்றி இவர்கள் கிஞ்சிற்றும் வருத்தப்படுவதாகவும் இல்லை என்றே தோன்றுகிறது.

நஜிப் புரிந்ததாகக் கூறப்படும் பல்வேறு ஊழல் குற்றங்களில் ஒரு வழக்கில் மட்டும்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீதான இன்னும் சில வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் உள்ளன.

அவர் உலக மகா திருடன் என அமெரிக்க நீதித்துறை மட்டுமின்றி மேலும் பல நாடுகளும் அடையாளப்படுத்தியுள்ளன. அதற்கு ஏற்றவாறு மலேசிய நீதித்துறையும் அதன் கடமையை செவ்வனே ஆற்றியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என அம்னோ உச்சமன்றம் விடுத்து வரும் தீவிர அரைக்கூவல் முற்றிலும் அறிவிலித்தனமான ஒன்றாகவே தெரிகிறது.

அப்படியென்றால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற அவருடைய வழக்கில் சம்பந்தப்பட்ட எண்ணற்ற வழக்கறிஞர்களின் பொன்னான நேரத்திற்கும் மில்லியன் கணக்கில் செலவான மக்களின் வரிப்பணத்திற்கும் என்ன மதிப்பு எனும் கேள்வியும் எழுகிறது.

நீதி என்பது எல்லாருக்கும் சரி சமமான ஒன்றுதானே! நஜிப் மட்டும் விதிவிலக்கா என்ன? ஏன் அவர் மட்டும் விசேஷமான சலுகையை அனுபவிக்க வேண்டும்? “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” எனும் திருவிளையாடல் பட வசனம்தான் இத்தருணத்தில் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

அம்னோ, ஊழல்வாதிகள் மலிந்து கிடக்கும் ஒரு கட்சி என காலங்காலமாக முத்திரைக் குத்தப்பட்டு கேவலமான ஒரு அவப்பெயரை சுமந்து வந்துள்ளது. அதற்கு ஏற்றாற் போல கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அம்னோவைச் சேர்ந்த பல தலைவர்கள் சரமாரியாக கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டனர்.

அதன் பயனாகத்தான் நஜிப் தண்டிக்கப்பட்டார், துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் உள்பட மேலும் பலரின் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனினும் கடந்த 2020ஆம் ஆண்டில் முஹிடினின் கொல்லைப் புற அரசாங்கத்தில் இணைந்ததில் இருந்தும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு அங்கமாக பொறுப்பேற்றப் பிறகும் அக்கட்சியினர் சற்று அடங்கியிருப்பதைப் போல் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நஜிப்  விடுவிக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் உச்சமன்றம் அரைக்கூவல் விடுத்தால் ஊழலை அவர்கள் அங்கீகரிப்பதைப்  போல் அல்லவா உள்ளது!

அது மட்டுமின்றி ஊழல்வாதிகளுக்கு அது ஒரு திறவுகோல் மாதிரி அமைந்துவிடும் என்றும் உறுதியாகச் சொல்லலாம். நீதிமன்றம் எப்படிதான் தண்டித்தாலும் மன்னிப்புக் கோருவதற்குதான் ஒரு கூட்டம் இருக்கிறதே எனும் துணிச்சலில் ஊழல்வாதிகள் தங்களுடைய கைவரிசையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.

எனவே நஜிப் தனது சிறைத் தண்டனையை சட்டவிதிகளுக்கு ஏற்ப முழுமையாக அனுபவிப்பதுதான் அக்கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது. அப்படியொரு நிலைப்பாடு உருவாகினால்தான் இதர மேகா ஊழல்வாதிகளுக்கு அது ஒரு படிப்பினையாக அமையும்.

ஊழலின் பின்னணியில் ‘கழுதைத் தேய்ந்து கட்டெரும்பானக் கதை’யாக வலுவிழந்துக் கிடக்கும் அக்கட்சிக்கு இம்முயற்சி தேவையே இல்லாத ஒரு அநாவசியமான ஆர்ப்பரிப்பு என்பதில் ஐயமில்லை. நஜிப் மீதான அன்பை வெளிக்காட்டுவதற்கு இதுவல்லை முறை.

மேலும், ஊழலை முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டும் எனும் பிரதமர் அன்வாரின் அயராத வேட்கைக்கு இது ஒரு பின்னடைவாகவும் அமைந்துவிடும் என்பது தின்னம்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, கருப்பின விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம்  அனுபவித்த முன்னாள் தென் ஆப்ரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவைப் போலவோ நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி பல முறை சிறை சென்ற இந்திய சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியின் தியாகத்தைப் போலவோ இல்லை நஜிபின் நிலை.

மக்கள் பணத்தைக் கண்ணாபின்னமாகக் களவாடியதற்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பதை அனைத்துத் தரப்பினரும் மிகத் தெளிவாக உணர வேண்டியது அவசியமாகும்.