இராகவன் கருப்பையா – ‘அட்சய திருதியை’ எனும் ஒரு தினத்தன்று யாருக்காவது, குறிப்பாக தேவைப்படுவோருக்கு அன்னமிட்டு தானம் செய்தால் அது ஒரு புண்ணியச் செயல் மட்டுமின்றி வீட்டில் அன்னத்திற்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்.
‘அட்சயம்’ என்றால் ‘வளர்தல்’ என்று பொருள்படும். ‘திருதியை’ என்பது இந்து காலக் கணிப்பில் 15 நாள்களுக்கு ஒரு தடவை சுழல் முறையில் வரும் ஒரு தினம் என்று சொல்லப்படுகிறது. இந்த ‘அட்சய திருதியை’ எனும் தினம் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வருகிறது.
மங்களகரமாகப் போற்றி கொண்டாடப்பட வேண்டிய இந்த தினம் இப்போது அடைந்துள்ள பரிணாமத்தைப் பார்க்கப் போனால் பேரதிர்ச்சிதான் எற்படுகிறது.
எத்தகைய நோக்கத்திற்காக நமது முன்னோர்களால் இக்கொண்டாட்டம் தொடங்கப்பட்டதோ அதனை இப்போது முற்றாக மறந்து அல்லது மறைக்கப்பட்டு வரம்பு மீறி ஒரு வியாபார யுக்தியாக்கப்பட்டுள்ளது வேதனையான விஷயம்.
வசதி குறைந்தோருக்கு நேரம் காலம் பார்க்காமல் உதவ வேண்டும் அல்லது அன்னமிடவேண்டும் என்பதுவே மனிதநேயம் எனும் போதிலும் இந்த ஒரு தினம் கட்டாயமாக ஒதுக்கப்பட்டது தவறில்லை.
எனினும் அன்னமிடும் நடைமுறை காலப் போக்கில் மறைந்து, அட்சய திருதியை தினத்தன்று தங்கம் உள்பட எந்தப் பொருளை வாங்கினாலும் அப்பொருள் குடும்பத்தில் அதிக அளவில் செழிக்கும் என்று அர்த்த மாற்றம் கண்டது.
ஆனால் நகை வியாபாரிகள் அதனை மேலும் ஒரு படி உயர்த்தி, “தங்க ஆபரணங்கள் வாங்கினால் வீட்டில் தங்கம் செழிக்கும்” என்று தங்களுக்கு ஏற்றவாறு சாதகமாக அதனை மாற்றிவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கம் தமிழகத்தில் மட்டுமின்றி தற்போது நம் நாட்டிலும் ஒரு தொற்று நோயைப் போல பரவி பலரையும் வாட்டி வதைப்பதாகத் தெரிகிறது.
பணமிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தங்க ஆபரணங்களை வாங்கலாம் எனும் நிலைக்கு அப்பாற்பட்டு அட்சய திருதியை தினத்தன்று நகை வாங்கினால் மட்டுமே வீட்டில் தங்கம் செழிக்கும் எனும் ஒரு மூட நம்பிக்கைக்கு ஆட்பட்டு ஒரு சிலர் அடங்கா ஆசையில் சிக்குண்டு கிடக்கின்றனர்.
அப்படிப்பட்டோரில் பண வசதி இல்லாத சிலர் கடன் வாங்கி நகை வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது.
அட்சய திருதியை தினத்தன்று தங்களுடைய நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதும் என்றும் நெரிசலை சமாளிப்பதற்கு சில நாள்களுக்கு முன்னாடியே வந்து முன்பதிவு செய்துவிடுங்கள் எனவும் நகைக் கடைகள் விளம்பரம் செய்து அப்பாவி மக்களை ஈர்ப்பதைப் பார்க்க வேடிக்கையாவே உள்ளது.
இத்தகைய போலியான மாயைகளுக்கு மயங்கி தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.
உழைப்புக்கும் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை வழி நடத்திச் சென்றால் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை நம் சமூகம் உணரவேண்டும்.