முதியோர் இல்லம் என்பது ஒரு வழி பயணம்தானா?

இராகவன் கருப்பையா – அண்மையில் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய நாம் இன்னும் சில வாரங்களில் தந்தையர் தினத்தையும் கொண்டாடவிருக்கிறோம். அதே நேரத்தில் 2018-2022 வரையில் 2,144 முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களில் அடைக்கலம் பெற்றனர் என்கிறது 21.7.2022-இல் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தகவல்.

நம்மை ஈன்றெடுத்து வளர்த்து பெரியவர்களாக்கிய பெற்றோர் தினந்தோறும் போற்றப்பட வேண்டியவர்கள் எனும் போதிலும் நிறைய பேருக்கு மே, ஜூன் மாதங்களில் வரும் இவ்விரு தினங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது வேதனையான விஷயம்.

அன்றைய தினங்களில் மட்டுமே அவர்களை ஆரத் தழுவி முத்தமிட்டு, தம்படம் எடுத்து, அணிச்சல் வெட்டி, முகநூலில் பதிவேற்றம் செய்து ஒப்புக்கு சப்பாணியைப் போல பெருமை பீத்திக் கொள்ளும் கூட்டம்தான் இப்போது நிறைய உள்ளது.

அதைவிட கேவலம் வேண்டாத பொருளை குப்பையில் வீசுவதை போல, தங்களை பாராட்டி சீராட்டி வளர்த்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு மறந்துவிடும் பாவப்பட்ட ஜென்மங்களின் ஈனச் செயல். அவ்வாறு செய்வது சமீப காலமாக நிறைய பேருக்கு நவீன வாழ்க்கையின் ஒரு நடைமுறையாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் அப்படி சேர்க்கப்படும் பெற்றோர்களுக்கு ஏறக்குறைய அது ஒரு, ஒருவழிப் பயணமாகவே அமைந்துவிடுகிறது.

பெரும்பாலான சமயங்களில், சிறிது நாள்களுக்கு அங்கு இருக்கட்டும் என்று சொல்லித்தான் அவர்கள் முதிறோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களிடமும் அவ்வாறே சொல்லப்படுகிறது. அதாவது, “கொஞ்ச நாளுக்கு இங்க இருங்க, பிறகு வந்து நான் கூட்டிட்டு போறேன்,” என்று அவர்களிடம் கூறப்படுகிறது.

ஆனால் நம் நினைவுக்கு எட்டியவரையில் அப்படி அனுப்பப்படுவோரில் யாருமே மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக சரித்திரமே இல்லை. அத்தகைய அவலத்திற்கு உள்ளாகும் பெற்றோருக்கு அந்த ஏற்பாடு, ஓருவழிப் பயணம் என்பதுதான் நிதர்சனம்.

“இப்போது என் வீட்டில் வசதி உள்ளது,” அல்லது “பெற்றோரை கவனித்துக் கொள்ள பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளேன்,”என்று கூறி எந்தப் பிள்ளையும் அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை.

அவ்வப்போது அவர்களை சென்று காண்பதற்குக் கூட  நிறைய பிள்ளைகளுக்கு நேரம் இருப்பதில்லை. மரணச் செய்தி வந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர், அவ்வளவுதான்.

மேலும் சிலர் அத்தகைய முதியோர் இல்லங்களை அசிங்கமாகக் கருதி தங்களுடைய பிள்ளைகளைக் கூட அங்கு அழைத்துச் செல்வதில்லை. பேரப் பிள்ளைகளைக் காணத் துடிக்கும் முதியோரின் உள்ளக்கிடக்கையும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் ரண வலியையும் இந்தப் பிள்ளைகள் உணர்வதில்லை அல்லது கண்டு கொள்வதில்லை.

இதில் வேடிக்கையான ஒரு விஷயம் என்னவென்றால், “என் அம்மா அங்கு சந்தோசமாக இருக்கிறார், அவருக்கு நன்றாகப் பொழுது போகிறது,” அல்லது “என் தந்தைக்கு அங்கு நிறைய கூட்டாலிகள் உள்ளார்கள், அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்,” என்று ஏறக்குறைய எல்லாருமே ஒரே மாதிரி சுயமாகவே தம்பட்டம் அடித்துக் கொள்வர் – ஏதோ பெரிய சாதனை புரிந்துவிட்ட மாதிரி!

அவர்கள் அங்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா என்று அவர்களைக் கேடடால்தான் தெரியும். “இதுதான் என் தலைவிதி” என்று எண்ணி பெரும்பாலோர் செயற்கையான மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு தங்களுடைய அந்திம காலத்தை அங்கு கழிக்கின்றனர் என்பதுதான் உண்மை.

அண்மையில் தலைநகரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்:

அறு பிள்ளைகளுக்குத் தந்தையான ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க ஊழியர் தமது 65ஆவது வயதில் கிளேங்கில் உள்ள மூதியோர் இல்லமொன்றில் சில ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்டார்.

அவருடைய 4 மகன்களும் 2 மகள்களும் வசதியாக வாழ்கிற போதிலும் அவரை வீட்டில் வைத்து கவனிக்க ஒரு நாதியில்லை. அவர் நோயுற்றிருந்த போதும் கூட அவரை சென்று பார்க்க அவர்களுக்கு அவகாசம் இல்லை.

மரணச் செய்தி வந்தவுடன் யார் வீட்டில் ஈமச் சடங்குகளை செய்வது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு ‘குட்டி பட்டிமன்றம்’ நடந்தேறியது.

“நம்ம வீட்ல வேண்டாங்க, இப்பதான் நிறைய செலவு செஞ்சி வீட்ட ‘ரெனொவெட்’ பண்ணியிருக்கிறோம்,” என்று மூத்த மறுமகள் கூற, மகனுக்கு அது சரியாகவே பட்டது.

“என் வீட்ல அப்பா தங்கியதே இல்ல, அதனால இங்கு வேண்டாம்,” என இரண்டாவது மகன் ஒதுங்கினார். “ஈமச் சடங்குகளுக்குப் பிறகு என் வீட்ட சுத்தம் செய்ய ஆளில்ல,” என்றார் மூன்றாவது மகன்.

“அப்பாவோட ‘போடிய’ என் வீட்டுக்கு கொண்டு வர என் ‘வைஃப்’ ஒரு போதும் ஒத்துக் கொள்ளமாட்டார்,” என சின்ன மகன் கூறிவிட்டார்.

கடைசியில் தேவாலயம் ஒன்றில் உள்ள ஈமச் சடங்கு மண்டபத்தில் உடல் கிடத்தி வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு அனாதை பிணம் அந்தஸ்துதான் வழங்கப்பட்டது என்றால் அது மிகையில்லை. நாற்பது நாள்கள் கழித்து பிரார்த்தனைகள் கூட அங்கேயேதான் செய்யப்பட்டன.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் ஒருவர் மரணமடைந்தவுடன் அவருடைய உடல் பிள்ளைகளுக்கு தீண்டத்தகாத ஒரு ‘பொருளாகி’விடுகிறது. உயிரோடு இருந்த போதே வேண்டாத ‘பொருளாகி’விட்ட அவருடைய நிலை இறந்த பிறகு மட்டும் மாறுமா என்ன?

ஆக இதுதான் நம் சமூகத்தின் யதார்த்தமா? அன்னையர் தினத்தையும் தந்தையர் தினத்தையும் ஊர் மெச்சிக்க கோலாகலமாகக் கொண்டாடும் பிள்ளைகள் இந்த அவலத்தை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.