ம.இ.கா. இருக்குமா, இருக்காதா?

இராகவன் கருப்பையா – ஒரு காலத்தில் மலேசிய இந்தியர்களின் அரணாக விளங்கிய ம.இ.கா. கடந்த சுமார் 15 ஆண்டுகளாக ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக வலுவிழந்து சுருங்கிப் போனது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலிலும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலிலும் அக்கட்சியின் அடைவு நிலை மேலும் மோசமாகி கிட்டதட்ட முற்றாக துடைத்தொழிக்கப்பட்டது வருந்தத் தக்க ஒன்றுதான்.

இந்நிலையில் நம் சமூகத்தின் ஆதரவை கொஞ்சமாவது மீட்டெடுக்க எம்மாதிரியான சீர்திருத்தங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது என்று பார்க்கப் போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பொதுத் தேர்தல் நடந்தேறி ஏறத்தாழ் 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மக்களின் கவனத்தை, குறிப்பாக அக்கட்சி மீதான நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான எதனையுமே அவர்கள் செய்யவில்லை என்றுதான் தெரிகிறது.

புதிய ஆட்சியின் கீழ் அரசாங்க பதவிகளில் அமர்வதற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனும் ஆதங்கம் மட்டுமே வெளிப்படுகிறதே தவிர நம் சமூகத்திற்கு, குறிப்பாக பி40 தரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புகள் எதனையும் காணவில்லை.

அரசாங்க பதவிகளில் இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என சாக்குப் போக்குக் கூறுவதெல்லாம் அறிவிலித்தனம். ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதே ஒரு சாதகமான சூழல்தான் என்பதை அக்கட்சியினர் உணர வேண்டும்.

தலைநகர் ‘பத்து’ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ‘அடையாள ஆவனங்கள்’ தொடர்பான ஒரு முகாமை தமது வட்டாரத்தில் அண்மையில்  நடத்தினார். அதாவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களை பதிவு செய்யும் மாபெரும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்.

அவருடையத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியிலிருந்தும் மிக அதிகமானோர் இந்திகழ்வில் பங்கேற்றது எதிர்பாராத ஒன்று. முப்பது வயது கூட நிரம்பாத ஒரு தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யும் சேவைகளைக் கூட பணபலம், ஆள்பலம் என பல வகையிலும் சகல வசதிகளையும் கொண்ட ஒரு கட்சி மேற்கொள்ளத் தவறுவது ஏன் எனும் கேள்வி எழவே செய்கிறது.

நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள, அடையாள ஆவனங்கள் தொடர்பான விவகாரங்கள் நம் சமூகத்தை பல்லாண்டுகளாக வருடிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை. இதனை கையிலெடுத்தால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம்.

“ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காததால் நம் சமூகத்தின் பிரச்சினைகளை நாங்கள் இனி கவனிக்மாட்டோம். கட்சி நலன்களில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துவோம்”, என அதன் தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் செய்த பிகிரங்க அறிவிப்பு மெய்பிக்கப்படுவதைப் போல்தான் உள்ளது அவர்களுடைய போக்கு.

இதற்கிடையே அக்கட்சியின் தேசிய பொருளாளர் இராமசாமி எடக்கு மடக்காக செய்யும் காரியங்கள் நம் சமூகத்திற்கு ஒரு பின்னடைவு என்பது மட்டுமின்றி கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் ஜொகூரின் செகாமாட் தொகுதியில் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர் யுனேஸ்வரனிடம் படுதோல்வியடைந்த அவர் தேர்தல் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடுத்தது எல்லாரும் தெரியும். அவ்வழக்கில் தோல்வியடைந்த அவர் தற்போது மேல் முறையீடு செய்துள்ளதுதான் வேடிக்கை.

எதிர்பாராத வகையில் நீதிமன்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டால் ஆளும் கூட்டணிக்கு மட்டுமின்றி இந்தியர்களுக்கும் அது ஒரு பேரிழப்பாக அமைந்துவிடும். நீதிமன்றம் அதொகுதியை இராமசாமியிடம் இலவசமாக ஒப்படைக்கப் போவதிலை.

இடைத்தேர்தல் நடக்குமேயானால் அநேகமாக அத்தொகுதி பெர்சத்து அல்லது பாஸ் கட்சியிடம் கைமாறக்கூடிய வாய்ப்புதான் அதிகமாக உள்ளது. ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு பேரிடியாகவும் அது அமையக்கூடும். இதனைதான் இராமசாமி விரும்புகிறாறா எனும் கேள்வியும் எழுகிறது.

ம.இ.கா. ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதி என்பது இராசாமிக்கு தெரியாதா என்ன? எப்படி கரணம் போட்டாலும் அத்தொகுதி இராமசாமிக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் அன்வாரை விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார். நிச்சயம் பயனான விஷயங்கள் பற்றிதான் பேசியிருப்பார்கள். ஆனால் செகாமாட் தொகுயில் ம.இ.கா.வின் போக்கு பி.கே.ஆர். கட்சியை முதுகில் குத்துவதைப் போலல்லவா இருக்கிறது!

ஆக ம.இ.கா. இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி இழந்த புகழை மீண்டும பெறுவதற்கான முயற்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர நம் சமூகத்தின் சினத்தை மேலும் அள்ளிக் கொட்டிக் கொள்ளக் கூடாது.